11 Dec 2008

உயர் குருதி அழுத்தமா ? சமையலறைக்கு ஓடுங்கள்

உயர் குருதி அழுத்தம் இருக்கிறதா ?

கவலை வேண்டாம் தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும்.

இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று. பழங் காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது தான் நமது பாட்டி வைத்தியம்.

இப்போது அது மருத்துவ அங்கீகார முலாம் பூசப்பட்டு அறிவியல் அறிக்கையாக வந்திருக்கிறது.

பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனத்துக்குக் குட்டு வைத்திருக்கிறது இந்த ஆராய்ச்சி என்று கூட சொல்லலாம்.

இன்றைக்கு வினியோகிக்கப்படும் உயர் குருதி அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட அதிக பலனளிக்கக் கூடியது இந்த பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத் தக்கது.

உலகெங்கும் பல கோடி பேர் மிகச் சாதாரணமாகப் பாதிப்புக்கு உள்ளாகும் நோய் உயர் குருதி அழுத்தம். உயிருக்கே கூட உலை வைக்கும் இந்த நோயை பெரும்பாலானோர் ஒரு பொருட்டாகக் கூட எண்ணுவதில்லை என்பது தான் உறைய வைக்கும் உண்மை.

ஆஸ்திரேலியாவில் நடந்த இந்த விரிவான ஆராய்ச்சி சுமார் ஐந்து மாத காலம் தொடர்ச்சியாக நடந்திருக்கிறது. பல்வேறு உலக ஆய்வுகளின் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவாகத் தான் பூண்டு, பல உயர் குருதி மாத்திரைகளை விட வலிமை வாய்ந்தது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் முதுகெலும்பான மருத்துவர் கேரின் ரெய்ட் இதைக் குறித்துக் கூறுகையில், உயர் குருதி அழுத்தத்தை மருந்துகளால் குணப்படுத்த முடியுமோ இல்லையோ, பூண்டின் மூலம் குணப்படுத்திவிடலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

உயர் குருதி அழுத்தமா ? இனிமேல் மருத்துவமனைகளை நோக்கி ஓடாமல் சமையலறையை நோக்கி ஓடுங்கள். சமையலறையிலேயே அதற்குரிய மருந்து இருக்கிறது !!

1 Dec 2008

விட்டமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்

விற்றமின் B12 ம் வயதானவர்களின் மூளை சுருங்குதலும்


“ஒரு விற்றமின் B12 ஊசி அடித்துவிடுங்கோ” இவ்வாறு கேட்டு வருபவர்கள் சிலர் இருக்கிறார்கள்.

ஒரு சிலருக்கு இது உண்மையான மருத்துவத் தேவையாக இருந்த போதும் பலருக்கு அது தேநீர் குடிப்பது போல ஒரு பழக்கமோ என நான் எண்ணுவதுண்டு.“ஒரு தேநீர் குடிச்சால்தான் உசார் வரும்” என்பது போல ஒரு ஊசி அடித்தால்தான் அவர்களுக்கு மனம் சார்ந்த உற்சாகம் வருவதுண்டு.

இது அவ்வாறிருக்க, வயதானவர்களின் இரத்தத்தில் B12 அளவு குறைவாக இருந்தால் மூளையின் கலங்கள் சிதைவடைவதற்கும், மூளையின் அளவு சுருங்குவதற்கும் வாய்ப்புள்ளதாக அண்மையில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது.

மூளையின் கலங்கள் சிதைவதானது அறிவார்ந்த செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதுமையில் மறதி, அறளை பெயர்தல், அல்ஸீமர் நோய் போன்றவை நீங்கள் அறியாதல்ல. ஆயினும் இந்த ஆய்வின் முடிவுகளைக் கொண்டு விற்றமின் B12 குறைபாடுதான் அறிவார்ந்த செயற்பாடுகள் மந்தமாவதற்குக் காரணம் என்று அறுதியாகச் சொல்ல முடியாதுள்ளது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குருதியில் கொலஸ்டரோல் அதிகரித்தல் ஆகியனவும் மூளை பாதிப்படைவதற்கு முக்கிய காரணங்களாகும்.விற்றமின் B12 குறைபாடுதான் காரணம் எனச் சொல்ல முடியாததற்கு ஆதாரம் இதுதான்.
107 வயதானவர்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு இது. அதன்போது ஆரம்பத்திலும் வருடா வருடமும் அவர்களுக்கு வழமையான மருத்துவப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, அவர்களின் அறிவார்ந்த செயற்பாடுகள் பற்றிய மதிப்பீடு, முளையின் பொருன்மிய நிலையை அறிய MRI பரிசோதனை ஆகியன செய்யப்பட்டன.

அவர்கள் எவரது இரத்தத்திலும் B12 ன் அளவானது வழமையாக எதிர்பார்க்கப்படும் சாதாரணத்தை விடக் குறைவாக இருக்கவில்லை. அதாவது அவர்களுக்கு இரத்தத்தில் டீ12 குறைபாடு இருக்கவில்லை. ஆயினும் ஆய்வின் முடிவில், சாதாரண அளவானதின் குறைந்த நிலையில் B12 இருந்தவர்களது மூளையின் பருமனானது சாதாரண அளவானதின் உயர்ந்த மட்டத்தில் இருந்தவர்களை விட 6 மடங்கு அதிகமாகக் குறைந்திருந்தது.

இதன் அர்த்தம் என்ன? நாம் வழமையாக எதிர்பாரக்கும் அளவை விட அதிகமான செறிவில் இரத்த B12 இருந்தால் முதுமையில் மூளை சுருங்குவது குறைவு என்பதாகும். எனவே எமது உணவில் B12 அதிகமுள்ள உணவுகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. முதியவர்களுக்கு இது மேலும் முக்கியமாகும். இறைச்சி, மீன், பால் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தாவர உணவுகளில் விற்றமின் B12 இல்லாததால் தாவர உணவு மட்டும் உண்போர் விற்றமின் B12குறைபாட்டிற்கு ஆளாவதற்கான சாத்தியங்கள் அதிகம். பாலூட்டும் தாய்மார், பாலகர்கள், மற்றும் முதியவர்களுக்கு இவ்விற்றமின் குறைபாடு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

பேரனீஸியஸ் அனிமியா Pernicious anaemia எனப்படும் ஒரு வகை இரத்தசோகை அதனால் ஏற்படும். நாக்குப் புண்படுதல், தோல் வெளிறல், பசியின்மை, அடிக்கடி ஏற்படும் வயிற்றோட்டம், மாதவிடாய் கோளாறுகள், நோயெதிர்ப்புச் சக்தி குறைதல் ஆகியன அதன் அறிகுறிகளாகும்.

அத்துடன் நரம்புகள் பாதிப்படைவதால் கால் கை விரல்களில் வலிப்பது போன்ற உணர்வு, கால்தசைகளில் வலி, தள்ளாட்டம், மாறாட்டம் போன்ற நரம்பு சார்ந்த அறிகுறிகளும் ஏற்படலாம். விற்றமின் குறைபாட்டை குணமாக்குவதற்கு விற்றமின் B12 ஊசியாகப் போடுவதே ஒரு வழி.

ஆயினும் மூளை சுருங்குவதைத் தடுப்பதற்கு ஊசி தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு B12 குறைபாடு இருக்கவில்லை.அத்துடன் அவ் ஆய்வானது அவர்களுக்கு ஊசி போடுவது பற்றியோ, மேலதிக B12 கொடுப்பதால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்பது பற்றியோ பரிசோதனை எதையும் செய்யவில்லை.

எனவே வயதானவர்கள் மேற் கூறிய உணவுவகைகளை சற்று அதிகமாக உண்டால் போதுமானது.

டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?


வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?
எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?
எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?
பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்? அது எப்படி சாத்தியமாயிற்று?
புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள் அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.
மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.
உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர். இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.
இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான் அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.
கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.
'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்
தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.
'- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்
இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.
ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள்.
அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.
- ரசிகவ் ஞானியார்

16 Nov 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல் அதிகாரி.


சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலைத் தடுக்கத் தவறிய காவல் துறை!
ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
என் நெஞ்சு எரிகிறது! அறிஞர் அண்ணா சொன்னது இது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடுமை அது.
தஞ்சை தரணியில் கீழ் வெண்மணி கிராமத்தில் கூடுதலாக கூலி கேட்டுப் போராடிய ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, அவர்கள் குடிசை வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
அந்தச் செய்தி கேட்டு முகம் கருத்து, வெட்கத்தால் நாணி, தலை குனிந்த முதலமைச்சர் அண்ணா கீழ் வெண்மணி நோக்கி புறப்படத் தயாராக இருந்தபோது அவரிடம் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் அந்நிகழ்வு குறித்து கருத்துக் கேட்டார்.
வெறுமையுடன் அவரைப் பார்த்த அண்ணா, "எனது ஆட்சியிலா இது நடைபெறுகிறது? என் நெஞ்சு எரிகிறது" என்று கூறினார் என்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியதைக் கேட்டுள்ளோம்.
அந்த நிலைதான் நமது நாட்டு மக்கள் பலருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் - அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போலவே - பதறியிருக்கும்.
படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.
ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.
பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.
கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.
இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
தலைவர்களைக் கேவலப்படுத்திய மாணவர்கள்! நடந்த வன்முறை நம்மை பதறச் செய்தது என்றால், இந்த நிகழ்வுகளுக்கான காரணம் நம்மை வெட்கித் தலைகுனியச் செய்வதாக உள்ளது.
இக்கல்லூரி மாணவர்கள் சிலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை கொண்டாடுவதற்கு அச்சடித்த அழைப்பிதழில், தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் உள்ள 'டாக்டர் அம்பேத்கர்' பெயரை தவிர்த்திருத்தனராம்.
அவரது பெயரை ஏன் தவிர்த்தீர்கள் என்று மற்ற சில மாணவர்கள் கேட்க, சாதி ரீதியாக அவர்களுக்குள் புகைச்சல் ஏற்ப்பட்டதாம். அதுவே இந்த அளவிற்கு ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு வித்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் மோதல் நாம் அறியாததல்ல. கிராமத்தில் வாழும் மக்களுக்கு படிப்பறிவிருக்காது, சிந்திக்கவும் தெரியாது, சிந்திக்க நேரமும் இருக்காது.
ஆனால் மாணவர்களுக்கு? அதுவும் சட்டம் படிக்கவந்த மாணவர்களுக்கு தெரியாதா இவ்விரு தலைவர்களும் யாரென்று? இதுதான் வருத்தமளிக்கும் ஆச்சரியம்.
நமது நாட்டின் சட்ட மேதை, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர், இன்றளவும் இந்த அளவிற்கு நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்று, கருத்துரிமை சுதந்திரம் பெற்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறோம் என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்பது கூட புரியாதா? தெரியாதா?
தான் சார்ந்த சமூகம், உடலுழைப்பின் மூலம் சமூக வாழ்விற்கு தனது பங்களிப்பை முழுமையாக செலுத்திய பின்பும் உரிமை மறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படுவது ஏன் என்று குரல் எழுப்பி, அதற்காக தன் வாழ் நாள் முழுவதும் போராடி, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றத் தலைவர்களுக்கும் புரியவைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தை அவர்களும் நுகரச் செய்ய வழி செய்தவரல்லவா அம்பேத்கர்? அவருடைய பெயரை தவிர்ப்பதற்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆழமான கருத்தாடல்களை படித்தவர்களா இவர்கள்? அப்படித் தெரியவில்லை.
சாதியத்தின் பிடி அந்த அளவி்ற்கு இவர்களுடைய சிந்தனையை கட்டிப்போட்டிருக்கிறது என்றால், இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி நாளை நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெற்றுத் தருவார்கள்? அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் சட்டம் ஏது? சட்டத்தின் ஆட்சி ஏது? இந்த இரண்டு தலைவர்களும் ஏதோ சாதியத்திற்காகப் போராடி உயிரைத் துறந்தவர்கள் போலல்வா இருக்கிறது இவர்களின் வெறியும் செயலும்.
சரி அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.
விலகுமா இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?

21 Sept 2008

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆணையர் எச்சரிக்கை

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்:

“போலி இ-மெயில்களை நம்பி, வெளிநாட்டு வங்கிகளில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’ என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி எச்சரித்துள்ளார்.

ஆப்பிரிக்கா நாடுகளில் பல போலி லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாட்டு மக்களுக்கு லட்சக்கணக்கில் இ-மெயில்களை அனுப்புகின்றனர். மெயிலில் “ஆன்லைன் லாட்டரி மூலம் பல கோடி ரூபாய் பணம் பரிசாக உங்களுக்கு கிடைத்துள்ளது. இப் பரிசை பெற நீங்கள் குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டு வங்கியில் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்படும்.

உழைக்காமலே கோடி கணக்கில் பணம் கிடைத்தும் என்ற பேராசையில், போலி இ-மெயில்களை நம்பும் சிலர் வங்கியில் பணத்தைச் செலுத்துகின்றனர். இதன்பின், மீண்டும் பணம் செலுத்தும்படி மற்றொரு இ-மெயில் வரும்.

2-வது முறையும் பணத்தைச் செலுத்திய பின், போலி நிறுவனத்திடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்காது.

இத்தகைய நூதன மோசடியில் சிக்கி பணம் இழந்த ஒரு சிலரே போலீஸில் புகார் அளிக்கின்றனர். போலி இ-மெயிலால் சில ஆயிரங்களை இழந்தவர்கள் போலீஸில் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸர் கூறியது:

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் பலர் போலி இ-மெயில்களை நம்பி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் மிக சிலரே போலீஸில் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த மோசடியில் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இணையதள வசதியைப் பயன்படுத்தி மோசடி செய்யும் வெளிநாட்டு குற்றவாளிகளைப் பிடிப்பதில் ஏராளமான நடைமுறை சிக்கல் உள்ளன என்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. “சொந்த விவரங்களையும் (பயோடேட்டா), பணத்தையும் வங்கியில் செலுத்தினால், உங்களுக்கு வேலை ரெடி’ என்ற ரீதியிலான இ-மெயில்களை இந் நிறுவனங்கள் அனுப்புகின்றன. இவற்றை நம்பிக் கூட ஏமாந்தவர்கள் உண்டு.

இப் பிரச்னை குறித்து மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மோசடி இ-மெயில்களுக்கு பதில் அனுப்பவோ, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவதோ கூடாது. அறிமுகமில்லாதவர்களிடம் வங்கிக் கணக்கு எண், ரகசிய பாஸ்வேர்டு போன்ற விவரங்களை அளிக்க வேண்டாம். லாட்டரி பரிசுகளை வென்றுள்ளதாக கூரியர், இ-மெயில்களில் மூலம் வரும் தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்..

உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வு முடிவு மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.

- அலசல்

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

பொதுவாக எல்லோருக்கும் ஒருவித எண்ணம் உண்டு. "எப்போதும் கடுமையாக உழைக்கிறோம். புதிதாக யோசிக்கிறோம். மற்றவர்கள் இதை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே! ஒரு பாராட்டுகூட கிடையாதா...? என்று அங்கலாய்ப்பார்கள்.

பலரிடம் உள்ள இந்த எண்ணம் இது உண்மைதானா என்பது பற்றி எஸ்.பி.எம். பவுண்டேசன் என்ற அமைப்பு ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அர்த்த சாஸ்திரத்தில் சில தகவல்களை எடுத்து கூறி இதன்படி செயல்பட்டால் வாழ்வில் வெற்றிபெற தகுந்த ஆள் யார்? என்பதை முடிவு செய்யலாம் என்கிறது அந்த நிறுவனம்.

இதற்காக மூன்று முக்கிய விஷயங்களை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) எடுத்த காரியத்தை முடிக்கிறீர்களா?

2) அதற்கு தேவையான விடை கிடைத்ததா?

3) அந்த பணியை செய்ததில் திருப்தி அடைகிறீர்களா?

இந்த மூன்றையும் கணித்து உங்கள் தினசரி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறது அர்த்த சாஸ்திரம்.

இது தவிர 4 முக்கிய குறிக்கோள்களையும் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

1) உங்களது இலக்கு, லட்சியம், கொள்கையை சரியாக குறி வைத்து முடிவு செய்யுங்கள்.

2) ஒரு செயலை ஏன் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

3) ஒரு காரியத்தை எப்படி செய்வது என்ற திட்டமிடுதல் மிகவும் அவசியம். இதில் பலருடைய ஆலோசனைகள் அறிவுரைகள் தேவைப்படலாம்.

இவற்றை வரைபடம்போல மனதில் வைத்து செயல்படவேண்டும். இதற்கு தகுதியான ஆலோசனைகளை கேட்டு அறிவது அவசியம்.

4) பயணத்தை தொடங்கியதும் வெற்றி, தோல்வி வரலாம். எனவே விடாமுயற்சி முக்கியம். லட்சியத்தை பார்த்து வேகமாக செயல்படவேண்டும்.
இதில் பலர் தவறான பாதைக்கு செல்ல நேரிடலாம். எனவே பாதையை சரியானதாக தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

அர்த்த சாஸ்திரத்தின் இந்த கருத்துகளை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறுவது சுலபம்.

16 Sept 2008

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.

அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது.

மேலும் புளூ டூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்.

ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒரு வேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்த விலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அனைத்துவசதி கொண்ட கம்பெனி போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர்.

-கூடுதுறை

10 Sept 2008

நட்பு - நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள்

நட்பு - நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள்

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

-வா‌ணிஸ்ரீ ‌சிவ‌க்குமா‌ர்

7 Sept 2008

காய்கறிகளில் என்ன பலன் இருக்கிறது ?

வாழைக்காய்

பித்தம் குறைக்கும், தலைச்சுற்று நீக்கும், பித்த வாந்தியைக் குறைக்கும், உடற்சூடு தணிக்கும், சூட்டு இருமல் தணிக்கும், உமிழ்நீர் சுரக்கும்.

முருங்கைக்காய்

சளியைப் போக்கும், ஆண்மை மிகுவிக்கும், ஊளைச்சதை நீக்கும், எலும்பு வலுவாகும், பல் ஆட்டத்தை நிறுத்தும், காயங்களைக் குணமாக்கும், சோகை தீர்க்கும், ஈறுகளுக்கு உறுதி அளிக்கும்.

காலி ஃபிளவர்

சூட்டைத் தணிக்கும், சளி குறைக்கும், உடல் வறட்சியைப் போக்கும், இருமல் குறைக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், இளைப்பு நீங்கும், மேனியை மினுமினுப்பாக்கும்.

தக்காளிப் பழம்

மேனியை மினுமினுப்பாக்கும், வறட்சியைப் போக்கும், தாகம் தணிக்கும், உமிழ்நீரைச் சுரக்க வைக்கும்.

முட்டைக்கோஸ்

உடல் வளரச் செய்யும், கண் பார்வை மிகும், தோல் அழகாகும், பற்கள் உறுதியாகும், நரம்புகள் பலமாகும், தொற்று நோய்களைத் தடுக்கும், கருவுற்ற பெண்களுக்கு நல்லது, எலும்புக்கு உறுதி ஏற்படுத்தும், முடி கொட்டாது.

வெங்காயம்

வாய் துர்நாற்றம் போக்கும், மலப்பிரச்னைகள் தீரும், உடம்பில் மினுமினுப்பு உண்டாக்கும், வறட்சி நீக்கும், வாதம், பித்தம், கபம் இவைகளைச் சமப்படுத்தும்.

பீட்ரூட்

இரத்தம் சுத்தமாகும், மலப்பிரச்னைகள் தீரும், சூடு தணிக்கும், முகம் அழகாகும், தோல்வறட்சி நீங்கும், இரத்த சோகை போக்கும், கை கால் சோர்வைப் போக்கும், உடம்பு நிறம் கூடும்.

பச்சைப் பட்டாணி

பசியைப் போக்கும், உடம்புக்கு சக்தி கொடுக்கும், குடல்புண்களை ஆற்றும், மூளைக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்கும். றீ

உங்கள் கண்களை பாதுகக்கா....

கண்ணுக்குக் கண்ணாக என்று சொன்னாலும் நடைமுறையில் நமது கண்களைப் பாதுகாப்பதில் நாம் போதிய அக்கறை கொள்வதில்லை. பார்வைக் குறைபாடு வந்த பிறகே கண்களைக் கவனிக்கிறோம். ஆனால் கண்களைப் பாதுகாக்க பல எளிமையான வழிகள் இருக்கின்றன.

அவற்றில் சில மீன் உணவு கண்களுக்கு மிகவும் நல்லது. அதில் உள்ள ஓமேகா3 கொழுப்புத் தன்மை கொண்ட அமிலங்கள் வறண்ட கண் குறைபாட்டை போக்க வல்லது. மீன் சாப்பிடாதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடலாம்.

நீச்சல் அடிக்கச் சென்றால் அதற்கான கண்ணாடி அணிந்து செல்லுங்கள். குளோரின் கண்களைப் பாதிக்காமல் தடுப்பதோடு மண் கரிசல்கள் பாதிப்பு ஏற்படுத்தாமலும் பாதுகாக்கும்.

காரில் ஏசி இருந்தாலும், அதிலிருந்து முகத்திற்கு நேராக குளிர் காற்று வரச் செய்வதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாக கால் பகுதியை நோக்கி காற்று வரட்டும். காரணம், குளிர் சாதன காற்று பஞ்சு போல. கண்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். வறண்ட கண்களிலும் பல வித பாதிப்பு உண்டாகலாம்.

சிவப்பு வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துங்கள். அதில் உள்ள குயர்சிடின் (quercetin) காட்ராக்டை வராமல் தடுக்க வல்லது.

எப்போது வெளியே சென்றாலும் குளிர் கண்ணாடி அணியலாம். இது பந்தாவிற்காக அல்ல. பாதுகாப்பிற்காக. குளிர் கண்ணாடி சூரிய வெப்பத்தில் இருந்து காப்பதோடு காற்றில் உள்ள வறண்ட தன்மையில் இருந்தும் காக்கிறது.

வள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள். அதில் உள்ள வைட்டமின் `ஏ' இரவு நேர பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

மேக் அப் செய்து கொள்ளும் பெண்கள் இரவு படுக்கச் செல்லும் முன் மேக் அப்பை கலைத்து விட்டு முகத்தைக் கழுவி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

டவல்கள் மற்றும் கைக்குட்டை மூலம் கிருமிகள் தாக்கலாம் என்பதால் இயன்றவரை முகம் துடைக்க புதிய (அ) துவைத்த டவலை மட்டுமே பயன்படுத்தவும்.

கண்ணாடி அணிந்தால் மட்டும் போதாது. தொப்பியும் அணிவது சிறந்தது. அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்ணுக்குள் ஊடுருவாமல் தொப்பிகாக்கிறது.

படிக்கும் போதோ, வேலை செய்யும் போதோ அரை மணிக்கு ஒரு முறை அதனை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் தொலைவில் உள்ள பொருளை 30 விநாடி பார்க்க வேண்டும்.

அடிக்கடி ரத்தப்பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் பார்வையைப் பாதிக்கலாம்.

மல்லிகை மலர் வாசனைத் திரவியம் (அ) வென்னிலா மனத்தை முகர்ந்து பாருங்கள். இவை மூளையில் பீட்டா கதிர்களை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் கவனிப்புத்திறன் கூடும். விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

வாரத்தில் நான்கு முறையேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். குளுகோமா நோயாளிகள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் பாதிப்பு குறைவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

கீரைகள் அதிகம் சாப்பிடுங்கள்.அதே போல் உப்புத்தன்மை கொண்ட பண்டங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்!

3 Sept 2008

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா - 3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். 40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள். இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன.

இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன. அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா - 3 எண்ணெய் ஒரே அளவில்தான் இருந்தது. எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா - 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

-சுதன்

31 Aug 2008

புனித ரமலான் நல்வாழ்த்துக்கள்


இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்...

27 Aug 2008

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப்பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும்.

ஏன் வருது?

* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.

தடுப்பு வழி

* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.
* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.

எப்போதும் “ஏசி’ அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - டி சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.

சர்வே சொல்லுது:

இது போல, சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - டி சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - டி சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது.

கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம் ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்ப்புறங்களில், சூரிய வெளிச்சம் படுவது குறைவு ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

புற்றுநோயும் வரும்:

வைட்டமின் -டி சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதார நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - டி சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் “டி’ இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும் அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
-செந்தில்

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

திருமணமான உடனேயே, பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர்.

வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற்றோர் மிகவும் வேதனையடை கின்றனர். இந்த வேதனை அவர்களை மனஉளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.

முக்கிய நபர்களின் தொலைபேசி எண்ணை பத்திரப்படுத்துங்கள்:

* உங்கள் பெற்றோரின் நண்பர்கள், வீட்டருகில் வசிக்கும் நபர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நபர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலத்தில் அவர்களிடம் பேசி உதவியை பெற முடியும்.

இரவு உணவை பெற்றோருடன் உண்ணுங்கள்:

* வயதான காலத்தில், தனிமையாக இருப்பதாக உங்கள் பெற்றோர் உணர்வர். இது அவர்களுக்கு கவலையை கொடுத்து, அந்த கவலை, மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும். தனிமையாக உணர்வதால், அவர்களால் சரியாக சாப்பிட முடியாது. சிறு பிரச்னை கூட பெரிதாக தெரியும். எனவே, உங்கள் பெற்றோருக்காக, நீங்கள் நேரம் ஒதுக்குங்கள். பெற்றோர் வீட்டின் அருகில் நீங்கள் வசிப்பவராக இருந்தால், அவர்களுடன் இரவு உணவை உண்ணுங்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள்:

* ஆரோக்கியத்துடன் இருந்தும், சுறுசுறுப்பில்லாமல் இருக்கின்றனரா? வாக்கிங், யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்ட சொல்லுங்கள். உங்கள் பெற்றோரின் வீட்டருகில் வசிப்ப வராக இருந்தால், அவர்களை தினமும் வாக்கிங் அழைத்து செல்லுங்கள். அல்லது கடைக்கு செல்லும் போது அவர்களையும் உடன் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் அனுப்பி வையுங்கள்.

பெற்றோர் கூறுவதை பொறுமையாக கேளுங்கள்:

* உங்கள் பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறும் போது அவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் கூறுவதை கவனமாக, பொறுமையுடன் கேளுங்கள். அப்படி கேட்கும் போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். நீங்கள் அவர்களுக்கு கீழ்படிவதாகவும், அவர்கள் மீது அக்கறை கொண்டு இருப்பதாகவும் எண்ணி மகிழ்ச்சி அடைவர்.

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிப்பவரா?

* இன்டர்நெட், இ-மெயில் பற்றி உங்கள் பெற்றோருக்கு தெரிந்திருந்தால், இ-மெயில் மூலமும் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம், உங்கள் பெற்றோருக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றிய வெப்சைட்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். உங்களால் முடிந்தால், உங்கள் பெற்றோர் வீட்டில், “பேக்ஸ் மிஷின்’ வையுங்கள். அதன் மூலம் சிறப்பு கட்டுரைகள், புகைப்படங்கள், மற்றும் உங்கள் குழந்தைகள் வரைந்த படங்கள் முதலியவற்றை அனுப்பலாம். மேலும் அவர்கள், உடல் நலம் குறித்து அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் அனுப்பலாம்.
-செந்தில்

24 Aug 2008

சர்க்கரை நோயாளிகளின் உறுப்புகளை காக்கும் "பிஞ்சு' முட்டைக்கோஸ்

நீங்கள் சர்க்கரை நோயாளியா?
இனி கவலை வேண்டாம். தினமும் "பிஞ்சு' முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாக இருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால் மாரடைப்பு ஏற்படும். அதேபோல் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.

இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. "பிஞ்சு' முட்டைக்கோûஸ தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர்நல்லே தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள சில புரதச்சத்துக்கள், உடலில் செரிமானம் செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள் பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்க செய்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது.

20 Aug 2008

டென்ஷன் எதனால் ?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.

ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.

உடல் திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர் திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன் மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.

இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.

1. நெஞ்செரிச்சல் (Heartburn):

டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.

விடுபடவழிகள்:
ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. கை நடுக்கம்:

கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.

விடுபட வழிகள்:
உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.

3. திடீர் தலைச்சுற்றல்:

டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.

விடுபட வழிகள்:
தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

4. தோல் அரிப்பு:

சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.

விடுபடவழிகள் :
அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.

5. அதிகப்பணம் செலவழிக்கும்போது:

எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.

- மருத்துவம்

19 Aug 2008

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர். இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது.

5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது. சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

- suthan

14 Aug 2008

அரேபிய வாழ்க்கை.....

அரேபிய வாழ்க்கை.....
பத்தாம் வகுப்பு பெயில்
அரேபியாவில் இருந்து-என்அப்பா எழுதினார்
பாஸ்போர்ட்டிற்கு விண்ண்ப்பிக்கவும்
விமானமும் விசாவும் கிளர்ச்சியூட்டிய கனவுகளில்
பில்கேட்ஸ் பாவம் பிச்சைக்காரானாக
விழுவதற்குள் ஆவியாகும் பாலைவனத் தூறல்
போல்காணாமல் போனது கனவு!
கழிவறை சுத்தம் செய்யும் கைத்தொழிலொன்றில்
அப்பாவும் நானும் அழுக்கானதில்
சுத்தமானது - எங்கள்வீட்டு வறுமை!
ஆசையும் மோகமும் தொன்னூறு நாட்கள்
அரேபியன் கொடுத்த லீவு அறுபது நாட்கள்
எந்த விலக்கப்பட்ட கனியைத் தின்றோம்?
சபிக்கப்பட்டது எங்கள் இளமை!
வெட்கம் விலக்கி தொலை பேசிக்கும் தெரியாமல்
மனைவி தராத பதில் முத்தம்!
நானில்லை எனத் தெரிந்தும் நானாக இருப்பேனோ
சாயல் கண்டு ஏமாறும் தாயன்பு!
நெகிழ வைக்கும் மழலை கீதம்
நெஞ்சுருக வைக்கும் மரணங்கள்!
பிழைப்பு தேடிவாழ்வை இழந்தோம்.
விசா கடன் அடைக்கவே வேலை இருக்கு...
பிரியத்திற்குப் பட்ட கடன் அடைக்க வழி இருக்கா
நத்தைக் கூட்டிற்குள் நாலைந்து பேர்கள்
காய்ந்த ரொட்டியும் பாழாய்போன பசியும்!
நான் சகித்து சகித்து சம்பாதித்தவையெல்லாம்
அரை கிரெளண்டில் நிலமும் அதிலோர் வீடும்
வயதும், முகமும் வகுப்பும், படிப்பும்
சரியாய்த் தெரியாத குழந்தைகள் இரண்டு
சக்கரையும் அழுத்தமும் சரி விகிதத்தில்
வரவுக்ககாக வந்தோம் செலவாகிப் போனோம்
பிறிதொரு நாளில்மகன் எழுதினான்
"பத்தாம் வகுப்பு பெயில்
"நானும் எழுதினேன்"பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கவும்"
நன்றி : சேக் அப்துல்லாஹ்

13 Aug 2008

வெந்நீரின் பயன்கள்

வெந்நீரின் பயன்கள்

யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ‘‘அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்...’’ என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.

உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்... வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!

ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை.... மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ‘‘அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்’’ என்று புலம்புவது கேட்கிறது!)

உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.

எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.

திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.

அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்! வெந்நீரின் பயன்களை லிஸ்ட் போட்டு மாளாது...

என்னது?! வெந்நீருக்கு இனி உங்கள் வீட்டில் தனியாக ஒரு பெரிய பாத்திரமே போடப் போகிறீர்களா...? குட் குட்!

நன்றி - குமுதம்-சினேகிதி

12 Aug 2008

1947 பிரிவினையில் ஒற்றுமை.

அன்புள்ள மகளுக்கு வாப்பா எழுதும் கடிதம்,

இங்கு அனைவரும் நலம். அது போல் அங்கு நீ அம்மிஜான் ,வாசீம், ஈசான், மற்றும் போஸ்ட்மேன், கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரின் நலமறிய ஆவல்.

ரஜாக்கிடம் உனது புகைப்படத்தை காண்பித்தேன் ரொம்ப வெட்க்கபட்டான். இன்னும் இரண்டு வாரங்களில் லன்டன் செல்கிறான். அதன் பிறகு லாகூர் வந்த பிறகு அவனையும் கூட்டிக்கொண்டு மதுரை வருவேன். பட்னாவிலிருந்து மோஹன்லான் பையாஜி உனக்காக ஒரு சால்வை அனுப்பிருந்தார். அதையும் கொண்டு வருகிறேன்.

அம்மி ஜான்னுக்கு சுகர் இப்பொழுது எப்படி இருக்கிறது இன்னும், அவர்களை காலையில் கோரிப்பாளையத்திலிருந்து கலக்டர் அலுவலகம் வரை நடக்க சொல், நாளை ஈசான் அண்ணா அங்கே வருவதாக மதுரை புறப்படுகிறார். அவரிடம் சால்வையையும் கொஞ்சம் நகைகளையும் கொடுத்து அனுப்புகிறேன்.

தோல் வியாபாரத்திற்க்கு காபூலிலிருந்து இரண்டு வியாபாரிகளை ஏஜென்டாக சேர்த்துள்ளேன். அல்லா அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும். காந்தி லாகூரில் வந்து பொதுக்கூட்டம் நடத்தினார். அப்பொழுது மதுரை கோவில் அரிஜன நுழைவை பற்றி பேசினார் ரொம்ம பெருமையாக இருந்தது. நமது குப்பு சாமி, சுப்பையா எல்லோரும் சென்றிருப்பார்கள். மினாட்சி அம்மையின் விக்ரகத்தை நேரில் தரிசித்திருப்பார்கள்.

மகளே இங்கு விடுதலை போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. லன்டனில் இருந்து மௌண்ட் பேட்டன் என்னும் புதிய கவர்னரை மகாராணி நியமித்துள்ளார்கள். அவர் நல்ல மனிதர் போல் தெரிகிறது. மகாராணியிடம் இந்திய மக்களின் எண்ணத்தை எடுத்து சொல்லி விரைவில் விடுதலை பெற ஆவன செய்வார் எனத்தெறிகிறது. எனக்கு இன்னும் மனம் வலிக்கிறது. பகத்சிங்கின் தூக்கு தண்டனையின் போது லாகூர் சிறைக்கு வெளியே நடந்த போரட்டத்தில் நானும் தான் இருந்தேன். என்ன செய்ய இத்தனை இந்தியர்கள் இருந்து தங்க மகனை வெள்ளையர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

இப்படிக்கு ஜமால் முகம்மது லாகூர் மேற்க்கு இந்தியா.

அன்புள்ள வாப்பா அவர்களுக்கு பாத்திமா எழுவது।

இங்கு அனைவரும் நலம் அப்பா ஈசான் அண்ணா நீங்கள் அனுப்பிய பொருள் அத்தனையும் கொடுத்தார். எல்லொரும் நலமாக இருக்கிறோம். வா ஊ சி அவர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டார். ஆனால் அன்னிய உடமைகள் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறைக்கு சென்று விட்டார். திருப்பூரில் குமரன் என்னும் இளைஞரை போலிசார் அடித்ததில் அவர் உயிரிழந்து விட்டார். அவர் தன் உயிர் போனாலும் பாரதக் கொடியை விடாமல் தன் இன்னுயிர் நீத்தார் தமிழகமெங்கும் அவரது பேச்சுதான் அப்பா, வடக்கே பகத்சிங் என்றால் இங்கே குமரன் போன்ற இளைஞர்கள், இவர்கள் இன்னுயிர் நீத்து வாங்கித்தரும் சுதந்திரம் மிகவும் விலையுயர்ந்தது அப்பா, அதனால் திருமணம் ஆனா பிறகு நான் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதலாம் என்றிருக்கிறேன். வரும் தலைமுறைகள் இதை கண்டு எதிர்காலத்தில் வரும் தலைமுறை சுதந்திரத்தை தக்க முறையில் பேணிகாக்க வேண்டும்.

பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரை இந்தியா.

அன்புள்ள மகள் பாத்திமா,

அனைவரும் நலமா இங்கு சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. எப்படியும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் ஆட்சி அதிகாரத்தை நமக்கு தந்து விடுவார்கள் போல் உள்ளது. ஆனால் ஒரு புதிய அதிர்ச்சி தரும் செய்தி ஜின்னா அவர்கள் முஸ்லீம்களுக்கா புதிய நாட்டை உருவாக்கித்தாருங்கள் என ஆங்கிலேயரிடம் சொல்கிறார். அதற்க்கு காந்திஜிக்கு உடன் பாடில்லை ஆனால் டில்லியில் இதற்க்கான வேலைகள் தயாராகிவருவதாக செய்திகள் வருகிறது. அப்படி முஸ்லீம்களுக்காக தனி நாடு உறுவாகிவிட்டால், நீ அம்மிஜானும்,வாசீம், ஈசான் எல்லோரும் புறப்பட்டு வந்துவிடுங்கள். இங்கு இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எனக்கு அங்கு வரவேண்டும் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் தான் மனம் சொல்கிரது. முடிந்தவரை பார்க்கிறேன். இல்லையென்றால் புறப்பட்டு வந்து விடுகிறேன். அதிகமாக வெளியே எங்கும் சுத்த வேண்டாம். தம்பிகளிடம் சொல்லி வை

வாப்பா ஜமால் முகம்மது
லாகூர்

பிரியமுள்ள வாப்பாவுக்கு பாத்திமா எழுதுவது,

அப்பா பாரதம் இரண்டு துண்டாக ஆக்கப்படுவது முடிவாகிவிட்டது. வடக்கில் அனைத்து முஸ்லீம்களும் பாகிஸ்த்தான் செல்ல தயராகிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் அது முடியாத காரியமப்பா இங்கே அனைவரும் அண்ணன் தம்பிபோல் பழகிவிட்டோம். வாழ்ந்தாலும் இறந்தாலும் இங்கேயே என்பது முடிவாகிவிட்டது. மேலும் கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரும் இன்று வீட்டிற்க்கு வந்து அப்படி யாரும் போகும் சூழல் ஏற்பட்டாலும் நீங்கள் போக வேண்டாம் என்று சொன்னார்கள். திருப்பரங்குன்றத்தில் முகைதீன் மாமாவும் இதைத்தான் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் இங்கு வந்து விடுங்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கையில் பயமில்லை ஆனால். உங்களை நினைத்தால் தான் வாப்பா பயமாக இருக்கிறது. இந்த கடிதம் கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். தயவு செய்து நீங்கள் எந்த வேலை இருந்தாலும் விட்டு விட்டு வந்து விடுங்கள். இங்கு போஸ்ட்மேனை போலீஸ்காரர்கள் பிடித்து சென்று விட்டார்கள். அவர் பொதுக்கூட்டம் போட்ட காரணத்தால் அவரை கைது செய்து விட்டனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கடிதம் கண்ட உடன் புறப்பட்டு வரவும். அம்மிஜான் உங்கள் நினைவால் கவலைபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிக்கு
மகள் பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரைஇந்தியா

11 Aug 2008

பொய்யைக் கண்டறிய சில வழிகள் !

பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது.

பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன.

பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ?

அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர்.

ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க அவர் சில வழி முறைகளைச் சொல்கிறார்.

1. முதலில் பேசுபவர்களின் வார்த்தைகளைக் கவனியுங்கள். அதில் இருக்கும் தொடர்பற்ற, அல்லது இயற்கைக்கு முரணான செய்திகளை கவனமாய் கண்டறியுங்கள். முக்கியமாக மனித இயல்புகளுக்கு மீறிய வார்த்தைகளையும், நடக்க சாத்தியமற்ற கூறுகளையும் கண்டுணருங்கள்

2. உலகில் நான்கு விழுக்காடு பொய்யர்கள் மிகத் திறமை சாலிகள், மற்றவர்களைக் கண்டறிவது மிக மிகக் கடினம். மற்றவர்கள் எளிதில் மாட்டுவார்கள். பொய்யர்கள் என கருதும் நபர்களிடம், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கேள்வியை எதிர்பார்க்காத நேரத்தில் கேளுங்கள். அவர்கள் பொய்யர்கள் என்றால் அந்த கேள்வியே அதைக் காட்டிக் கொடுத்து விடும்.

3. தெரிந்த நபர் எனில் அவருடைய இயல்புகளை வைத்து, அதில் தெரியும் மாற்றங்களை வைத்து அவரை கணக்கிடுங்கள். அமைதியான நபர் கலகலப்பாக இருப்பது போல் காட்டிக் கொள்வதும், கலகலப்பான நபர் சற்று அமைதியாய் இருப்பதும் நிகழ்ந்தால், ஏதோ செய்தி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

4. வெளிப்படுத்தும் உணர்வுகளை வைத்து எளிதில் இனம் கண்டு கொள்ளுங்கள். புன்னகையில் செயற்கை வாசமடிக்கிறதா ? நகைச்சுவை சொன்னால் உடனே சிரிக்காமல் இருக்கிறார்களா, நமது உரையாடலில் தேவையான உணர்ச்சிகள் வெளிப்படாமல் இருக்கிறதா ? இவையெல்லாம் பொய்யின் குழந்தைகள்.

5. திடீர் உணர்ச்சிகளை கவனியுங்கள். பெரும்பாலானவர்கள் எதையேனும் மறைக்க முயன்றால் கண நேரத்தில் அவர்களுடைய கண்களில் குற்றம் தோன்றி மறையும். பெரும்பாலும் காவல் துறையில் இருக்கும் திறமையான நபர்களால் மட்டுமே அதைக் கண்டு பிடிக்க முடியும் எனினும் கவனத்தில் கொள்வது நல்லது.

6. “நான் நினைக்கிறேன்”, “நான் நம்புகிறேன்” போன்ற உரையாடல்கள் பல வேளைகளில் பொய்யைச் சொல்ல பயன்படுத்தப்படும் வாக்கியங்கள். எனவே சூழலுக்கு ஏற்றபடி இந்த வார்த்தைகள் சொல்லும் பொருள் என்னவாய் இருக்கும் என கணித்துக் கொள்ளுங்கள்.

7. முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் என்னென்ன என்பதை கவனியுங்கள். சிலர் இல்லை என்று சொல்லும் போது அவர்களுடைய உடலசைவு “ஆம்” என்று சொல்லும். சிலர் ஒரே செய்தியை வேறு விதமாய் கேட்கும் போது வேறு விதமாய் பதிலளிப்பார்கள். அதை கவனியுங்கள்.

8. இயல்பாக இல்லாமல் இருக்கிறாரா என்பதை கவனியுங்கள். ஏதேனும் தவறு செய்துவிட்டவன் இயல்பாய் இருப்பதாய் காட்டிக் கொண்டாலும் இயல்பாய் இருப்பதில்லை.

9. பொய் சொல்பவர்கள் அல்லது உண்மையை மறைப்பவர்கள் தேவையற்ற நீண்ட விளக்கங்கள் கொடுப்பார்கள். ஆம், இல்லை என்னும் சிறு பதிலை எதிர்பார்க்கும் கேள்விக்குக் கூட அவர்கள் நினைத்திருக்கும் நீண்ட பதிலை சொல்கிறார்களா என கவனியுங்கள்.பொய்யைக் கண்டறிய இது மிகவும் பயனளிக்கும்.

10. பேசும்போதெல்லாம் பொய்யே பேசுவார்கள் என்னும் எண்ணத்தோடு அணுகுதலும் தவறு. பொய் பேசுகிறார்கள் எனில் பேசுவது எல்லாமே பொய் என முடிவு செய்தலும் தவறு.

ஒரு பொய் சொல்லப்பட்டால், அதை கண்டுணர்ந்தால், அதன் காரணத்தை அறிய முயலுங்கள்.மேற்கூறிய செய்திகளெல்லாம் பொய்களைக் கண்டறியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், குடும்ப உறவுகள் சார்ந்த சிக்கல்களில் சந்தேகக் கண்களை கழற்றி வைத்து விட்டு நம்பிக்கை கரம் கொண்டு அரவணைத்து நடப்பதே ஆரோக்கியமானது.

தகவல்: ஒரு கணனி

10 Aug 2008

1947

கண்ணடம் கலந்த தமிழ் வாடை வீசும் கிராமம், தமிழகத்தின் எல்லை கிருஷ்னகிரி மாவட்டத்தின் வடகோடி வாகைகுடி கிராமாம்,
இந்த கிராமத்தை கடந்தால் அடுத்து வருவது கருநாடகதான் (கர்நாடகம்).

மதிய வெப்பம் தனிந்து மாலை குளிர் வர ஆரம்பிக்கிறது. மூன்று கூட்டு அடுக்கு மாட்டு வண்டியில் 20 வதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கையில் அறிவாலும் சூலமும் ஈட்டியும் ஏந்திக்கொண்டு வர ஆடு மேய்த்து கொண்டிருந்த முத்துவின் மகன் இதை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு தனது அப்பாவிடம் சொல்ல முத்துவும் ஊர்ப்பெரியவரான குழந்தை வேலு ஐயாவிடம் சென்று ஐயா மூன்று மாட்டு வண்டியில் ரொம்ப பேர் வராங்கையா கையில ஈட்டி அறிவால், சூலமெல்லாம் வைத்திருக்கின்றனர் சொன்னார்.

அதற்க்குள் மாட்டின் சலங்கை சத்தம் அருகில் கேட்க்க ஆரம்பித்தது. அதிலிருந்து ஆஜானுபவான ஒருவன் இறங்கினான். வடமொழியும் தமிழும் கலந்த கொச்சை மொழியில் பேச அதுபுரியாத குழந்தைவேலு அருகில் இருந்த சங்கரனிடம் தம்பி ஜோசப்பை கூட்டிவா இவன் என்ன சொல்கிறான் என்று புரிய வில்லை. என சொல்ல சிறிது நேரத்தில் ஜோசப் அங்கு வர அவரிடம் தம்பி இவன் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை கொஞ்சம் விளங்கவை உனக்குத்தான் வரமொழி தெரியுமே என சொல்ல அவனும் அவரிடம் வடமொழியில் பேசியவுடன் ஜோசப்பின் முகம் இருளத்துவங்கியது.

பதட்டத்துடன் குழந்தைவேலுவிடம் ஐயா நம்ம நாடு சுதந்திரம் இன்று இரவு ஆகப்போகிறதான், ஆனால் இந்துக்களுக்கு என்றும் முஸ்லீம்களுக்கு என்று ஆங்லேயர் பிரித்து விட்டனர். அதனால் இங்குள்ள முஸ்லீம்கள் எல்லாம் புதிதாக பிரியப்போகும் பாகிஸ்த்தான் என்னும் நாட்டிற்க்கு செல்லவேண்டும் அப்படி செல்ல மறுப்பவர்களை விரட்டியடிக்க வேண்டும் , அதற்க்குத்தான் இவர்கள் வடக்கே இருந்து வந்திருக்கிறார்கள் என சொல்ல குழந்தை வேலுவின் உள்ளம் வேதனையுற்றது.

அதற்க்குள் இருட்ட ஆரபிக்க ஜோசப்பிடம் சரிப்பா இவ்வளவு தூரம் வந்திருக்காங்க என்ன சாப்பிட்டாங்களோ என்னவோ அதனால் அனைவரையும் எனது வீட்டிற்க்கு வந்து சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்க சொல், காலையில் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் என்றார். ஜோசப்பும் இதை சொல்ல வந்த நபர்கள் அனைவரும் சரி யென்று சொல்ல, குழந்தை வேலுவிற்க்கு மனதிற்க்குள் பல கேள்விகள் இவர்களை இப்படியே விட்டால், இவர்கள் தமிழகத்திற்க்குள் ஊடுறுவி ரகளை செய்ய ஆரம்பித்து விடுவார்கள், இவர்களை எதிர்க்க நம்மிடம் பலமுமில்லை என்ன செய்யாலாம் என்று யோசித்துக்கொண்டே தனது வீட்டிற்க்குள் நுழைந்தவர் தனது மனைவியிடம் தனம் ஒரு 30 பேருக்கு சாப்பாடு தயார் செய்ம்மா , என்று சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்று யோசனையில் மூழ்கினார்.

அவர் அந்த பகுதியில் உள்ள பல கல் குவாரிகளின் முதலாளி, மேலும் நாட்டு வைத்தியர் வேறு தனது அறையில் அமர்ந்து யோசித்துகொண்டிருக்கையில் காயமுற்றவர்களுக்காக தரப்படும் உடல் மரத்து போகச்செய்யும் மருந்து கண்ணில் பட அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ஒரு முடிவிற்க்கு வந்தவராக அந்த மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தவர், அதற்க்குள் அவரது மனைவி சமையல் எல்லாம் ஆக்கி தயார் செய்து விட தோட்டத்திற்க்கு போய் வாழையிலை கொண்டு என்று அவர்களுக்கு சொல்ல அவரதுமனைவியும் சரி என்று சொல்லி விட்டு தோட்டத்திற்க்கு செல்ல அங்கு இருந்த மோர் பானையை திறந்தவர், அனைத்து மருந்தையும் அதில் கொட்டி கலந்துவிட்டு மீண்டும் மருந்து சீசாவை தனது அறைக்கு சென்று வைத்துவிட்டார். அனைவரும் சாப்பிட்டு விட்டனர்.

தனது கையேலேயே அனைவருக்கும் மருந்து கலந்த மோரை குடிக்க கொடுத்தார். தனது மனைவியிடம் இவர்கள் வராந்தாவிலேயே தூங்கட்டும் நீங்கள் எல்லோரும் வீட்டில் போஉ தூங்குங்கள் என்று சொல்லி விட்டு கல்குவாரியை நோக்கி நடையை கட்டினார்.

வெடிபோட நாகர்கோவிலிருந்து குடும்பத்துடம் அங்கு வந்து தங்கியிருந்த குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். அவர் தூரத்தில் வருவதை பார்த்த குப்பன் ஓடிச்சென்று ஐயா என்னங்கையா இந்த இரவு நேரத்தில் நீங்க சொன்னா நான் வந்திருக்க மாட்டேனா என்றான். அதற்க்கு அவர் குப்பா எத்தனை குழிப்பா போட்டிருக்கிறாய் என்று வினவ ஐயா இன்னும் 4 மாதத்திற்க்கான 66 குழி போட்டு விட்டேன். இரண்டு நாளைக்கு ஒரு குழி வெடிவைத்தாலும் இன்னும் 6 மாதத்திற்க்கு குழி போட தேவையில்லை ஐயா என்றவனை அமைதியாக பார்த்து எல்லா குழிக்குமே இன்று வெடிவைக்க முடியுமா என்றார், அவரது பேச்சைகேட்டு அதிர்ந்து போன குப்பன் ஐயா என்ன சொல்ரீங்க அப்படி போட்டா மலையே கானாமல் போய்விடும் ஐயா அப்புரம் ஊருக்குள் கல்விழும் என்றான்.

அதற்க்கு அவர் குப்பா இன்று இரவு இந்தியா சுதந்திரம் ஆகப்போகிரது அதனால் இந்த சந்தோச செய்தி சேலம் வரைக்கும் கேட்பது போல் வெடி போடனும் என்றார். குழம்பி போயிருந்த குப்பனை பார்த்து உன்னால் முடியுமா முடியாதா எனக்கு இன்று 66 குழியிலும் வெடிவைத்தாக வேண்டும் என்றார். அவனும் என்னங்கையா இப்படி சொல்ரீங்க உங்க உப்பை தின்று வளர்ந்த உடம்பு உங்களின் கட்டளையை ஏற்க்க மறுத்தால் எங்க பரம்பரைக்கே சோறுகிடைக்காது. சரிங்கையா நீங்க சொல்வது போல் இன்று இரவே அனைத்து குழியிலும் வெடி வைத்து விடுகிறென் என்று சென்னவன். வெடிமருந்து மூட்டையையும் ஹரிகேன் விளக்கையும் எடுத்து கொண்டு வெடிவைக்க கிளம்பிவிட்டான்.

மீண்டும் ஊருக்கு வந்தவர் மணியை பார்த்தார் மணி ஒன்பதை கடந்து விட்டது. வடக்கிலிருந்து வந்த அனைவரும் உடல் மரத்து போய் அங்காங்கே படுத்து கிடக்க பக்கத்தில் உள்ள சுந்தரத்தேவரையும் கனிநாடாரையும் வீடிற்க்கு சென்று அழைத்தார். இருவரும் என்னங்கையா இந்த ராத்திரியில் என்று கேட்க்க வடக்க இருந்து ஒரு முப்பது பேர் விருந்துக்கு வந்தாங்கே குடித்துவிட்டு கண்மண் தெரியாம தூங்கிறாங்க பெண்டு பிள்ளைங்க இருக்கிற இடம் அதனால் இவங்களை கொஞ்சம் ஊர் கடைசியில் இருக்கும் மலைக்கு அடிவாரத்தில் தூங்க வைக்கலாம் காலையில் அங்கேயே கல்கிடங்கில் குளித்துவிட்டு பிறகு ஊருக்கு வரட்டும் குடிகார பசங்க என்றார். அவர்களும் சரி என்று சொல்லி விட்டு ஒருவர் ஒருவராக மயங்கிகிடந்த அனைவரையும் தூக்கி மலை அடிவாரத்தில் போட்டு விட சரிப்பா எல்லோரும் போய்த்தூங்குங்க

மன்னித்துக்கொள்ளுங்கள் உங்க தூக்கத்தை கெடுத்து விட்டேன் என்று சொல்ல அவர்களும் பரவாயில்லை ஐயா என சொல்லி விட்டு மீண்டும் வீடு பொய் தூங்க சென்றுவிட்டார்கள்.

இப்பொழுது மணி 10 ஐ தாண்டிவிட்டது. ஊரே அயர்ந்து தூங்கி கொண்டிருக்க குழந்தை வேலுமட்டும் ஊர்த்தெருவில் ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது துண்டை தண்ணீரில் நனைத்துக்கொண்டு முதலில் அன்சாரி வீட்டிற்க்கு சென்றார். அங்கு அன்சாரியும் அவரின் இரு பையன்களும் வீட்டு தின்னையில் நன்றாக உறக்கத்தில் இருந்தனர். சாமிகளா எங்களையும் இந்த மண்ணையும் விட்டு விட்டு சென்று எப்படி வாழ்வீர்கள்.

அப்படியே நீங்கள் சென்றாலும் நீங்க எங்கோ ஒரு தேசத்தில் கஸ்டப்படுவதை கண்டு எங்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும் , வேண்டாம் நீங்கள் எங்களை விட்டு எங்கும் செல்ல கூடாது. நான் செய்யும் காரியம் தவறாக பட்டாலும் எனக்கு இதை தவிர ஒன்றும் தொனவில்லை கண்ணுகளா என்று மனதிற்க்குள் சொல்லி விட்டு துண்டை அவர்களின் முகத்தை நோக்கி உதர நீர்த்துளிகள் கண்ணில் பட்டது.

அன்சார் பட்டென்று எழுந்த உடன் குழந்தைவேலு பாய் மழைத்தூறல் எடுக்குது ஆலங்கட்டி மழை வரும் போல் இருக்கிறது. அதனால் குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டில் போய்த்தூங்குக என்ற உடன் தூக்க கலக்கத்தில் இருந்த அன்சாரியும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு செல்ல இதே காரனத்தைசொல்லி தின்னையில் படுத்திருந்த அனைவரையும் வீட்டில் போய் படுக்கச்சொல்லிவிட்டு ஊரில் இருந்த அனைத்து வீட்டில் கதவுகளை வெளிப்புரமாக தாழ் போட்டார்.

நேரம் சரியாக 11:30 ஆகியிருந்தது. அந்த கும்மிருட்டிலும் லாந்தர் விளைக்கினை எடுத்துக்கொண்டு வேகவேக மாக குப்பனின் குடிசையை நோக்கி சென்றவர். என்னப்பா ஆயிடுச்சா என்றார், அவனும் ஆமாங்கையா எல்லா குழியிலும் மருந்து வைத்துவிட்டேன். 10 குழிக்கு ஒரு குழி எர்த் அதனால் 6 குழி மருந்து பலமா இருக்கும் ஐயா ஆனா இப்படி ஒரு வேலையை நான் இதுவரைக்கும் செய்ததே இல்லை, எனக்கும் மனதில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு என்றான்.

அவரும் சரி உன் மனைவியையும் குழந்தையும் என்னுடன் அனுப்பிவிடு நீ கல்லு குகைக்கு போ சரியா 12 மணி க்கு நான் சங்கு ஊதுவேன் அந்த சத்தம் கேட்டதும் நீ வெடி வைக்க ஆரம்பி சரியா. என சொல்லி விட்டு அவனின் பதிலை எதிர்பாராமல் அவனது குழந்தைகளையும் மனைவியையும் அழைத்துகொண்டு வீட்டிற்க்கு வந்து விட்டார்.

வரும் வழியில் யாரும் வெளியில் படுத்திருக்கிறார்களா?என்று நோட்டமிட்டவாரே, வீடு வந்து சேர்ந்தவர், தனது மனைவியை எழுப்பி குப்பனின் மனைவிக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வை என சொல்லிவிட்டு கதவை தாழிட்டுவிட்டு மாடியறைக்கு வந்தவர் தூரத்தில் குப்பனின் ஹரிக்கேன் விளக்கு ஒளி புள்ளியாய் தெரிய, மலைக்கு இந்த பகுதியில் அந்த மனிதர்கள் படுத்திருப்பது கும்மிருட்டில் குப்பனுக்கு தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்துக்கொண்டு காங்கேயத்தில் சுதந்திரம் பெற்றதற்க்கான அறிகுறியாய் வான வேடிக்கை சத்த்ம் லேசாய் கேட்க்க, தனது கைகளில் சங்கை எடுத்து மூச்சை உள்ளிழுத்து முழக்க மிட ஆரம்பித்தார்.

முதலில் மெல்ல எழுந்த சங்கின் ஒலி அந்த இரவின் அமைதியை கிழித்துக்கொண்டு வேகமாக முழங்க, சங்கின் சத்ததை கேட்ட குப்பன் கையிலிருந்த ஜெர்மன் தயாரிப்பு பட்டிக்ஸன் பேட்டியில் இருந்த சாவியை திருக முதலில் கிழக்கே முகமாக வைத்த வெடி வெடிக்க அடுத்து பூகம்பம் வந்தது போல் பூமி அதிர்ந்தது.

ஒட்டு மொத்த வெடியும் ஒரே நேரத்தில் வெடிக்க, ஊரில் உள்ள வீடுகளின் ஓடுகளின் மீது கற்கள் பறந்து வந்து தாக்க, அன்சாரியின் மனைவி பயந்து போய் என்னங்க என்ன ஆச்சுன்னு போய் பாருங்க என சொல்ல அதற்க்கு அன்சாரி பாயோ ஆலங்கட்டி மழை பெய்கிறது, அதான் இப்படி சத்தம் சத்தம் கெட்டாமல் படுடி என தூக்கத்தில் சொல்லிவிட்டு தூங்க, கிட்டத்தட்ட அறைமணிநேரம் கழிந்த உடன்குழந்தைவேலு கீழே வந்து கதவை திறந்து பார்க்கிறார்,

ஒரே புகை மண்டலம் அந்த புகையிலும் அனைத்து வீட்டு கதவையும் மீண்டு சென்று தாழைவிலக்கி விட்டு குப்பா என குரல் கொடுக்க கல் குகைக்குள் இருந்து வெளிவந்த குப்பன் ஐயா சுதந்திரம் வந்துவிட்டதாய்யா என கேட்க்க ஆமாம் குப்பா இப்பதான் உன்மையான சுதந்திரம் வந்தது சொல்லி விட்டு சரி வா வீட்டிற்க்கு மற்றதை காலையில் பார்க்கலாம் என சொல்லிவிட்டு, பாதையில் கிடந்த கற்கள் இடர மனதில் இருந்த ஒரு இடரல் விலகியதால் இந்த இடரலை பொருட்படுத்தாமல் வீட்டிற்க்கு வந்தவர். நிம்மதியாக தூங்க ஆரம்பித்தார்.

1947 ஆகஸ்ட் 15 காலை பொழுது சேவல் கூவியது. வாசல் தெளிக்க வெளியே வந்த தனம் அம்மாள் ஒரே ஆச்சர்யத்தில் மூழ்கினார் கிழக்கே தெருவெல்லாம் ஒரே கல்லும் மண்ணும் புரியாமல் விழித்தவர், மெல்ல பொழுது புலர்வதை கண்டு வடக்கே பார்வையை செலுத்தியவர் அரண்டு போனார், திருமணமாகி வந்த 40 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வடக்கே அந்த மலையைதான் முதலில் பார்ப்பவர், இன்று அந்த மலை இருந்த இடம் தெரியாமல் போனது. என்னங்க என்ன ஆச்சு ராவிலே மலையை காணோம் என சொல்ல, அவரும் பதட்டமின்றி மாடியேறிவடக்கே பார்வையை செலுத்தியவர். அவரின் எண்ணப்படி நடந்திருந்தது.

வடக்கையும் தெற்க்கையும் இனைக்கும் ஒரே பாதை அடைபட்டு கிடந்தது. அந்த குன்று சுத்தமாக இருந்த இடமின்றி போயிருந்தது. ஆனால் அந்த கல் கிடங்கும் நேற்று வந்தவர்கள் படுத்திருந்த இடமும் பல நூறு அடி மணல் குன்றின் கற்ப்பத்தில் சென்று விட்டது.

அன்று ஊரில் எல்லோருக்கும் ஒரே குழப்பம் என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியவில்லை, குப்பனையும் அவனது குடும்பத்தினருக்கும் நிறைய சன்மானம் கொடுத்து காலையிலேயே அவர்களது ஊருக்கு அனுப்பிவிட்டார் வேலு.

ஜோசப்பிடம் வந்தவர்கள் பாதிராத்திரியில் எழுந்து போட்டாங்க காவாலிபயலுக சொல்லிட்டாவது போகலாமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார் அன்சாரி எந்த ஒரு சலமின்றி தனது ஆட்டு மந்தைகளை புதிய இடம் தேடி மேய்க்க அழைத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

7 Aug 2008

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட்டில் கேட்கலாம்

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட்டில் கேட்கலாம். பிரபல டாக்டர்கள் பதிலளிக்கிறார்கள்

கேன்சர் மற்றும் தீராத நோய்கள் பற்றிய சந்தேகங்களை இன்டர்நெட் மூலமாகவே தீர்த்துக் கொள்ளும் வகையில், புதிய வெப்சைட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சுதா பவுண்டேஷன் அமைப்பின் இந்த வெப்சைட்டில், பேஷன்ட்களின் கேள்விகளுக்கு பிரபல டாக்டர்கள் பதிலளிக்கிறார்கள்.

http://www.careultimate.com/ என்ற இந்த புதிய வெப்சைட்டில் கேன்சர் பற்றிய முழுதகவல்களும், உலக அளவில் கேன்சர் சிகிச்சை பற்றிய லேட்டஸ்ட் விவரங்களும் கிடைக்கும். இதில் கேள்விக்கு பதில் அளிக்கும் வசதி உள்ளது.

நோய் குறித்த சிகிச்சை, இரண்டாவது டாக்டரின் கருத்து ஆகியவற்றை கேட்கலாம். கேள்விகளுக்கு பிரபல டாக்டர்கள் பதில் அளிப்பார்கள். சிகிச்சையால் பலனடைந்த நோயாளிகளுடனும் கலந்துரையாட முடியும்.

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

மாணவ மாணவிகளுக்கு சலுகை விலை லேப்டாப்

தமிழகத்தில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு லேப் டாப் கம்ப்யூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு லட்சம் லேப் டாப் கம்ப்யூட்டர்களை 40 சதவீதம் குறைந்த விலையில் வாங்கி விற்க எல்காட் நிறுவனம் முன் வந்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ரூ.29,429 மற்றும் ரூ.31,717 ஆகிய இரண்டு விலைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிப்பதற்காக கடந்த மாதம் எல்லா கலெக்டர் அலுவலகங்கள், சென்னையில் உள்ள எல்காட் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் கண்காட்சி நடத்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அரசு அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள், முன்னாள் ராணுவத்தினரும் கம்ப்யூட்டர் பெறலாம் என்று எல்காட் நிறுவனம் அறிவித்தது.

இந்த லேப்டாப் கம்ப்யூட்டர்கள் பெறுபவர்கள் ஆன்லைனில் www.elcot.in என்ற இனயதளத்தில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதற்காக ஜூலை 31ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கம்ப்யூட்டர் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதையடுத்து லேப்டாப் கம்ப்யூட்டர் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தேதி ஆக.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

6 Aug 2008

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா? - பாகம் 2

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்ற கட்டுரை.
முன்பெல்லாம், எங்கள் ஊர் மற்றும் சுற்று வட்டாரப் பட்டினங்களில் சிலோன் சவ்காரம் (சோப்), சிலோன் புடவை, சிலோன் சாமான்கள் என்று புகழ் பறந்தது.


அதன் பின்னர் சிங்கப்பூர் சோப், சிங்கப்பூர் புடவை, சிங்கப்பூர் சாமான்கள் என்று எல்லோரிடமும் பேசப்பட்டது.

அந்த நேரங்களில் சிங்கப்பூர் மாப்பிள்ளை என்று சொல்லிப் பலவித வரதட்சணைகளை வாங்கிய பல மாப்பிள்ளைகள் பட்டினங்களில் இருந்தார்கள்.

சிங்கப்பூருக்குக் குருவியாகச் சென்று, வியாபாரங்களைச் செய்து, பணம் சம்பாதித்தவர்களைக் கண்டவர்கள் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுந்துக் கொண்டதுதான் வளைகுடா நாடுகள்.

கால மாற்றங்கள் வந்ததால், வளைகுடா நாடு சென்றால் வளம் பெறலாம் என்று பலர் நினைத்தனர். ஆனால் இங்கு நடக்கும் கதையே வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதிகமான செல்வமும் வசதியான வாழ்வும் கிடைக்கிறது என்று நினைத்து வளைகுடாவுக்கு வந்த நம் சமுதாய உள்ளங்கள், இப்போது 'எப்படி இங்கிருந்து போவது?' என்று வருத்தப்படுகிறார்கள் என்று சொல்வதைவிட மிகவும் வேதனைப் படுகிறார்கள் என்றே சொல்லலாம்.

வீட்டை விட்டும் தாய் நாட்டை விட்டும் பறந்து வந்த பறவைகள், பாசத்தைத் தாயக விமான நிலையத்திலேயே விட்டு விட்டு வருகிறார்கள். வளைகுடா நாடு என்பதில் ஓரெழுத்தை மாற்றிச் சொன்னால், வலை குடா நாடு என்று பொருள் படும். ஆம்!. இது வெறும் வலயல்ல, சிலந்தி வலை. சிலந்திக்கு அதுதான் பலம் மற்றும் பலவீனம். ஊரில் இருப்பவர்கள், நம்மை பலமாக எண்ணுகின்றனர். அவர்கள் நலமாக இருப்பதற்காக வேண்டி நாம் இங்கு பலவீனமாகப் போய்க்கொண்டு இருக்கிறோம்.

வளைகுடா நாட்டில் இருக்கும் போது நாம் பல நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாலும் நம்முடைய நினைவோ ஊரில் உள்ள கட்டிய மனைவி, நோய்வாய்ப்பட்ட தாய்-தந்தை, திருமணத்திற்குத் தயாராகிக்கொண்டு இருக்கும் அக்கா-தங்கைகள் ஆகியோருக்காக நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நினைப்புடன்தான் இருப்போம்.

நம்முடைய உடல் இங்கு இருக்கும் ஆனால் உள்ளமோ விமானப் பயணச்சீட்டு இல்லாமலே அடிக்கடி தாயகம் போய் வரும். இப்படியே நினைத்து நினைத்து பலர் நிம்மதி இழந்து, மன வேதனை, மனத் துயர் படுகிறார்கள். மன நிம்மதியற்ற வாழ்க்கையானது பல ஆண்டுகளாக நீளும் பட்சத்தில் நம்முடைய உடலில் பல நோய்கள் வர அதுவே காரணமாக இருக்கும்.

தம்முடைய உடலில் என்ன நோய் உள்ளது என்று தெரியாமலேயே வளைகுடாவில் வாழ்நாளைக் கழிப்பவர்கள் பலர். விடுமுறைக்குத் தாயகம் சென்றால் சாதாரணமாகச் சளிப்பிடித்து இருக்கும். அங்குள்ள மருத்துவரிடம் போய் காட்டினால் அவர், "ஊருப்பட்ட நோய் உங்களுக்கு உள்ளது" என்று கூறி ஒரு நீண்ட மருந்து பட்டியலைத் தருவார்.

அங்கு இருக்கும் போது வழக்கமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள். மீண்டும் வளைகுடாவுக்குத் திரும்பிய பிறகு தாயகத்திற்குத் தொலைபேசி செய்து, "எனக்குத் தெரிந்த ஒரு ஆள் ஊருக்கு வரார் அவர் இங்குத் திரும்ப வரும்போது அந்த மருந்தினைக் கொடுத்து விடவும் இந்த மருந்தினைக் கொடுத்து விடவும்" என்று அடிக்கடி போனில் சொல்வார்கள்.

விடுமுறை காலம் முடிந்து வளைகுடா நாடு வந்தால் அந்த மருந்து ஒரு சில பேர்களுக்கு இங்கு ஒத்து வராது. திரும்பவும் இங்குள்ள மருத்துவரிடம் காட்டுவார்கள். அவரும் மருந்துக்களை எழுதித் தருவார். அதனையும் சாப்பிடுவோம். இரண்டு மருந்தும் சேர்ந்து புதிய நோயினை நமக்குத் தரும்.

மன வேதனை மனக்கஷ்டம் ஏற்பட ஏற்பட சர்க்கரை வியாதியும் சேர்ந்தே வரும். உலகத்தில், வளைகுடா நாடானது சர்க்கரை வியாதிகள் பாதிப்பு உள்ள நாடுகளின் வரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்ற அறிக்கையினை துபையிலிருந்து வெளிவரும் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகையானது வெளியிட்டு இருந்தது.

வளைகுடாவில் உள்ள நமது சகோதரர்கள் பற்பல நோய்களுக்கு அடிமைப் பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு இங்கு உள்ள உணவுப் பழக்க வழக்கங்களை முக்கியமாகக் காரணமாகக் கூறலாம். இங்கு எல்லாமே ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையாக மாறிவிட்டது. முன்பெல்லாம் இட்லி, வடை, தோசை, இடியாப்பம், புரோட்டா ஆகியவை இயற்கையான முறையில் நமக்குக் கிடைத்துக்கொண்டு இருந்தன. ஆனால் வளைகுடாவில் இவையெல்லாம் தற்போது ரெடிமெட் உணவாகவும் ஃபாஸ்ட் ஃபுட்டாகவும் மாறி விட்டது. இவற்றினைச் சாப்பிடும்போது அந்த நேரத்திற்கு கொஞ்சம் ருசியாக இருக்கும். ஆனால் அதுவே பின்னர் நமக்கு நோய்கள் வரக் காரணமாக அமைந்து விடும்.

விடுமுறை நாட்களில், நண்பர்களைச் சந்திக்கச் சென்றால் தடாபுடலாக கோழி பிரியாணி வைப்பார்கள். எவ்வளவுதான் அவர்கள் மசாலாவைக் கணக்காகப் போட்டாலும் உணவு ருசியாக இருக்காது. "என்ன மாப்ளே, பிரியாணி நல்லவே இல்லை" என்று சாப்பிடும் நண்பர்கள் சொல்வார்கள். அதற்குக் காரணம், எப்போது அறுக்கப்பட்டது என்றே தெரியாத கோழியினை கடையில் வாங்கி பிரியாணி சமைப்பார்கள். தயாரிப்புத் தேதியும் முடியும் தேதியும் அழகாக அந்த கவரில் அச்சு அடித்து இருப்பார்கள். ஆனால் அதில் ருசி எங்குப் போனது என்பது யாருக்கும் தெரியாது.

பச்சைக் காய்கறிகளும் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. பல காய்கறிகள் பல நாடுகளிலிருந்துதான் வருகின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மைதான். அப்படியே இங்கு ஏதேனும் காய்கறிகள் விளைத்தாலும் அதற்கு அதிகமாக உரங்களை போட்டு பெருக்க அடித்து விடுவார்கள். உதாரணத்திற்கு இங்கு உள்ள கத்தரிக்காயினைப் பார்த்தாலோ மூட்டைகோஸைப் பார்த்தாலோ நம்ம ஊரில் உள்ள பலாப்பழம் தான் ஞாபகத்திற்கு வரும். ஏனெனில் அதிகப்படியான உரங்கள் போட்டதால் பெருத்து விடுகின்றன.

நாம் சமையல் செய்யும் போது அதிகமாக உப்பு போட வேண்டியதில்லை (வளைகுடாவாழ் சகோதரர்கள் உப்பினை அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்பது தனி விஷயம்) எல்லாமே அதிலேயே இருக்கும். செயற்கை உரமிட்டுப் பருக்க வைத்தவற்றைச் சாப்பிடும் போது நம்முடைய உடல் நலம் என்ன ஆகும்? சில உடல் உபாதைகளைப் பெறத்தான் செய்யும்.

விடுமுறை நாட்களில் சந்தோஷமாகக் குடும்பத்தினருடன் பேச வேண்டும் என்று ஆவலோடு தொலைபேசினால் அங்கிருந்து வரும் பதில் "ஏன் இன்னும் பணம் அனுப்பவில்லை?" என்று தாய் ஒரு பக்கம் தந்தை ஒரு பக்கம் கட்டிய மனைவி ஒரு பக்கம் புலம்புவார்கள் அப்போது நம்முடைய மனம் எண்ணும் 'பள்ளிக்கூடம் போகும் வயதில் சுமையாகத் தெரிந்த படிப்பு எங்களுக்கு இப்போது படிப்பினையாக இருக்கும்போது வாழ்க்கைச் சுமைகளை இன்னும் சுமக்கின்றோம் நெஞ்சங்களில்.

படிக்க வேண்டிய வயதில் படிப்பைத் தவிர அனைத்திலும் ஆர்வம் கொண்டு அலைந்ததற்குத் தண்டனை என்று நினைத்துக் கொள்வதால் பாலைவனத்தில் உள்ள சுடு மணல் எங்களைச் சுடவில்லை கத்தரி வெயிலில் காசுக்காகப் போராடுகிறோம். கண்காணாத் தொலைவில் இருப்பதால் நாங்கள் சிந்தும் வியர்வை துளிகளை நீங்கள் காணமாட்டீர்கள்.

வாழ்க்கைப் பயணத்தின் பாதியை பாலைவனங்களில் முடிந்துக்கொண்டோம். மூட்டைப்பூச்சிகளுடன் இங்கு வாழும் நாங்கள் ஊருக்கு செல்லும் போது மட்டும் மூட்டை முடிச்சுகளுடன் செல்கிறோம் - குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்த. என்ன வாழ்க்கை இது?

வளைகுடா நாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு, சம்பளத்தினைச் சரியாக கொடுப்பது இல்லை. ஆறு மாதமோ ஏழு மாதமோ சம்பளம் கொடுக்காமல் இழுத்து அடிப்பார்கள். தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதியினையும் செய்வதில்லை என்ற புகாரும் வருவதாக வளைகுடா பத்திரிகைகள் நமக்கு தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளில் பல அடிப்படை தொழிலாளர்களுக்கு ஊரில் பேசப்பட்ட சம்பளத்தொகையும் இங்கு வந்தபின் கொடுக்கப் படும் சம்பளத்தொகையும் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கும்.

அந்தக் குறைந்த சம்பளமும் பல மாதங்கள் கிடைக்காத இக்கட்டான சூழலில், குடும்பப் பசியைத் தீர்ப்பதற்காக வளைகுடாவுக்கு வந்தவர்கள், தன் பசிக்கு உணவு தேடிக் கொள்ள வேறு நிறுவனத்திடம் அவர்கள் ஓடிப்போய் வேலை செய்கிறார்கள். அவர்களிடம் கடவுச்சீட்டு மற்றும் தொழிலாளர் அடையாள அட்டை என்று எதுவும் கையில் இருக்காது. ஆனால் தைரியமாக வேறு நிறுவனத்திடம் போய் வேலை செய்வார்கள். அங்கும் இதுபோல் சம்பளம் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் தகாத குற்றச் செயல்களில் ஈடுப்படுகிறார்கள்.

அண்மைக் காலமாக துபையிலும் மற்றும் உள்ள வளைகுடா நாடுகளிலும் பல குற்றங்களும் தகாத சம்பவங்களும் நிறைய நடக்க ஆரம்பித்து விட்டன.
இதனைக் கருத்தில் கொண்ட துபைய் அரசாங்கமானது, இத்தகைய குற்றங்களைச் செய்பவர்கள் யார் என்று ஆய்வு செய்து, அவர்கள் அனைவரும் வேலைக்கு வந்த நிறுவனத்திலிருந்து 'ஓடிப் போய்' வேலை செய்பவர்கள் என்று அறிக்கையினை வெளியிட்டது. ஆகையால், 'ஓடிப் போனவர்கள்' உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கையினை ஓடிப் போன தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனத்திற்கும் எதிராக எடுக்கப்படும் என்ற அரசு அறிக்கை வெளியானவுடன் 'ஓடிப் போன' பலர் தாயகம் திரும்பி விட்டனர்.

23.9.2007 தேதிவரை துபையில் 152,375 'ஓடிப் போன' தொழிலாளர்களுக்கு அவுட்பாஸ் கொடுத்து உள்ளனர். ஒரு சில தொண்டு நிறுவனங்களும் துபையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு உதவி செய்து அவர்கள் தாய் நாடு திரும்பி செல்வதற்கு ஏதுவாகச் சில விமானங்களை வாடகைக்கு எடுத்து அந்தத் தொழிலாளர்களைத் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அணையாமல் இருக்கும் அணையா விளக்கும் ஒருநாள் அணையும். ஆனால் நாங்கள் இந்த அக்கினியில் அணையாமல் காலைப் பட்டினியால் தினம் தினம் சாகின்றோம். ஏனெனில் வேலைக்குப் போக வேண்டும் என்ற அவசரம் காலையில் சாப்பிட்டால் வேலைக்குச் செல்வதற்குரிய பேருந்து போய் விடும். வண்டியின் ஓட்டுனர் நம்மைத் திட்டிக்கொண்டே ஒலியினை எழுப்புவான். உடனே செல்ல வேண்டும். இல்லையென்றால் சூப்பர்வைசர் திட்டுவான். அப்படி இல்லையென்றால் ஃபோர்மேன் திட்டுவான் இதே புலம்பல்தான் தினந்தோறும்.

குறிஞ்சி மலரானது பூக்கும்போது, அந்த இடமானது வசந்தமாக காட்சி தரும். அதுபோல் எங்களுக்கு ஒரு வசந்தம் பல வருடத்திற்கு ஒரு முறை விடுமுறைக்காகத் தாய் நாடு சென்றால் மட்டும். வாலிபங்கள் துள்ளும் வயதில் வசந்தத்தினைக் காணாமல் வானுயர்ந்த கட்டடங்களை காணுகிறோம். நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் கண்ணாடி மாளிகைகள் உடைந்து போன கண்ணாடி சில்களாய் கனவுகள் எங்கள் காலடியில்.

பாலைவனத்தில் மிக வேகமாக ஓடும் ஒட்டகம், அதிகச் சுமையின்றி நிதானமாக நிமிர்ந்து நடக்கிறது. சுமைகளை இறக்கி வைக்க முடியாமல் சுமந்துக்கொண்டு கூன் விழுந்து நடக்கிறோம் நாங்கள்.

கனவுகளும் கற்பனைகளும் சேர்ந்த கானல் நீர் வாழ்க்கைதான் எங்கள் வாழ்க்கை. உயர்ந்த கோபுரக் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு எந்நாளும் உழைக்கின்றோம் நடைப்பிணமாக வாழ்க்கைப்பயணம் வசந்தமாக மாறுமா! எண்ணங்கள் மட்டும் மனதில்.

என்ன கொடுமை? உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறது எங்களுக்கு.

சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும்.

ஆக்கம்: அபூ ஆஃப்ரீன் முத்துப்பேட்டை

4 Aug 2008

புற்று நோய்க்கு இலவச சிகிச்சை

இப்போதெல்லாம் புற்றுநோய் பணக்காரர்களின் வியாதி அல்ல என்பது தெளிவாகி விட்டது. ஏழைகளும் பல்வேறு விதமான புற்று நோயால் அவதிப்படுகிறார்கள்.

சிகிச்சை, மருத்துவமனை செலவு என தவிக்கும் அவர்களுக்கு சென்னையில் இருக்கும் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட் ஆதரவுக்கரம் நீட்டுகிறது.

இதன் தலைவர் வி. கிருஷ்ணமூர்த்தி. இந்த ட்ரஸ்ட், டாக்டர் சாந்தா வின் புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த ட்ரஸ்ட் ஏழை புற்று நோயாளிகளை முழுமையாகப் பாதுகாக்கிறதா?

ஆம். முழுமையாக. ஏழை புற்றுநோயாளிகள் எந்த ஊரில் இருந்து வந்தாலும் சரி, சிகிச்சை முடியும் வரை இங்கு முழுக்க முழுக்க இலவசமாகத் தங்கி இருக்க முடியும்.

காபி, சிற்றுண்டி, மதிய - இரவு உணவு, மாலை நேர பால் என்று நோயாளிகளுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

ஏழைகளைக் காக்க இறைவன் எங்காவது இருந்து கொண்டுதான் இருக்கிறான்.

-குமுதம்

3 Aug 2008

பள்ளி மாணவர்களுக்கென புதிய இணையதளம் துவக்கம்

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீசரண் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக www.topperlearning.com என்ற இணையதளத்தைத் தொடங்கியுள் ளோம்.
இதில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்காக கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களும், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், கணக்கு மற்றும் உயிரியல் பாடங்களும் கற்றுத் தரப்படும்.
சிபிஎஸ்சி மற்றும் மாநில அரசின் பாடத்திட்டங்கள் இதில் பின்பற்றப்படும். மாதிரித் தேர்வுகள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கான ஆலோசனைகளையும் இந்த இணையதளம் வழங்கும்.
இதற்கு ஆண்டுக்கு ரூ.1040 கட்டணம் பெறப்படும். சிடி வடிவிலும் மாணவர்கள் இதனைப் பெறலாம். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த இணைய தள சேவை வழங்கப்பட உள்ளது.
முதல் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களை உறுப்பினர்களாகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் ஹைதராபாத்திலிருந்து மட்டும் 2 லட்சம் மாணவர்கள் இருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

30 Jul 2008

தமிழில் விண்ணப்பம் தராவிட்டால் கிரெடிட் கார்டு நிறுவனம் மீது புகார் தரலாம்

தமிழில் விண்ணப்பம் தராவிட்டால் கிரெடிட் கார்டு நிறுவனம் மீது புகார் தரலாம் ரிசர்வ் வங்கி இயக்குனர் அறிவிப்பு

கிரெடிட் கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் தமிழில் விண்ணப்பங்கள், கடிதங்களை தர வேண்டும். அப்படி தராவிட்டால் வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் செய்யலாம்.

அதேபோல் கிரெடிட் கார்டு மோசடிகள் குறித்தும் புகார் செய்யலாம் என ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எப்.ஆர்.ஜோசப் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் நேற்று அவர் கூறியதாவது:

கிரெடிட் கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்பங்களை, கடிதங்களை தமிழில் வழங்க வேண்டும் என்று 6 மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதே போல் கிரெடிட் கார்டுக்கான கடன்களை வசூலிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அப்படி செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி குறைதீர்ப்பாளருக்கு அனுப்பலாம். அவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்.

வங்கி குறைதீர்ப்பாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பல்வேறு பிரச்னைகள் குறித்து 450 புகார்கள் வருகின்றன. அதில் 30 சதவீத புகார்கள் கிரெடிட் கார்டு குறித்த புகார்கள்தான். எனவே உங்கள் புகார்களை ரிசர்வ் வங்கிக்கு கடிதம் மூலமாகவோ, போன், பேக்ஸ் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

கிரெடிட் கார்டு பிரச்னைகள் மட்டுமின்றி வங்கி தொடர்பான எல்லா பிரச்னைகள் குறித்தும் இங்கு புகார் செய்யலாம். இவ்வாறு ஜோசப் தெரிவித்தார்.

புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி:
வங்கி குறை தீர்ப்பாளர்,
இந்திய ரிசர்வ் வங்கி,
எண்:16, ராஜாஜி சாலை,
சென்னை -600 001
தொலைபேசி: 044-2539 9174 தொலைநகல்: 044 - 2539 5488
மின்னஞ்சல் :bochennai@rbi.org.in
இணையதளம்: www.rbi.org.in

வீட்டுக்குள்ள 'தம்' அடிக்க கணவனை அனுமதிக்காதீங்க

வீட்டுக்குள்ள 'தம்' அடிக்க கணவனை அனுமதிக்காதீங்க

மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வரும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை

வீட்டில் கணவர் புகை பிடித்தால், அந்த புகையை சுவாசிக்கும் மனைவிக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இன்றைய நாகரிக மோகத்தில் சிகரெட் புகைப்பதை அந்தஸ்தின் சின்னமாக பெரும்பாலான ஆண்கள் கருதுகிறார்கள். புகை பிடிக்கும் பழக்கத்தால் பாதிப்பு அதிகம் என்று தெரிந்தும் அதை விடமுடியாமல் பலர் தவிக்கின்றனர். ஆனால், புகை பிடிக்கும் பழக்கத்தால் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புகைப்பவர்கள் உள்ளே இழுத்துவிடும் புகையை வீட்டில் உள்ள மற்றவர்கள் சுவாசிக்கின்றனர். இப்படி புகையை தொடர்ந்து சுவாசிப்பதால் உடல்நலம் கெடுகிறது. இந்த பாதிப்பு எப்போதும் கணவனுடன் வீட்டில் இருக்கும் மனைவிக்குதான் அதிகமாம்.

50 வயதுக்கு மேற்பட்ட 8,000 ஜோடிகளின் உடல் நிலையை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் மனைவிக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட 72 சதவீதம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளதாக ஆய்வுக் குழுவின் தலைவர் டாக்டர் மரியா கூறினார்.

மாரடைப்பு வராமல் தடுக்க, வீட்டுக்குள் புகை பிடிக்க கணவனை அனுமதிக்காதீர்கள் என்று பெண்களுக்கு ஆய்வாளர்கள் ஆலோசனை கூறி உள்ளனர்.

திருமணமாத பெண்கள் என்றால், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களை மணக்கக் கூடாதாம். பெண்கள் நினைத்தால் முடியாததும் உண்டா?

29 Jul 2008

வளைகுடா வாழ்க்கை – வரமா? சாபமா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்....

வளைகுடா வாழ்க்கையால் பொருளாதாரம் பெருகுகிறது, வசதிகள் அதிகரிக்கின்றன, வாழ்க்கைத்தரம் உயருகிறது, மேலும் ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத் போன்ற வணக்கங்களைத் தம் தாய்நாட்டிலிருந்து வந்து நிறைவேற்றுவதில் இருக்கக்கூடிய சிரமமும் பணச்செலவும் கணிசமாகக் குறைவதால் வளைகுடாவில் வேலை செய்பவர்கள் குறைந்த தூரமே பயணித்து அதிகம் பயனடைகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இவர்களின் உறவினர்களில் பெரும்பாலோர் - குறிப்பாகப் பெற்றோர்கள், பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள் மற்றும் இரத்த பந்தங்களில் அதிகமானவர்கள் மேற்சொன்ன வணக்கங்களுக்காக இங்குள்ளவர்களின் உதவியால் அழைத்து வரப்பட்டுப் பயனடைகின்றனர் என்பதும் மறுக்க முடியாது.

ஆனால் மேற்சொன்னவற்றில் பயன்கள் மற்றும் இலாபம் இருந்தாலும், அவற்றோடு நஷ்டமும் குறைபாடுகளும் அதிகமாக இருக்கின்றன என்பதும் உண்மையாகும். அவற்றை ஒருவரியில் கூறாமல் பட்டியலிட்டுக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.

1. பெற்றோருக்கு செய்யும் கடமைகளில் குறைபாடு

பொதுவாக 20 வயதில் வளைகுடா வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கக்கூடிய ஒரு மனிதர் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள், ஆகக் குறைந்த பட்சமாக ஒரு வருடமாவது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். இந்த ஒன்று / இரண்டு வருட வாழ்க்கையில் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் பெரும்பாலானவற்றைச் செய்ய தவறிவிடுகிறார். இந்தக் காலங்களில் எத்தனை தலைவலிகள், வயிற்றுவலிகள், இனிப்புநீர் அதிகரிப்பால் அல்லது குறைவால் அவதிப்படுதல், மாரடைப்பு, சமீப காலங்களில் ஆட்டிப் படைத்த சிக்கன்குனியா மற்றும் இவற்றில் குறிப்பிடாத இன்னபிற வியாதிகளால் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகக்கூடிய நேரத்தில் தன் பெற்றோரை மருத்துவரிடம் கொண்டு செல்ல, பணிவிடை செய்ய என எத்தனை பேர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கணக்குப் பார்த்தால் எஞ்சுவது மிக மிகக் குறைவு.

இதைவிடப் பெற்றோரின் மரணத்தின்பொழுது, ஜனாஸாத் தொழுகை மற்றும் நல்லடக்கத்தின் பொழுது உடனிருந்தவர்கள் எத்தனை பேர்?. தனது தாயின், தந்தையின் கடைசி மூச்சினைக் காண கிடைக்கவில்லையே என எத்தனை உள்ளங்கள் ஏங்கி இருக்கும்?. அதேபோல் தனது கடைசி மூச்சு, தான் பெற்ற மக்களுக்கு மத்தியில் நிகழவேண்டும் என்று எத்தனை பெற்றோர்களின் உள்ளங்கள் நினைத்திருக்கும்? அதற்கெல்லாம் சாவு மணி அடிக்கிறது இந்த வளைகுடா வாழ்க்கை.

பெற்றோருக்கு நன்றி செலுத்துவது, உபகாரம் புரிவது மற்றும் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமான அமல்கள் யாவை என்பது குறித்து அல்லாஹ்வின் வேதமும் நபிமொழியும் என்ன சொல்லுகின்றன என்பதைப் பார்ப்போம்:

"நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் (இருவருக்கும் நலன் நாடுவது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தல் இரண்டு வருடங்கள் ஆகும். ஆகவே, நீ எனக்கும், உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது" (அல்குர்ஆன் 31: 14).

அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி(ஸல்) அவர்களிடம் "செயல்களில் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது எது?" என்று கேட்டேன். அதற்கவர்கள், "தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்" என்றார்கள். "பின்னர் எது?" என்று கேட்டேன். அதற்கு, "பெற்றோருக்கு நன்மை செய்வதாகும்" என்றார்கள். (ஹதீஸின் ஒரு பகுதி) (புகாரி, முஸ்லிம்)

இப்படியாக பல்வேறு சிறப்புகளையும், மகத்துவத்தையும் பெற்றிருக்கக்கூடிய பெற்றோர்களில் ஒருவரான தாயின் சிறப்பை மேன்மைப்படுத்தி சிலாகித்துக் கூறக்கூடிய மேலும் சில நபிமொழிகளையும் காண்போம்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் அழகிய தோழமைக்கு மனிதர்களில் அதிக உரிமை பெற்றவர் யார்?" என வினவினார். அதற்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள், "உம் தாய்" என்றார்கள். "பின்னர் யார்?" என அவர் வினவினார். அதற்கவர்கள், "உம் தாய்" என்றார்கள். "பின்னர் யார்?" என அவர் வினவினார். அப்பொழுதும் "உம் தாய்" என அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் "பின்னர் யார்?" என்றார் அப்பொழுது, "உம் தந்தை" எனக் கூறினார்கள். (புகாரீ: 5514)

"வயது முதிர்ந்த தன் பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றிருந்தும் (அவர்களின் நலன் நாடாமல் புறக்கணித்து) சுவனம் செல்லாமல் போய்விட்ட மனிதன் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக! பின்னர் நாசமடைவானாக!" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) அவர்கள்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் மிக தெளிவாக விளக்குகின்ற செய்தி யாதெனில், பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் நன்றியுடையவர்களாக இருப்பதுமாகும்.

பெற்றோருக்குப் பணிவிடை செய்யக்கூடிய விஷயத்திலாவது பெற்றோருக்கு ஒருவருக்கு மேற்பட்ட மக்கள் இருந்து அவர்களில் ஒருவரோ அல்லது அதிகமானோரோ பெற்றோருடன் இருந்து மற்றவர்கள் வளைகுடா வாழ்க்கையின் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தை அனுப்பிக் கொடுத்து ஊரில் இருக்கக்கூடிய மற்ற மக்கள் மூலம் கவனிக்கப்படுகிறார்கள் என்றால் ஓரவிற்கு ஜீரணித்துக் கொள்ளலாம். ஆனால் அடுத்து நாம் பார்க்க இருக்கின்ற பாதிப்புகள் குறித்து வருந்தாமல் இருக்கமுடியவில்லை.

2. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் செய்ய வேண்டிய கடமைகள்

திருமணம் முடித்த எத்தனையோ வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் வயிற்றைக் கழுவ வளைகுடாவில் தஞ்சம் புகுந்துள்ளார்கள். அவர்களில் எத்தனை பேர் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் இல்லற வாழ்க்கையை முழுமையாக அனுபவித்தவர்கள்? திருமணம் முடித்த ஒரேநாளில், ஒரேவாரத்தில், ஒரே மாதத்தில் என எத்தனை சகோதர-சகோதரிகள் திருமண பந்தத்திற்கு முன்னாலேயே வளைகுடாவுக்கு வாழ்க்கைப் பட்டதால் பிரிய மனமில்லாமல் வாழ்க்கைத் துணையைப் பிரிந்து செல்கிறார்கள். கணவன், மனைவிக்கு மற்றும் மனைவி, கணவருக்கு செய்யவேண்டிய கடமைகளை முறையாக, முழுமையாக நிறைவேற்றுகின்றார்களா என்றால் அது மிக சொற்பமே.

குறிப்பாக, திருமணம் முடித்த நாளிலிருந்து 20 வருடகாலம் வளைகுடாவில் வாழ்க்கைப் படகினை ஒருவர் ஓட்டியிருப்பாரேயானால் அவரது இல்லறவாழ்வின் காலம் எத்தனை எனச் சராசரியாகக் கணக்குப் பார்த்தால் அது குறைந்தபட்சம் 24 மாதமும் அதிகபட்சமாக 48 மாதமுமாகும். அதாவது 2 வருடம் முதல் 4 வருடம் மட்டுமே.

இளமையில் பெறவேண்டிய சுகத்தை அடையவிடாமல் பொருள் சுகம் தடுக்கிறது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தக் கதையாக, வருடத்தில் அல்லது இரண்டு வருடத்தில் ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை நாட்டிற்குச் சென்று மனைவியிடம் இல்லற வாழ்க்கையில் ஈடுபடக்கூடியவர்கள் வளைகுடா திரும்ப வேண்டிய நாட்கள் நெருங்க நெருங்க இருவர் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் ஏக்கங்களை வார்த்தைகளால் கூற முடியாது. அதனை உணர்ந்தவர்கள் அனைவரும் அறிவர்.

அடுத்து வரக்கூடிய விடுமுறை வரைக்கும் இருவருக்கும் இல்லறமென்ற நல்லறம் கிடையாது. உள்ளத்தில் புரண்டெழும் ஏக்கங்களை எழுத்திலும் (கடிதத்திலும்), பேச்சிலும் (தொலைபேசியிலும்) பறிமாறிக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் இறையச்சத்தைப் பெற்றிருக்கின்ற நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகளைத் தவிர மற்றவர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் அந்நிய ஆடவர்களோடு பழகக்கூடிய சூழ்நிலையால் வழிதவறிவிடாமல் இருக்கவும் வளைகுடாவில் இருக்கக்கூடிய ஆடவர்கள் அந்நியப் பெண்களோடு பழகக்கூடிய சூழ்நிலையால் வழிதவறிவிடாமல் இருக்கவும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக வழிதவற வாய்ப்புகள் உள்ளன என்பதையும் இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

இதற்கெல்லாம் காரணம் வளைகுடா வாழ்க்கை ஏற்படுத்திய பிரிவுதான். கணவன்-மனைவி மத்தியில் உரிமைகள் வழங்குதல் குறித்து நபி(ஸல்) அவர்களின் போதனையினை இரத்தினச் சுருக்கமாக ஒன்றைக் கூறினால் இவ்விடத்தில் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அபூ ஜுஹைபா வஹப் பின் அப்தில்லாஹ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள், ஸல்மான்(ரலி) அவர்களுக்கும் (அன்ஸாரியான)அபூதர்தா(ரலி) அவர்களுக்கும் மத்தியில் சகோதரத் தோழமையை ஏற்படுத்தினார்கள். ஸல்மான்(ரலி) அவர்கள் அபூதர்தா(ரலி)வைச் சந்தித்தார்கள். அப்பொழுது (அவர் மனைவி, உம்முதர்தா(ரலி) (சாதாரண)பழைய ஆடை அணிந்திருப்பதை ஸல்மான்(ரலி) அவர்கள் பார்த்தார்கள். "உங்களது விஷயம் என்ன?(ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள்?)" என அவரிடம் ஸல்மான்(ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "உம் சகோதரர் அபூதர்தா(ரலி)விற்கு உலக விஷயங்களின் பால் தேவையிருப்பதில்லை (அதனால் நான் என்னை அலங்கரித்துக் கொள்வதில்லை)" என்றார்கள்.

பின்னர் அபூதர்தா(ரலி) அவர்கள் வந்தார்கள். ஸல்மான்(ரலி)வுக்காக உணவு தயாரித்து அவரிடம் "நீங்கள் சாப்பிடுங்கள்! நான் நோன்பாளி" எனக் கூறினார்கள். உடனே ஸல்மான்(ரலி) அவர்கள், "நீங்கள் சாப்பிடாதவரை நான் சாப்பிடமாட்டேன்" எனக் கூறவே அவர் (தமது நஃபில் நோன்பை முறித்து) அவருடன் சாப்பிட்டார்கள். பின்னர் இரவானதும் அபூதர்தா(ரலி) அவர்கள் (நஃபில்) தொழுகைகளைத் தொழ எழுந்து நின்றார்கள். உடனே ஸல்மான்(ரலி) அவர்கள், அவரிடம் "உறங்குவீராக!" எனக் கூறினார்கள். (சிறிது) உறங்கினார். பின்னர் (எழுந்து நஃபில்) தொழ நின்றார்கள். அப்பொழுதும் ஸல்மான்(ரலி) அவர்கள் "உறங்குவீராக!" எனக் கூற அவர்கள் உறங்கிவிட்டார்கள்.

இரவின் கடைசிப் பகுதி ஆனதும் ஸல்மான்(ரலி) அவர்கள், அபூதர்தா(ரலி) அவர்களிடம் "இப்பொழுது எழுவீராக!" என்றார். பின்னர் இருவரும் (நஃபில்) தொழுதார்கள். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் ஸல்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள்: "உம் இரட்சகனான அல்லாஹ்விற்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளன. உமது ஆன்மாவிற்கு உம்மிடம் சில உரிமைகள் உள்ளன. உம் குடும்பத்தினருக்கும் உம்மிடம் சில உரிமைகள் உள்ளன. ஒவ்வொரு உரிமையை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது உரிமையை வழங்குவீராக!" அபுதர்தா(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸல்மான்(ரலி) அவர்கள் கூறியதைக் கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் "ஸல்மான்(ரலி) உண்மை கூறிவிட்டார்" எனக் கூறினார்கள். (புகாரி) மேற்கண்ட ஒரு நபிமொழி, மனைவிக்குக் கணவன் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்துத் தெள்ளத்தெளிவாக விளக்கிவிட்டது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் திருமணம் கண் மற்றும் அபத்தை பாதுகாக்கின்றது (ஹதீஸ்). திருமணம் ஈமானின் பாதி (ஹதீஸ்).
போதுமான சக்தியிருக்குமேயானால் திருமணம் செய்து கொள்ளுங்கள் அல்லது நோன்பிருந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஹதீஸ்). ஆக, திருமணமானது ஷைத்தான்களுடைய தீங்கிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் பொழுது கேடயத்தைப் பயன்படுத்தக்கூடிய மனிதனும் கேடயமும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் இரண்டிற்கும் பாதுகாப்பில்லை என்பது மட்டுமில்லாமல் இரண்டிற்கும் எந்த நேரத்திலும் இடையூறுகள் மற்றும் பிரச்சினைகள் வரலாம்.

3. குழந்தைகளுக்குச் செய்யும் பொறுப்புகளில் குறைபாடு:

குழந்தைப் பிறப்பின் காரணமாக அடையக்கூடிய தாயின் வேதனையை எத்தனை பேர்கள் கண்டிருக்கிறார்கள்?
குழந்தை பிறக்கின்றபோது தன்னுடன், தன்னுடைய கணவன் இல்லையே என்று எத்தனை மனைவியர் கண்ணீர் விட்டிருப்பர்?
தான் பெற்ற குழந்தையின் முகத்தை ஒருசில மணித்துளிகளில் எத்தனை தந்தை கண்டிருக்கிறார்?
தன்னுடைய குழந்தைகளின் அழகான சிரிப்பை, அழுகையை, செல்லமான கோபத்தை, உறங்கும் மற்றும் உண்ணும் பாணியினை, தத்தித் தவழ்ந்து நடக்க முயலும் பொழுது தவறிவிழும் கண்கொள்ளாக் காட்சியினை, மழலைப் பேச்சினை இன்னும் இதுபோன்ற சிறு சிறு இன்பங்களைக் கண்டுகளித்தவர்கள் எத்தனை பேர்?
பிறந்த குழந்தை(களு)க்குத் தாயானவள், தனக்குப் பிறகு அறிமுகம் செய்யக்கூடிய இரண்டாம் நபர் யாரெனில் குழந்தையின் தந்தை. ஆனால் தந்தை முகம் பார்க்கும் நிலையில் விட்டுவைக்கவில்லையே இந்த வளைகுடா வாழ்க்கை?

குழந்தை(களு)க்கு இவ்வுலகிலும் மற்றும் மறுவுலகிலும் பயன்தரக்கூடிய கல்வியைக் கொடுக்கக்கூடிய விஷயத்திலும் தந்தையின் பங்கு மிக மிகக் குறைவுதான். குழந்தை(கள்) என்ன கற்றிருக்கிறார்கள்?
என்ன கற்கப் போகிறார்கள்? எப்படிக் கற்கிறார்கள்? கற்றுத் தரக்கூடிய ஆசிரியர்களின் நிலை என்ன? பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிலை என்ன? சகமாணவ மற்றும் மாணவிகளின் ஒழுக்கநிலை எவ்வாறு உள்ளது?
யார் யாரோடு பழகுகிறார்கள்? எந்த நல்ல விஷயங்களை வளர்த்துள்ளார்கள் அல்லது தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகியுள்ளார்கள்? என்பன போன்றவற்றை அறிந்து வைத்துள்ள தந்தையர் எத்தனை பேர்?

கணவன் மனைவியாக வளைகுடாவில் குடும்பம் நடத்தக்கூடியவர்களில் கணிசமானவர்கள் ஒரு சில வருடங்களுக்குப் பிறகு தன் பிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு தான் மட்டுமே இங்கே வாழ்கிறார்கள். இதனால் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் பாசமும் குழந்தைகளுக்குக் கிடைக்காமல் வளர்ந்து நாளடைவில் பெற்றோரை மதிக்காத, எதிர்க்கக்கூடிய மக்களாய் மாறிவிடும் கொடுமையும் ஏற்படலாம்.

4. உறவினர்கள் மற்றும் சமுதாய மக்களுக்கு

தொடர்ச்சியாக நிகழக்கூடிய மரணம், பிறப்பு, சுன்னத்தான திருமணங்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய இரு பெருநாள் தினங்கள், விடுமுறை நாட்கள் இன்னபிற இனிய நாட்களை உறவினர்களோடும் சமுதாயத்தோடும் பகிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்?
பெற்றோர்கள், பிள்ளைகள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் மற்றும் சமுதாய மக்கள் மரணித்தபோது மய்யித்துகளை நேரில் கண்டவர்கள், ஜனாஸாத் தொழுகையில் கலந்து கொண்டவர்கள், அடக்கம் செய்யக்கூடிய நிகழ்வுகளில் உடன் நின்றவர்கள் நம்மில் எத்தனை பேர்?

5. வீண் விரயம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை

இயல்பாகிப்போன நடைமுறையைச் சொல்லப்போனால் நம் வீட்டுப் பெண்களும் சரி, நம்முடைய குழந்தைகளும் சரி கிடைக்கின்ற வருமானத்தைவிட அதிகமாகச் செலவுகள் செய்ய பழகியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் கூறியதுபோன்று ஒரு குடும்பத்தின் முதலாவது நபர் வளைகுடா வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்னால் இருந்த வாழ்வாதாரச் செலவுகளையும் அதற்குப் பிறகுள்ள செலவுகளையும் ஒப்பு நோக்கிக் கணக்கிட்டால் மிகப் பெரிய வித்தியாசத்தைக் காண முடிகிறது.

சாதாரணமாக மாதந்தோறும் ரூபாய் 3000 மாத்திரமே தன்னுடைய மனைவி, மக்களுக்காக அனுப்பி கொடுத்தார் ஒரு சகோதரர். ஊரிலுள்ள அவருடைய மனைவியும் கணவரின் சூழ்நிலை அறிந்து அந்தப் பணத்தில் மாதாந்திர செலவுகள் போக ஏறக்குறைய ரூபாய் 1000 வரையில் சேமிக்கக்கூடியவராகவும் இருந்திருக்கிறார்.

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அக்கம்பக்கத்திலுள்ள வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களின் பெற்றோர்களும் மனைவிகளும் வாழக்கூடிய ஆடம்பரமான, பெருமையான, பகட்டான மற்றும் வீணான செலவுகளைக் கண்ட பின்னர் 'தானும் ஏன் அதுபோன்று வாழக்கூடாது?' என்று அந்தப் பெண்ணை எண்ண வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வீணான மற்றும் அனாவசியமான பொருட்களுக்கு செலவு செய்ய வைத்துள்ளது இந்த வளைகுடா வாழ்க்கை.

எப்படிபட்ட நிலையென்றால் ஆடம்பர மற்றும் சொகுசான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டதின் காரணத்தால் முதலில் டெலிவிஷன் பெட்டி வீட்டில் நுழைந்தது. பிறகு டெலிபோன், மொபைல், வீடியோ, வீசீடீ, டீவீடீ, ஆடியோ, வாசிங்மெசின், பிரிஜ், மெக்ரோ ஓவன், விதவிதமான சோபாக்கள், வாட்டர் கூலரில் தொடங்கி ஏர்கண்டிஷன் பெட்டி வரை. (இந்த பட்டியலில் குறிப்பிடாத பொருள்களும் அடங்கும்). இதுபோன்ற சாதனங்கள் தன் வீட்டில் இல்லையென்றால் தன்னை மற்றவர்கள் மதிப்பற்றவராகக் கருதுவார்கள் என்ற காரணம் இதற்கெல்லாம் கற்பிக்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் ஷிர்க் மற்றும் பித்அத்தான செயல்களை, நிகழ்ச்சிகளை, சம்பவங்களைக் காரணங்காட்டி வீணான விருந்து உபசரிப்புகள் எனச் செலவுகள் வளர்ந்துக் கொண்டே செல்கின்றன.

இதனால் வருமானம் போதாக்குறை ஏற்படுகிறது. தன்னிறைவு ஏற்படுவதற்குண்டாக சாத்தியகூறுகள் மிகக் குறைவாக உள்ளதால் வளைகுடா வாழ்க்கையை விட்டு மீள முடியாத நிலையில், கம்பெனியாகப் பார்த்து, "உனக்கு வயதாகிவிட்டது. நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இனிமேல் உன்னால் உழைக்க முடியாது. இதற்கு மேல் நீ இருக்க வேண்டாம் உன்னுடைய நாட்டிற்குத் திரும்பி சென்று விடு" என்று அனுப்ப வேண்டும் அல்லது அல்லாஹ் காப்பாற்றட்டும் தீர்க்க முடியாத பெரும்வியாதிகள், நோய்கள் ஏற்பட்டு முடியாத நிலையில் நாட்டிற்கு திரும்பும் நாள்வரை வளைகுடா வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.

வளைகுடா வாழ்க்கை வாழக்கூடிய சகோதர-சகோதரிகளின் பெரும்பாலான வீடுகளிலுள்ள உறுப்பினர்கள் வீண் விரயமான மற்றும் ஆடம்பரமான செலவுகள் அதிகரிக்கக் காரணம் என்னவெனில், வளைகுடாவில் உழைக்கக்கூடிய தகப்பனோ, கணவனோ, சகோதரனோ என்ன வேலை செய்கிறார்கள்? என்ன கஷ்டப்படுகிறார்கள்? என்றறியாததால் தனக்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்களை முன்னூதாரணமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் குடும்பத்தாருடன் தாய்நாட்டில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் மேற்சொன்ன இரத்த பந்தங்கள் உழைத்துவிட்டு வீடு திரும்பும்போதுள்ள களைப்பையும் அசதியையும் வியர்வையும் நேரில் காணும்போது உழைப்பின் பயனை அறிந்து வீணான மற்றும் ஆடம்பரமான செலவுகளைச் செய்ய தயங்குவார்கள் அல்லது செய்யாமல் இருந்துவிடுவார்கள் என்பதில் எள்ளளவில் சந்தேகமில்லை.

6. குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின்மை

எத்தனையோ சகோதரர்கள் கஷ்டத்திற்கும் சிரமத்திற்கும் மத்தியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டும் பலவாறு கடன்களைப் பெற்றும் வளைத்து வளைத்து வீட்டினைக் கட்டி விடுகிறார்கள். எத்தனையோ குடும்பங்களில் ஆண்கள் தன் நாட்டில் இல்லாத சூழ்நிலையால் தினசரி அச்சத்திற்கும், ஆதரவிற்கும் மத்தியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் நம் குடும்பப் பெண்கள் பொழுதைக் கழித்து வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் இதுபோன்ற எண்ணற்ற பாதிப்புகள் மற்றும் குறைபாடுகள் வளைகுடா வாழ்க்கையினால் இருந்தாலும் விரிவஞ்சி முடிவிற்கு செல்ல நினைக்கிறேன்.

இத்தனைப் பாதிப்புகள் குறித்துப் பட்டியலிட்டு கூறினாலும் ஒருசில உள்ளங்கள் ஆதங்கப்படுவது எனக்கு தெரியாமலில்லை. அதாவது நாங்கள் நினைத்த மாத்திரத்தில் பத்தோ, இருபதோ ரியால்களை செலவு செய்தால் மஸ்ஜித்துல் ஹரம் சென்று தொழுகையில் கலந்து கொள்ளலாம் அதனால் ஒரு ரக்அத் தொழுகைக்கு ஒரு இலட்சம் நன்மைகள் கிடைக்கும். உம்ரா(க்கள்) மற்றும் தவாபு(கள்) செய்து நன்மைகளை சம்பாதிக்கலாம். இஃதிகாப் இருந்து நன்மைகளை அதிகமதிகமாகப் பெறலாம் என்று சொல்லக்கூடியவர்களின் வாதம் சரியானதுதான். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் இந்த நற்சூழல் மக்கா, தாயிப் மற்றும் ஜித்தாவில் உள்ளவர்களும் அதனை சுற்றியுள்ளவர்களுக்கும் மட்டுமே தவிர சவுதி அரேபியாவிலேயே தொலைதூரத்தில் உள்ளவர்களுக்கோ அல்லது வளைகுடாவில் வாழக்கூடிய அனைவருக்குமோ கிட்டக் கூடியதன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இதேபோன்றது தான் மஸ்ஜிதுந்நபவீயில் தொழுவதும் ஜியாரத் செய்வதும். உதாரணமாக குவைத்தில் உள்ளவர்கள் உம்ரா, ஹஜ் மற்றும் ஜியாரத் செய்ய வேண்டும் என்றால் அதற்காக ஒரு கணிசமான பொருள் செலவும் நாட்செலவும் செய்தால்தான் பயனடைய முடியும்.

மேலும், வளைகுடாவுக்கு வந்து தவ்ஹீதைப் படித்தவர்களும் படிக்கின்றவர்களும் கூறுகின்ற கூற்று ஒன்றுண்டு. அதாவது, "நாங்கள் வளைகுடா வாழ்க்கையினால்தான் தவ்ஹீதை அறிந்து அதன்படி செயல்படுத்தக்கூடியவர்களாக இருக்கிறோம் இது எங்களுக்கு வரமாக இருக்கிறது" என்று கூறக்கூடியவர்களுக்கு, வளைகுடாவில் மட்டுமல்ல நமது நாட்டிலும் தவ்ஹீதை அறிந்து கொள்ள முடியும். வளைகுடா வந்த நம் சமுதாய மக்களில் தவ்ஹீதை அறிந்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் எத்தனை சதவிகிதம் என்று பார்த்தால் அது வெறும் 5 முதல் 10 சதவிகிதம் வரைதான் இருக்கக் கூடும்.

வறுமையைப் போக்க வளைகுடா வந்த நம்மில் பலர், அல்ஹம்துலில்லாஹ்; வறுமை போய்விட்டது. ஆனால் வசதியான வாழ்க்கை நடைமுறையும் ஆடம்பரமும் அனாவசியமான செலவுகளும் நம்முள்ளும் நம் குடும்பத்தாருள்ளும் குடிபுகுந்துள்ள காரணத்தால் இதனைச் சரிகட்ட அல்லது திருப்திபடுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் வறுமை ஒழிந்தபிறகும் நம்மால் திரும்பி செல்ல முடியாத நிலையில்தான் இருக்கின்றனர். அதாவது ஆற்றில் கம்பளி ஒன்று மிதந்து வந்ததைக் கண்ட நாம் அதனை எடுத்து பயனடையலாம் என்ற ஆவலில் ஆற்றில் குதித்துக் கம்பளியை பிடித்துவிட்ட பிறகுதான் தெரியவந்தது,

ஆகா! நாம் பிடித்தது கம்பளி அல்ல; மாறாகக் கரடி என்றும் அது நம்மைப் பிடித்துக் கொள்ள, அதிலிருந்து மீள முடியாத நிலையில் ஆழம் தெரியாமல் காலை விட்ட கதையாகி கரடியிடம் மாட்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.

ஆக இறுதியாக, முடிவாக எந்தவொரு ஆண்மகன் தன் தாய், தந்தை, மனைவி, மக்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் இருந்து உழைத்து உண்ணுவார்களேயானால் அது, தான் பிறந்த தாய்நாடாக இருந்தாலும் சரி அல்லது வளைகுடா நாடாக இருந்தாலும் சரி அல்லது மற்றெந்த நாடாக இருந்தாலும் சரியே அதுதான் வரமாகுமே ஒழிய, தான் தனியாகவோ அல்லது தன்னோடு தன் மனைவி-மக்களுடன் மாத்திரம் பெற்றோர்கள் இல்லாமல் வளைகுடா வாழ்க்கையை கழிப்பார்களேயானால் அது சாபமே சாபமே என்று கூறி என் கருத்துகளுக்கு முற்றுபுள்ளி இடுகிறேன். எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

ஆக்கம் : சகோதரர். ஹாஜா முஹைதீன்.
தகவல் : சத்தியமார்க்கம்