30 Jul 2008

தமிழில் விண்ணப்பம் தராவிட்டால் கிரெடிட் கார்டு நிறுவனம் மீது புகார் தரலாம்

தமிழில் விண்ணப்பம் தராவிட்டால் கிரெடிட் கார்டு நிறுவனம் மீது புகார் தரலாம் ரிசர்வ் வங்கி இயக்குனர் அறிவிப்பு

கிரெடிட் கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் தமிழில் விண்ணப்பங்கள், கடிதங்களை தர வேண்டும். அப்படி தராவிட்டால் வங்கி குறைதீர்ப்பாளரிடம் புகார் செய்யலாம்.

அதேபோல் கிரெடிட் கார்டு மோசடிகள் குறித்தும் புகார் செய்யலாம் என ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எப்.ஆர்.ஜோசப் தெரிவித்தார்.

இது குறித்து சென்னையில் நேற்று அவர் கூறியதாவது:

கிரெடிட் கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்பங்களை, கடிதங்களை தமிழில் வழங்க வேண்டும் என்று 6 மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதே போல் கிரெடிட் கார்டுக்கான கடன்களை வசூலிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அப்படி செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புகார்களை ரிசர்வ் வங்கியில் உள்ள வங்கி குறைதீர்ப்பாளருக்கு அனுப்பலாம். அவர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்.

வங்கி குறைதீர்ப்பாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பல்வேறு பிரச்னைகள் குறித்து 450 புகார்கள் வருகின்றன. அதில் 30 சதவீத புகார்கள் கிரெடிட் கார்டு குறித்த புகார்கள்தான். எனவே உங்கள் புகார்களை ரிசர்வ் வங்கிக்கு கடிதம் மூலமாகவோ, போன், பேக்ஸ் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம்.

கிரெடிட் கார்டு பிரச்னைகள் மட்டுமின்றி வங்கி தொடர்பான எல்லா பிரச்னைகள் குறித்தும் இங்கு புகார் செய்யலாம். இவ்வாறு ஜோசப் தெரிவித்தார்.

புகார்களை அனுப்ப வேண்டிய முகவரி:
வங்கி குறை தீர்ப்பாளர்,
இந்திய ரிசர்வ் வங்கி,
எண்:16, ராஜாஜி சாலை,
சென்னை -600 001
தொலைபேசி: 044-2539 9174 தொலைநகல்: 044 - 2539 5488
மின்னஞ்சல் :bochennai@rbi.org.in
இணையதளம்: www.rbi.org.in

No comments: