தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம்
ரயில்வேயை அலற வைத்த 'பொது ஜனம்'
சாத்தான்குளம்: லஞ்சம் தராததால் தன்னை பாதி வழியில் இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகரையும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத தென்னக ரயில்வேயையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அலற வைத்துள்ளார் ஒரு திருவாளர் பொதுஜனம்। சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஹென்ஸ் குமார் கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி திருச்சூர் செல்ல குருவாயூர் எக்ஸ்பிரஸில் ரயிலில் முன் பதிவு செய்தார்। அவருக்கு வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கிடைத்தது। பயண தினத்தன்று ரயிலில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட்டைக் காட்டி விபரம் கேட்டார். அதற்கு அவர் நாகர்கோவிலில் உங்களுக்கு பெர்த் கிடைக்கும் என்று கூறியதால் ஹென்ஸ் குமார் ரயிலில் ஏறினார். நாகர்கோவில் வந்ததும் டிக்கெட் பரிசோதகர், உங்களுக்கு பெர்த் உறுதியாகிவிட்டது. ஆனால், ரூ. 100 (லஞ்சம்) தந்தால்தான் பெர்த் தரப்படும் என்றார். என்னிடம் பணம் இல்லை என்று ஹென்ஸ் குமார் கூறியதையடுத்து அவரை டிக்கெட் பரிசோதகர் வலுக்கட்டாயமாக அடுத்த ஸ்டேசனில் இறக்கிவிட்டார். இது குறித்து ஹென்ஸ்குமார் சென்னையில் உள்ள தென்னக ரெயில்வே மேலாளருக்கு புகார் அனுப்பியும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து தனது புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to information act) மூலம் அறிந்து கொள்ள விரும்புவதாகக் தென்னக ரெயில்வேக்கு கடிதம் அனுப்பினார். இதையடுத்து சிக்கலில் மாட்டிய தென்னக ரயில்வே அதிகாரிகள் உடனடியாக டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ஹென்ஸ் குமாரை நேரில் சந்தித்த அந்த டிக்கெட் பரிசோதகர், மன்னிப்பு கேட்டுக் கொண்டதோடு புகாரை வாபஸ் பெறுமாறும் கெஞ்சியுள்ளார். அந்த டிக்கெட் பரிசோதகரின் வேலை காலியாகும் நிலை ஏற்பட்டதால் ஹென்ஸ் குமாரும் மனமிறங்கி தனது புகாரை வாபஸ் பெற்றுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது மிகப் பெரிய ஆயுதம். அதை நாம் சரியாக பயன்படுத்தினால் தவறு செய்யும் அரசுத்துறையினரை அலற வைக்க முடியும். www.thatstamil. com
2 Sept 2007
நீங்களும் புகுந்து விளையாடலாம் இந்த சட்டம் மூலம்
Posted by Abdul Malik at 12:07 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment