21 Sept 2008

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆணையர் எச்சரிக்கை

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்:

“போலி இ-மெயில்களை நம்பி, வெளிநாட்டு வங்கிகளில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’ என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி எச்சரித்துள்ளார்.

ஆப்பிரிக்கா நாடுகளில் பல போலி லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாட்டு மக்களுக்கு லட்சக்கணக்கில் இ-மெயில்களை அனுப்புகின்றனர். மெயிலில் “ஆன்லைன் லாட்டரி மூலம் பல கோடி ரூபாய் பணம் பரிசாக உங்களுக்கு கிடைத்துள்ளது. இப் பரிசை பெற நீங்கள் குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டு வங்கியில் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்படும்.

உழைக்காமலே கோடி கணக்கில் பணம் கிடைத்தும் என்ற பேராசையில், போலி இ-மெயில்களை நம்பும் சிலர் வங்கியில் பணத்தைச் செலுத்துகின்றனர். இதன்பின், மீண்டும் பணம் செலுத்தும்படி மற்றொரு இ-மெயில் வரும்.

2-வது முறையும் பணத்தைச் செலுத்திய பின், போலி நிறுவனத்திடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்காது.

இத்தகைய நூதன மோசடியில் சிக்கி பணம் இழந்த ஒரு சிலரே போலீஸில் புகார் அளிக்கின்றனர். போலி இ-மெயிலால் சில ஆயிரங்களை இழந்தவர்கள் போலீஸில் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸர் கூறியது:

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் பலர் போலி இ-மெயில்களை நம்பி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் மிக சிலரே போலீஸில் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த மோசடியில் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இணையதள வசதியைப் பயன்படுத்தி மோசடி செய்யும் வெளிநாட்டு குற்றவாளிகளைப் பிடிப்பதில் ஏராளமான நடைமுறை சிக்கல் உள்ளன என்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. “சொந்த விவரங்களையும் (பயோடேட்டா), பணத்தையும் வங்கியில் செலுத்தினால், உங்களுக்கு வேலை ரெடி’ என்ற ரீதியிலான இ-மெயில்களை இந் நிறுவனங்கள் அனுப்புகின்றன. இவற்றை நம்பிக் கூட ஏமாந்தவர்கள் உண்டு.

இப் பிரச்னை குறித்து மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மோசடி இ-மெயில்களுக்கு பதில் அனுப்பவோ, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவதோ கூடாது. அறிமுகமில்லாதவர்களிடம் வங்கிக் கணக்கு எண், ரகசிய பாஸ்வேர்டு போன்ற விவரங்களை அளிக்க வேண்டாம். லாட்டரி பரிசுகளை வென்றுள்ளதாக கூரியர், இ-மெயில்களில் மூலம் வரும் தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்..

No comments: