20 Jul 2008

பத்து பைசா கூட நன்கொடை இல்லாமல் அசத்தும் தனியார் பள்ளி.

பத்து பைசா கூட நன்கொடை இல்லாமல் அசத்தும் தனியார் பள்ளி.

26 கிரவுண்டு பரப்பில் பிரத்யேக கவனத்துடன் கல்வி
சென்னை நகரின் சந்து பொந்துகளில் தீப்பெட்டி சைசிற்கு இடம் கிடைத்தாலும், அதில் பள்ளி போர்டை தொங்கவிட்டு பணம் பார்க்கும் இந்தக் காலத்தில், "இப்படியும் ஒரு பள்ளி இருக்குமா' என நமது புருவங்களை உயர்த்த வைக்கிறது திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலைப் பள்ளி.

அரசு, நன்கொடை என எதையும் எதிர் பார்க்காமல், பரந்து விரிந்த இடத்தில் மாணவர் களைப் பண்படுத்தி, பக்குவப்படுத்தும் "குருகுலம்' ஸ்டைலில் முற்றிலும் இலவச கல்வி அளித்து வருவது இதன் சிறப்பம்சம்.

சென்னை வேப்பேரியில் 26 கிரவுண்டில் திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது.

பரந்த விளையாட்டு மைதானம், அழகான பூந்தோட்டம், அடர்ந்த மரங்களுக் கிடையே அருமையான நீச்சல் குளமும் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் கரந்திட்டைகுடியை சேர்ந்த ராமசாமி பிள்ளை, 1947ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி இந்தப் பள்ளியை தொடங்கினார்.

அப்போதைய அமைச்சர் அவினாசிலிங்க செட்டியார், பள்ளியை திறந்துவைத்தார்.

பள்ளிக்கு தனது பெயரை வைக்காமல், கடவுள் மீது வைத்திருந்த அதிக பற்றால், "ஸ்ரீ திருவொற்றீஸ்வரர்' என்ற பெயரை சூட்டினார்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 110 மாணவர்கள் மட்டும் இருப்பது போல் பார்த்துக்கொண்டனர். மாணவர்கள் தாராளமாக விளையாடுவதற்கு வசதியாகவும், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி பாடம் நடத்தவும் வசதியாக, அதிக மாணவர்களை சேர்ப்பதில்லை.

சென்னையில் முதல் முறையாக இலவச கல்வி தந்தது திருவொற்றீஸ்வரர் உயர்நிலை பள்ளிதான். பெற்றோரின் ஆண்டு வருமானம் 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

சிலசமயம் மாணவர்களின் குடும்ப சூழ் நிலையை கருதி விதிவிலக்கு தளர்த்தப்படுகிறது. "நமது சேவை தினம்' என ஏற்படுத்தி ஆசிரியர், மாணவர்களை அதில் ஈடுபடச் செய்து, சமுதாயச் சேவை குறித்து மாணவர் களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.

தினந்தோறும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும், பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்து வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும். காலை பிரார்த்தனையில் தினந்தோறும் ஒரு திருக்குறள் சொல்லி, அதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

வகுப்புகள் தொடங்கியதும், முதல் பத்து நிமிடம் நீதிபோதனை கதைகளுக்காக ஒதுக்கப் படுகிறது. பள்ளி முடிந்ததும் மாலையில் அவசியம் ஒரு மணி நேரம் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்து விளையாட வேண்டும்.

மாதிரி நீதிமன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே நீதிபதிகளாகவும், வக்கீல் களாகவும், போலீசாராகவும் நியமித்து சட்டத்தை மதிக்கிற பண்பையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் மாணவர்களுக்கு உணர்த்துகின்றனர்.

மாணவர்கள் அனைவருக்கும் நீச்சல் பயிற்சி கற்றுக் கொடுக்கிறது. இதற்காகவே, அழகான நீச்சல் குளத்தை அமைத் துள்ளனர். அரசு பள்ளிகளில் 10 ஆயிரம், 15 ஆயிரம் என சம்பளம் வாங்கும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர், கற்பித்தலில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால், இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகவும் சொற்ப சம்பளத்தில், அதே நேரத்தில் முழு ஈடுபாட் டுடனும், திருப்தியுடனும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர்.

அதிகபட்ச சம்பளம் நான்காயிரம் ரூபாய் தான். பள்ளி தொடங்கியது முதல் மாணவர்களின் தேர்ச்சி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்து வருகிறது. 1969-70ம் ஆண்டில் மூன்று மாணவர்கள் தேசியளவில் "மெரிட் ஸ்காலர்ஷிப்' பெற்றுள்ளனர்.

தற்போது ஆறாம் வகுப்பில் ஒரு மாணவர், ஏழாம் வகுப்பில் மூன்று பேர், எட்டாம் வகுப்பில் ஐந்து பேர், ஒன்பதாம் வகுப்பில் மூன்று பேர், பத்தாம் வகுப்பில் ஐந்து பேர் என மொத்தமே 17 மாணவர்கள் தான் உள்ளனர்.

நான்கு ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். பள்ளி நிர்வாகம், தகுதியான மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு உதவி செய்து வருகிறது. இங்கு படித்த பழைய மாணவர்கள் பள்ளிக்கு உதவி செய்ய முன்வந்தாலும், நிர்வாகம் ஏற்பதில்லை.

பள்ளி நிறுவனர் ராமசாமி பிள்ளை, அந்தக் காலத்தில் சென்னையில் சிறந்த வணிகராக இருந்துள்ளார். அதில் கிடைத்த வருவாயில் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

அவற்றில் கிடைக்கும் வருவாயில் தான் பள்ளியை நிர்வகித்து வருகிறார், ராமசாமி பிள்ளையின் மகன் கண்ணன்.

நகரின் மையப்பகுதியான வேப்பேரியில் வேறு யாருக்காவது 26 கிரவுண்டு இடம் இருந்தால், என்றைக்கோ சுளையாக பல கோடிகளுக்கு விற்பனை செய்திருப்பர். ஆனால், தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியை மூடக்கூடாது என்பதிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச கல்வி அளிக்க வேண்டும் என்பதிலும் கண்ணன் உறுதியாக இருக்கிறார்.

இன்றைய எம்.பி.ஏ., பாடம் அன்றைக்கே நடத்திய அதிசயம்: பள்ளியின் பழைய மாணவர்கள் வங்கி அதிகாரி குணசேகரன், அரசு அதிகாரி சாலை சாம்பசிவம் மற்றும் கோபிகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில்,

""கோவில், புராணங்களில் குருகுலத்தைப் பற்றி படித்ததுண்டு. அதை, அந்தப் பள்ளியில் படிக்கும் போது அனுபவத்தில் உணர முடிந்தது. ஒழுக்கம் தான் முன்னுரிமை; அதன் பிறகு தான் கல்வியும், விளையாட்டும். இன்றைக்கு எம்.பி.ஏ., பாடத்திட்டத்தில் உள்ள மேலாண்மைக் கல்வியை அன்றே எங்களுக்கு போதித்தனர்,'' என பெருமை பொங்க மலரும் நினைவுகளில் மூழ்கினர்.

பள்ளி நிறுவனரின் தாராளம் பள்ளி நிறுவனர் ராமசாமி பிள்ளை, தனது 16வது வயது வரை கரந்தையிலேயே படித்தார். பின்னர் சென்னை நகரை அடைந்து வணிகத்தில் ஈடுபட்டு, செல்வந்தராக உயர்ந்துள்ளார்.

சூளையில் மகப்பேறு விடுதி, ஓட்டேரியில் டி.பி., மருத்துவமனை, ஏழைகளுக்காக இலவச திருமண மண்டபம் ஆகியவற்றை கட்டி அரசிடம் ஒப்படைத்துள்ளார். பத்தாண்டுகளுக்கு மேலாக 100 மாணவர் களுக்கு குருகுலமாகவே நடத்தி, வடமொழியும், தமிழ் மொழியும் கற்றுக் கொடுத்துள்ளார்.

ஆனால், அக்கல்வி, மக்களின் பிற்கால வாழ்க்கைக்கு பயன் படாமையை உணர்ந்து, அரசின் உதவியின்றி திருவொற்றீஸ்வரர் இலவச உயர் நிலைப் பள்ளியை தொடங்கினார்.

No comments: