16 Nov 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல் அதிகாரி.


சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலைத் தடுக்கத் தவறிய காவல் துறை!
ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
என் நெஞ்சு எரிகிறது! அறிஞர் அண்ணா சொன்னது இது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடுமை அது.
தஞ்சை தரணியில் கீழ் வெண்மணி கிராமத்தில் கூடுதலாக கூலி கேட்டுப் போராடிய ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, அவர்கள் குடிசை வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
அந்தச் செய்தி கேட்டு முகம் கருத்து, வெட்கத்தால் நாணி, தலை குனிந்த முதலமைச்சர் அண்ணா கீழ் வெண்மணி நோக்கி புறப்படத் தயாராக இருந்தபோது அவரிடம் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் அந்நிகழ்வு குறித்து கருத்துக் கேட்டார்.
வெறுமையுடன் அவரைப் பார்த்த அண்ணா, "எனது ஆட்சியிலா இது நடைபெறுகிறது? என் நெஞ்சு எரிகிறது" என்று கூறினார் என்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியதைக் கேட்டுள்ளோம்.
அந்த நிலைதான் நமது நாட்டு மக்கள் பலருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் - அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போலவே - பதறியிருக்கும்.
படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.
ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.
பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.
கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.
இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
தலைவர்களைக் கேவலப்படுத்திய மாணவர்கள்! நடந்த வன்முறை நம்மை பதறச் செய்தது என்றால், இந்த நிகழ்வுகளுக்கான காரணம் நம்மை வெட்கித் தலைகுனியச் செய்வதாக உள்ளது.
இக்கல்லூரி மாணவர்கள் சிலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை கொண்டாடுவதற்கு அச்சடித்த அழைப்பிதழில், தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் உள்ள 'டாக்டர் அம்பேத்கர்' பெயரை தவிர்த்திருத்தனராம்.
அவரது பெயரை ஏன் தவிர்த்தீர்கள் என்று மற்ற சில மாணவர்கள் கேட்க, சாதி ரீதியாக அவர்களுக்குள் புகைச்சல் ஏற்ப்பட்டதாம். அதுவே இந்த அளவிற்கு ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு வித்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் மோதல் நாம் அறியாததல்ல. கிராமத்தில் வாழும் மக்களுக்கு படிப்பறிவிருக்காது, சிந்திக்கவும் தெரியாது, சிந்திக்க நேரமும் இருக்காது.
ஆனால் மாணவர்களுக்கு? அதுவும் சட்டம் படிக்கவந்த மாணவர்களுக்கு தெரியாதா இவ்விரு தலைவர்களும் யாரென்று? இதுதான் வருத்தமளிக்கும் ஆச்சரியம்.
நமது நாட்டின் சட்ட மேதை, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர், இன்றளவும் இந்த அளவிற்கு நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்று, கருத்துரிமை சுதந்திரம் பெற்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறோம் என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்பது கூட புரியாதா? தெரியாதா?
தான் சார்ந்த சமூகம், உடலுழைப்பின் மூலம் சமூக வாழ்விற்கு தனது பங்களிப்பை முழுமையாக செலுத்திய பின்பும் உரிமை மறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படுவது ஏன் என்று குரல் எழுப்பி, அதற்காக தன் வாழ் நாள் முழுவதும் போராடி, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றத் தலைவர்களுக்கும் புரியவைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தை அவர்களும் நுகரச் செய்ய வழி செய்தவரல்லவா அம்பேத்கர்? அவருடைய பெயரை தவிர்ப்பதற்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆழமான கருத்தாடல்களை படித்தவர்களா இவர்கள்? அப்படித் தெரியவில்லை.
சாதியத்தின் பிடி அந்த அளவி்ற்கு இவர்களுடைய சிந்தனையை கட்டிப்போட்டிருக்கிறது என்றால், இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி நாளை நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெற்றுத் தருவார்கள்? அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் சட்டம் ஏது? சட்டத்தின் ஆட்சி ஏது? இந்த இரண்டு தலைவர்களும் ஏதோ சாதியத்திற்காகப் போராடி உயிரைத் துறந்தவர்கள் போலல்வா இருக்கிறது இவர்களின் வெறியும் செயலும்.
சரி அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.
விலகுமா இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?