21 Oct 2007

புத்தகத்தில் ரகசிய அறை அமைத்து செல்போன் கொண்டு வந்த மாணவி


நாகர்கோவில், அக்.19-
புத்தகத்துக்குள் ரகசிய அறை அமைத்து செல்போனை பள்ளிக்கு கொண்டு வந்த மாணவி எஸ்.எம்.எஸ். அனுப்பியபோது பிடிபட்டார்.
சுற்றறிக்கை
நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான செல்போன்கள் பள்ளிக்கூட மாணவர்களின் படிப்பிற்கு பெரும் இடைïறாக இருக்கின்றன.
இதனால், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வி இயக்குனர் ஜெகநாதன், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் இது குறித்து ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பள்ளிக் கூடத்துக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வராமலிருக்க எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்தும், மீறி கொண்டு வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்பதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று நாகர்கோவிலில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு வந்திருக்கிறார்களா? என்று ஆசிரியர்கள் தீவிரசோதனை நடத்தினார்கள். அப்போது சில மாணவர்கள் அரசு உத்தரவை மீறி செல்போன் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் அழைத்து பள்ளிக்கு செல்போன் எடுத்து வரக் கூடாது என எச்சரித்து அனுப்பினார்கள்.
மாணவியின் திருவிளையாடல்
ஒரு பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது எல்லா மாணவிகளும் ஆசிரியர் பாடம் நடத்துவதையே கவனித்துக் கொண்டிருக்க ஒரேயொரு மாணவி மட்டும் தலையைக் குனிந்தவாறு என்னவோ செய்து கொண்டு இருந்தார். வெகு நேரமாக அந்த மாணவி அதே நிலையில் இருந்ததால் ஆசிரியர் சந்தேகமடைந்து அந்த மாணவியின் அருகில் சென்றார். ஆசிரியர் அருகில் வந்தபோதும் கூட அது தெரியாமல், மாணவி தொடர்ந்து தலையைக் குனிந்தபடியே இருந்தார். அந்த மாணவி தனது மடியில் ஒரு புத்தகத்தை வைத்தபடி படிப்பதுபோல பாவனை செய்து கொண்டிருந்தார். இதனால் அருகில் வந்த ஆசிரியரும் முதலில் அந்த மாணவியின் மீது சந்தேகம் கொள்ளவில்லை. அந்த மாணவியை ஆசிரியர் தொடர்ந்து கண்காணித்தார். அப்போதுதான், அவர் அந்தப் புத்தகத்திற்குள், செல்போனை வைத்தும் கொள்ளும் அளவிற்கு பக்கங்களை கச்சிதமாக வெட்டியெடுத்து அதற்குள் ரகசிய அறை ஒன்றை அமைத்திருப்பதையும், அதற்குள் ஒரு செல்போனை மறைத்து வைத்து அதில் எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது. இதைத் பார்த்ததும் அந்த ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அரசின் உத்தரவிற்கு இப்படியும் கூட ஒருவர் டிமிக்கி கொடுப்பாரா? என வேதனையடைந்தார்.
அந்த மாணவியை கையும் களவுமாக பிடித்த ஆசிரியர், அவரை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். அப்போது மாணவி `இனிமேல் செல்போனை பள்ளிக்கு கொண்டு வரமாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்' என்று அழுதபடியே கேட்டுக் கொண்டார். தலைமை ஆசிரியரும், மாணவி முதல் முறையாக தவறு செய்திருக்கிறார் என்பதால் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
இந்த சம்பவம் அந்தப்பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments: