4 Oct 2007

வளைகுடா-லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம்!

துபாய்: பஹ்ரைன் நாட்டு அரசு பரிந்துரைத்துள்ள புதிய திட்டத்தால், வளைகுடா நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் அந்நாடுகளை விட்டு வெளியேற்றப்படும் அபாயம் எழுந்துள்ளது.வளைகுடா நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டினர் 6 ஆண்டுகள் வரை மட்டுமே அங்கு தங்கியிருக்க முடியும் என்பதுதான் பஹ்ரைன் பரிந்துரைத்துள்ள புதிய திட்டம். இந்தத் திட்டத்தை டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகள் மாநாட்டில் முன்வைக்கவுள்ளது பஹ்ரைன்.உள்ளூர் கலாச்சாராம் தேய்ந்து வருவதைத் தடுக்கவும், உள்ளூர்வாசிகளுக்கு வேலை கிடைக்காமல் இருக்கும் நிலையை அகற்றவும் இந்தத் திட்டத்தை பஹ்ரைன் முன்வைத்துள்ளது.இந்தத் திட்டத்தை அனைத்து வளைகுடா நாடுகளும் ஏற்றுக் கொண்டால், பல்வேறு வளைகுடா நாடுகளில் குடும்பத்துடன் வசித்து வரும் 10.3 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலை இழந்து, தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.இந்தப் புதிய திட்டம் குறித்து பஹ்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி கூறுகையில், வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டினர் பல்வேறு கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்களாக உள்ளனர். உள்ளூர் கலாச்சாரத்துடன் அவர்களால் ஒத்துப் போக முடியவில்லை. போகவும் முடியாது.சில அரபு பகுதிகளைப் பார்த்தால் இது அரபு நாடுதானா அல்லது ஆசிய நாட்டுக்கு வந்து விட்டோமா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவுக்கு உள்ளூர் கலாச்சாரம் அங்கு காணாமல் போய் விட்டது. இதை நாம் வேற்றுமையிலும் ஒற்றுமை என்று கூற முடியாது.உலகில் உள்ள எந்த நாடும் தனது நாட்டு கலாச்சாரத்தை அழிய அனுமதிக்க முடியாது. பஹ்ரைன் முன்வைத்துள்ள பரிந்துரையை வளைகுடா நாடுகள் ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஜிசிசி எனப்படும் வளைகுடா நாடுகள் அமைப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், குவைத் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்த நாடுகளில் வசிக்கும் 3.5 கோடி பேரில் 37 சதவீதம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாட்டு மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். குவைத் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேரும், பஹ்ரைனில் 40 சதவீதம் பேரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்.சவூதி மற்றும் ஓமனில்தான் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சவூதியில், 33 சதவீதம் பேரும், ஓமனில் 25 சதவீதம் பேரும் வெளிநாட்டினர்.சவூதியில், வேலையில்லாத் திண்டாட்டம் 11 சதவீதமாக உள்ளது. பஹ்ரைனில் அது 4 சதவீதமாக உள்ளது. பஹ்ரைனில் 20 ஆயிரம் பேர் வேலையில்லாத குடிமக்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எமிரேட்ஸில், 32.6 சதவீதம் பேர் வேலையில்லாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 47.7 சதவீத பெண்களுக்கு வேலை இல்லையாம்.அனைத்து வளைகுடா நாடுகளும், வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையிலிருந்து மாற முயன்று வருகின்றன.இதற்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. உள்ளூர்வாசிளுக்கு கட்டாயம் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அதில் முக்கியமானது.இந்த நிலையில்தான் பஹ்ரைன் புதிய குண்டைப் போட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா நாடுகளை தங்களது 2வது தாயகமாக மாற்றிக் கொண்டு செட்டிலாகியுள்ள பல லட்சம் பேர் வேலையை இழந்து, தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நன்றி:thatstamil

No comments: