12 Aug 2008

1947 பிரிவினையில் ஒற்றுமை.

அன்புள்ள மகளுக்கு வாப்பா எழுதும் கடிதம்,

இங்கு அனைவரும் நலம். அது போல் அங்கு நீ அம்மிஜான் ,வாசீம், ஈசான், மற்றும் போஸ்ட்மேன், கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரின் நலமறிய ஆவல்.

ரஜாக்கிடம் உனது புகைப்படத்தை காண்பித்தேன் ரொம்ப வெட்க்கபட்டான். இன்னும் இரண்டு வாரங்களில் லன்டன் செல்கிறான். அதன் பிறகு லாகூர் வந்த பிறகு அவனையும் கூட்டிக்கொண்டு மதுரை வருவேன். பட்னாவிலிருந்து மோஹன்லான் பையாஜி உனக்காக ஒரு சால்வை அனுப்பிருந்தார். அதையும் கொண்டு வருகிறேன்.

அம்மி ஜான்னுக்கு சுகர் இப்பொழுது எப்படி இருக்கிறது இன்னும், அவர்களை காலையில் கோரிப்பாளையத்திலிருந்து கலக்டர் அலுவலகம் வரை நடக்க சொல், நாளை ஈசான் அண்ணா அங்கே வருவதாக மதுரை புறப்படுகிறார். அவரிடம் சால்வையையும் கொஞ்சம் நகைகளையும் கொடுத்து அனுப்புகிறேன்.

தோல் வியாபாரத்திற்க்கு காபூலிலிருந்து இரண்டு வியாபாரிகளை ஏஜென்டாக சேர்த்துள்ளேன். அல்லா அருளால் எல்லாம் நல்ல படியாக நடக்கும். காந்தி லாகூரில் வந்து பொதுக்கூட்டம் நடத்தினார். அப்பொழுது மதுரை கோவில் அரிஜன நுழைவை பற்றி பேசினார் ரொம்ம பெருமையாக இருந்தது. நமது குப்பு சாமி, சுப்பையா எல்லோரும் சென்றிருப்பார்கள். மினாட்சி அம்மையின் விக்ரகத்தை நேரில் தரிசித்திருப்பார்கள்.

மகளே இங்கு விடுதலை போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. லன்டனில் இருந்து மௌண்ட் பேட்டன் என்னும் புதிய கவர்னரை மகாராணி நியமித்துள்ளார்கள். அவர் நல்ல மனிதர் போல் தெரிகிறது. மகாராணியிடம் இந்திய மக்களின் எண்ணத்தை எடுத்து சொல்லி விரைவில் விடுதலை பெற ஆவன செய்வார் எனத்தெறிகிறது. எனக்கு இன்னும் மனம் வலிக்கிறது. பகத்சிங்கின் தூக்கு தண்டனையின் போது லாகூர் சிறைக்கு வெளியே நடந்த போரட்டத்தில் நானும் தான் இருந்தேன். என்ன செய்ய இத்தனை இந்தியர்கள் இருந்து தங்க மகனை வெள்ளையர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.

இப்படிக்கு ஜமால் முகம்மது லாகூர் மேற்க்கு இந்தியா.

அன்புள்ள வாப்பா அவர்களுக்கு பாத்திமா எழுவது।

இங்கு அனைவரும் நலம் அப்பா ஈசான் அண்ணா நீங்கள் அனுப்பிய பொருள் அத்தனையும் கொடுத்தார். எல்லொரும் நலமாக இருக்கிறோம். வா ஊ சி அவர்கள் சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டார். ஆனால் அன்னிய உடமைகள் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறைக்கு சென்று விட்டார். திருப்பூரில் குமரன் என்னும் இளைஞரை போலிசார் அடித்ததில் அவர் உயிரிழந்து விட்டார். அவர் தன் உயிர் போனாலும் பாரதக் கொடியை விடாமல் தன் இன்னுயிர் நீத்தார் தமிழகமெங்கும் அவரது பேச்சுதான் அப்பா, வடக்கே பகத்சிங் என்றால் இங்கே குமரன் போன்ற இளைஞர்கள், இவர்கள் இன்னுயிர் நீத்து வாங்கித்தரும் சுதந்திரம் மிகவும் விலையுயர்ந்தது அப்பா, அதனால் திருமணம் ஆனா பிறகு நான் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதலாம் என்றிருக்கிறேன். வரும் தலைமுறைகள் இதை கண்டு எதிர்காலத்தில் வரும் தலைமுறை சுதந்திரத்தை தக்க முறையில் பேணிகாக்க வேண்டும்.

பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரை இந்தியா.

அன்புள்ள மகள் பாத்திமா,

அனைவரும் நலமா இங்கு சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. எப்படியும் ஆகஸ்ட் மாதத்திற்க்குள் ஆட்சி அதிகாரத்தை நமக்கு தந்து விடுவார்கள் போல் உள்ளது. ஆனால் ஒரு புதிய அதிர்ச்சி தரும் செய்தி ஜின்னா அவர்கள் முஸ்லீம்களுக்கா புதிய நாட்டை உருவாக்கித்தாருங்கள் என ஆங்கிலேயரிடம் சொல்கிறார். அதற்க்கு காந்திஜிக்கு உடன் பாடில்லை ஆனால் டில்லியில் இதற்க்கான வேலைகள் தயாராகிவருவதாக செய்திகள் வருகிறது. அப்படி முஸ்லீம்களுக்காக தனி நாடு உறுவாகிவிட்டால், நீ அம்மிஜானும்,வாசீம், ஈசான் எல்லோரும் புறப்பட்டு வந்துவிடுங்கள். இங்கு இப்பொழுதுள்ள சூழ்நிலையில் எனக்கு அங்கு வரவேண்டும் உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் தான் மனம் சொல்கிரது. முடிந்தவரை பார்க்கிறேன். இல்லையென்றால் புறப்பட்டு வந்து விடுகிறேன். அதிகமாக வெளியே எங்கும் சுத்த வேண்டாம். தம்பிகளிடம் சொல்லி வை

வாப்பா ஜமால் முகம்மது
லாகூர்

பிரியமுள்ள வாப்பாவுக்கு பாத்திமா எழுதுவது,

அப்பா பாரதம் இரண்டு துண்டாக ஆக்கப்படுவது முடிவாகிவிட்டது. வடக்கில் அனைத்து முஸ்லீம்களும் பாகிஸ்த்தான் செல்ல தயராகிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் அது முடியாத காரியமப்பா இங்கே அனைவரும் அண்ணன் தம்பிபோல் பழகிவிட்டோம். வாழ்ந்தாலும் இறந்தாலும் இங்கேயே என்பது முடிவாகிவிட்டது. மேலும் கதிரேசன், வத்தியார் கணபதி பிள்ளை அனைவரும் இன்று வீட்டிற்க்கு வந்து அப்படி யாரும் போகும் சூழல் ஏற்பட்டாலும் நீங்கள் போக வேண்டாம் என்று சொன்னார்கள். திருப்பரங்குன்றத்தில் முகைதீன் மாமாவும் இதைத்தான் சொல்கிறார்கள். அதனால் நீங்கள் இங்கு வந்து விடுங்கள். எங்களுக்கு தமிழகத்தில் இருக்கையில் பயமில்லை ஆனால். உங்களை நினைத்தால் தான் வாப்பா பயமாக இருக்கிறது. இந்த கடிதம் கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். தயவு செய்து நீங்கள் எந்த வேலை இருந்தாலும் விட்டு விட்டு வந்து விடுங்கள். இங்கு போஸ்ட்மேனை போலீஸ்காரர்கள் பிடித்து சென்று விட்டார்கள். அவர் பொதுக்கூட்டம் போட்ட காரணத்தால் அவரை கைது செய்து விட்டனர். மீண்டும் மீண்டும் சொல்கிறேன் கடிதம் கண்ட உடன் புறப்பட்டு வரவும். அம்மிஜான் உங்கள் நினைவால் கவலைபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிக்கு
மகள் பாத்திமா
கோரிப்பாளையம்
மதுரைஇந்தியா

No comments: