27 Aug 2008

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

தனிமையில் வாடும் உங்கள் பெற்றோருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க…

திருமணமான உடனேயே, பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். மேலும் சிலர், வேலை வாய்ப்பு, மேற்படிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெற்றோர்களை பிரிந்து வாழ்கின்றனர்.

வயதான காலத்தில், தனிமையில் வாடும் பெற்றோர் மிகவும் வேதனையடை கின்றனர். இந்த வேதனை அவர்களை மனஉளைச்சலில் கொண்டு போய் விடுகிறது.

முக்கிய நபர்களின் தொலைபேசி எண்ணை பத்திரப்படுத்துங்கள்:

* உங்கள் பெற்றோரின் நண்பர்கள், வீட்டருகில் வசிக்கும் நபர்கள், அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நபர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலத்தில் அவர்களிடம் பேசி உதவியை பெற முடியும்.

இரவு உணவை பெற்றோருடன் உண்ணுங்கள்:

* வயதான காலத்தில், தனிமையாக இருப்பதாக உங்கள் பெற்றோர் உணர்வர். இது அவர்களுக்கு கவலையை கொடுத்து, அந்த கவலை, மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும். தனிமையாக உணர்வதால், அவர்களால் சரியாக சாப்பிட முடியாது. சிறு பிரச்னை கூட பெரிதாக தெரியும். எனவே, உங்கள் பெற்றோருக்காக, நீங்கள் நேரம் ஒதுக்குங்கள். பெற்றோர் வீட்டின் அருகில் நீங்கள் வசிப்பவராக இருந்தால், அவர்களுடன் இரவு உணவை உண்ணுங்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

உடற்பயிற்சி செய்ய சொல்லுங்கள்:

* ஆரோக்கியத்துடன் இருந்தும், சுறுசுறுப்பில்லாமல் இருக்கின்றனரா? வாக்கிங், யோகா போன்றவற்றில் ஆர்வம் காட்ட சொல்லுங்கள். உங்கள் பெற்றோரின் வீட்டருகில் வசிப்ப வராக இருந்தால், அவர்களை தினமும் வாக்கிங் அழைத்து செல்லுங்கள். அல்லது கடைக்கு செல்லும் போது அவர்களையும் உடன் அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் அனுப்பி வையுங்கள்.

பெற்றோர் கூறுவதை பொறுமையாக கேளுங்கள்:

* உங்கள் பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறும் போது அவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் கூறுவதை கவனமாக, பொறுமையுடன் கேளுங்கள். அப்படி கேட்கும் போது, அது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரும். நீங்கள் அவர்களுக்கு கீழ்படிவதாகவும், அவர்கள் மீது அக்கறை கொண்டு இருப்பதாகவும் எண்ணி மகிழ்ச்சி அடைவர்.

நீங்கள் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிப்பவரா?

* இன்டர்நெட், இ-மெயில் பற்றி உங்கள் பெற்றோருக்கு தெரிந்திருந்தால், இ-மெயில் மூலமும் அடிக்கடி தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளிடம், உங்கள் பெற்றோருக்கு ஆர்வமுள்ள விஷயங்கள் பற்றிய வெப்சைட்களை அறிமுகப்படுத்த சொல்லுங்கள். உங்களால் முடிந்தால், உங்கள் பெற்றோர் வீட்டில், “பேக்ஸ் மிஷின்’ வையுங்கள். அதன் மூலம் சிறப்பு கட்டுரைகள், புகைப்படங்கள், மற்றும் உங்கள் குழந்தைகள் வரைந்த படங்கள் முதலியவற்றை அனுப்பலாம். மேலும் அவர்கள், உடல் நலம் குறித்து அவர்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் அனுப்பலாம்.
-செந்தில்

No comments: