21 Sept 2008

உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வு முடிவு மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.

- அலசல்

No comments: