29 Aug 2007

நினைவுகள் வாசிக்கும் செய்திகள்.

1999 ஜூன் மாதத்தின் கடைசி வாரமாகவோ அல்லது ஜூலை மாதத்தின் முதல் வாரமாக அது இருந்திருக்க வேண்டும்.

பக்கத்து ஊரில் ஒரு விழிப்புணர்வு பொதுக்கூட்டம். ஐந்து அல்லது ஆறு வேன்களில் எங்கள் ஊரிலிருந்து ஆண்களும், பெண்களுமாக சென்று கலந்து கொண்டனர். முதல் நாள் இரவு சென்னை விமான நிலையம் வரை சவாரிக்கு சென்று அடுத்த நாள் பகல் முழுதும் வேனை ஓட்டி வந்து இரவு ஊர் வந்து சேர்ந்த ஒரு வேன் ஓட்டுனரும் இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்காக சவாரி வந்தார்.

மிகுந்த தூக்க கலக்கத்தில் அவர் இருந்த போதும், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் ஊரிலிருந்து 15 அல்லது 20 நிமிடங்கள் பயணிக்கும் தூரம் என்பதால் சமாளித்து வேனை ஓட்டி வந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் அந்த வேனை வாடகைக்காக ஓட்டி வந்தார்.

இரவு 10.30 மணிக்கு பொதுக்கூட்டத்திற்கு போய் சேர்ந்தவர்கள் சுமார் இரவு 1.30 மணிக்கு கூட்டம் முடிந்து அனைவரும் வேனுக்கு திரும்பினர். மூன்று அல்லது நான்கு வண்டிகள் முன்னே புறப்பட்டுச் செல்ல சென்னை சென்று திரும்பி வந்த அந்த ஓட்டுனரின் வண்டி அதனை பின் தொடர்ந்து புறப்பட்டது.

தூக்க கலக்கத்தோடு இருந்த அந்த ஓட்டுனர் புறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர் வண்டியில் வேகமாக சென்று மோதி விட்டார். மோதிய வேகத்தில் வேனின் முகப்பு நசுங்கி அந்த ஓட்டுனரின் பக்கம் சாய்ந்து விட்டது. அவருடைய முகம் கடுமையாக சிதைந்தும் விட்டிருந்தது. அவருடைய மூக்கு சரி பாதியாக கிழிந்து தொங்கியது. வேனின் ( Steering) ஸ்டேரிங் அவருடைய வயிற்றில் இறங்கி அவரை அதிலிருந்தும் விடுவிக்க முடியாமல் பிடித்திருந்தது, இத்தனைக்கும் வண்டி ஆஃப் ஆகாமல் கடுமையான சத்தத்துடன் ரேஸ் ஆகிக் கொண்டே இருந்தது.

கூடியிருந்த மக்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகு அந்த வேனிலிருந்து மீட்க்கப்பட அந்த ஓட்டுனர் உடனடியாக அடுத்த 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எங்கள் ஊர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு முதலுதவி செய்த மருத்துவர் உடனே அவரை தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொல்லி அறிவுறுத்தினார். கூடியிருந்த மக்களில் சிலர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்கள். சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சொன்னார்கள்.

ஒருவழியாக அவருடைய தாயாருக்கு தகவல் சொல்லப்பட்டு அவரும், அவரோடு மற்ற இரண்டு நண்பர்களும் துணைக்கு சேர்ந்து அந்த ஓட்டுனரை தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியெல்லாம் தனது மகனை மடியில் போட்டுக் கொண்ட அந்த தாய் என் செல்லமே, என் தங்கமே, என்று சப்தமே இல்லாமல் கண்ணீர் சிந்தி அழுதபடியே வந்தார். நீங்கள் இப்படி அழுதீர்கள் என்றால் ஓட்டுனர் பயந்து விடுவார், அதனால் தைரியமாக இருங்கள், தைரியமான வார்த்தைகளை சொல்லுங்கள் என்று துணைக்கு வந்த அந்த இரண்டு சகோதரர்களும் சொல்லியபடி வந்தனர். அந்த தாய் அந்த ஓட்டுனரை ஈன்றெடுத்த போது கூட இப்படியொரு வேதனையை அனுபவித்திருக்க மாட்டார் என்றே சொல்ல வேண்டும்.

அதிகாலை நான்கு மணிக்கு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு போய் சேர்ந்தது கார். விபத்திற்குட்பட்ட அந்த ஓட்டுனரை காரிலிருந்து ஸ்ரக்ட்சருக்கு மாற்றி மருத்துவமனையின் உள்ளே எடுத்துச் சென்றனர். முறையற்ற மருத்துவத்திற்கான அனைத்து அடையாளங்களும் அங்கே தெரிந்தது. அந்த ஓட்டுனர் இருக்கின்ற நிலை கண்டு அதற்காக எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்காமல் மிகச் சாதாரணமாக அங்கிருந்த மருத்துவர்கள் அவரை கையான்டனர். மயக்க மருந்து போன்ற எதுவும் கொடுக்காமல் கிழிந்திருந்த மூக்கை தைத்தனர். அவருடைய இரண்டு கால்களும் வழக்கத்திற்கு மாற்றமாக வேறு திசை நோக்கி திரும்பியிருந்தது. ஸ்கேன் போன்ற எந்த ஒன்றையும் எடுக்காமல் அவர் வலிக்கிறது, வலிக்கிறது என்று கதறக் கதற அவருடைய கால்களை நேராக ஆக்கி இருபக்கமும் பலகை போன்ற ஒன்றை கொடுத்து கட்டினார்கள்.

இத்தனையையும், அந்த கண்களால் கண்டு கொண்டு, மகன் பயந்து விடுவானே என்று சப்தமே இல்லாமல் வாயை மூடிக் கொண்டு குமுறிக் குமுறி கண்ணீரை மட்டும் வெளியாக்கிக் கொண்டு நின்றார் அந்த தாய். அவருடைய அந்த நிலை வேறு யாருக்கும் வந்து விடாமல் அந்த இறைவன் அனைவரையும் பாதுகாக்க வேண்டும். பெரியளவில் எதுவுமே நடக்காதது போல் காட்டி மனதளவில் அந்த ஓட்டுனரை தைரியமாக்க வேண்டும் என்ற நோக்கில் துணைக்குச் சென்ற அந்த இரண்டு நபர்களும் அந்த ஒட்டுனரோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

என்னப்பா நடந்துச்சு? வண்டில பிரேக் பிடிக்கலையா? என்று ஒருவர் கேட்க, இல்லண்ணே! மெட்ராஸ் போயிட்டு வந்ததுல சரியான டையடுண்ணே.. அதான் கொஞ்சம் கண் அசந்துட்டேன் என்றார் அந்த ஓட்டுனர். வாயெல்லாம் ஒரு மாதிரியா இருக்குண்ணே, ஒரு சுவிங்கம் வாங்கித் தர்றிங்களா? என்றும் கேட்டார். அதெல்லாம் இப்ப சாப்பிடக்கூடாது தம்பி, இந்தா கொஞ்சம் பால் சாப்பிடு என்று அந்த ஓட்டுனரின் தலையை மடியில் வைத்துக் கொண்டு ஒரு ஸ்பூன் வழியாக கொஞ்சம், கொஞ்சமாக அந்த தாய் அந்த மகனுக்கு பால் ஊட்டினார்.

பொழுது விடிந்து அந்த ஓட்டுனரின் உறவுக்காரர்களும், ஊர்க்காரர்களும் வரிசையாக வரத் தொடங்கினர். துணைக்கு வந்த அந்த இரண்டு சகோதரர்களும் அந்த ஓட்டுனரிடமும், அவரின் தாயிடமும் விடை பெற்று ஊர் வந்து சேர்ந்தனர்.

அந்த இருவரில் ஒருவர் ஊரில் தனது வீட்டில் சிறிது நேரம் உறங்கி விட்டு சில நண்பர்களை அழைத்துக் கொண்டு மீண்டும் தஞ்சை மருத்துவமனைக்கு சென்று விட்டார். அங்கு சென்று நிலைமையை பார்த்த அவர் அந்த ஓட்டுனரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றச் சொல்லி அங்கு கேட்டிருக்கிறார். அதற்கெல்லாம் நிறைய பார்மாலிட்டீஸ் இருக்கு என்பதை அங்கிருந்தவர்களால் உணர்ந்தப்பட்டார். பிறகு அவரோடு முதல் நாள் இரவு வந்திருந்த மற்ற நண்பரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரை இந்த மருத்துவமனையிலிருந்து மாற்றுவதற்குன்டான ஏற்பாட்டை செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் அவருக்கு தஞ்சையில் தெரிந்த சில நல்ல பெரிய மனிதர்களின் வழியாக முயற்சி செய்து அவரை அந்த மருத்துவமனையிலிருந்து மாற்றுவதற்குன்டான ஏற்பாட்டை செய்தார். ஒரு அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் அவர் வீட்டு தொலைபேசி அலறியது. தஞ்சையிலிருந்து அதே நண்பர் மறுமுனையில் பேசினார். அழுது கொண்டே அந்த ஓட்டுனர் இறந்து விட்டதாக சொன்னார் அந்த நண்பர். (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஹூன்)

அந்த ஓட்டுனரின் இரண்டு கிட்னியும் விபத்தில் பழுதடைந்திருந்தது என்று அவருடைய போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னது. ஒரு மனிதன் இறந்து விடுவான் என்று தெரிந்தாலும் கூட முதற்கட்டம் தொடர்ந்து, இறுதி வரை முறையான மருத்துவ முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் அந்த மருத்துவ(மனித)ர்களுக்கு தெரியவில்லை? 10 மாதம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, உருண்டு, பிறண்டு படுக்க முடியாமல் அந்த ஓட்டுனரை வயிற்றில் சுமந்து, பார்த்து, பார்த்து பாதுகாத்து பிரசவித்த அந்த தாயின் கண்ணீர் துளிகளுக்கு நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கவே செய்யும்.
மருத்துவ படிப்பு முடிந்து பட்டம் பெற்றவர்கள் சில காலம் கிராமங்களில் பனியாற்ற வேண்டும் என்ற புதிய சட்டம் வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை சேர்ப்பதற்கு முன்பு அவர்களுடைய சேவை உணர்வையும், தியாக உணர்வையும் ஆதாரங்களின் அடிப்படையில் தெரிந்து கொண்ட பிறகே அவர்களை மருத்துவ படிப்பு படிக்க அனுமதிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால் அது சரியாக வருமா?

அல்லது சேவை உணர்வு மற்றும் தியாக உணர்வு கொண்ட நபர்களை கண்டறிந்து அவர்களுடைய கல்வியறிவை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்களுக்கு மருத்துவ பயிற்சி அளித்து அவர்களை நல்ல மருத்துவர்களாக செய்தால் அது தவறாகுமா?

விபத்து போன்ற செய்திகளை பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் என் நினைவில் வந்து போகும் அந்த ஓட்டுனரின் மரணம் இந்த கட்டுரை எழுதும் அளவிற்கு என்னை உந்தித் தள்ளியதும் ஒரு செய்தி கண்டுதான். ஓரிரு நாட்களுக்கு முன்னால் வின் டி.வி.யின் செய்தியில், தஞ்சை மருத்துவமனையில் நோயாளியாக சேர்க்கப்பட்ட ஒருவர் மரணமடைந்ததை தொடர்ந்து அவரின் உறவினர்கள் அங்கிருந்த மருத்துவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்களாம். அதை கண்டித்து அந்த மருத்துவர்கள் பாதுகாப்புக் கோரி வேலை நிறுத்தம் செய்தார்களாம்.

இதில் இறந்தவர்களின் உறவினர்கள் செய்தது சரியா?

அல்லது பாதுகாப்புக் கோரி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தது சரியா?

மனிதர்கள் மருத்துவனாக, விஞ்ஞானியாக, பெரிய மேதையாக, கோடீஸ்வரனாக இருந்தாலும் அவன் முதலாவதாக கடவுளை நம்பும் விதத்தில் நம்ப வேண்டும். நாம் என்ன செய்தாலும் அதை கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை நம்ப வேண்டும். நாம் செய்யும் நன்மைகளுக்கு பரிசும், தீமைகளுக்கு தண்டனையையும் தருபவர் கடவுள் என்றும் நம்ப வேண்டும். இப்படி நம்பி அதை செயல் வடிவிலும் காட்டினால் மட்டுமே மனிதர்கள் குறைந்த பட்சம் பிற மனிதர்களை மதித்து செயல்படுவான்.

அன்புடன்,அபிவிருத்தி.

No comments: