3 Sept 2007

சகோதரர்/நண்பர்களுடன் பழக வேண்டிய முறை

இஸ்மாயிலும் இப்ராஹிமும் நெருங்கிய நண்பர்கள்.
ஒருநாள் பாலைவனப்பகுதி ஒன்றை சுற்றிப் பார்க்க வந்த அவர்கள், திரும்பிச் செல்ல வழி தெரியாமல் தவித்தனர். சூரிய வெப்பத்தின் தாக்கம் ஒரு பக்கமும், அனலை வாரி இறைக்கும் சுடுமணல் மறுபக்கமும் அவர்கள் கொண்டு வந்திருந்த நீரை விரைவில் காலியாக்கி விட்டிருந்தது.
வழி தெரியாத விரக்தியுடன் பசியும், தாகக்கொடுமையும் ஒன்று சேர்ந்துவிட, வழி தவறியதன் காரணத்தை ஆராய்ந்த அவர்களின் பேச்சு, ஒரு சமயத்தில் கடும் விவாதமாக மாறி விட்டது. பேச்சின் இடையில் கோபத்தின் உச்சிக்கு சென்ற இஸ்மாயில் தன்னிலை மறந்து இப்ராஹிமின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான். மனம் புண்பட்ட இப்ராஹிம், மேற்கொண்டு எதுவும் பேசாமல் மவுனமாக சுடுமணலில் அமர்ந்து இவ்வாறு எழுதினான்:
"என்னுயிர் சகோதரன், என் கன்னத்தில் அறைந்த நாள் - இன்று"அதன் பின்னர் எதுவும் பேசிக்கொள்ளாமல் கடுமையான நீர் தாகத்துடனே வெகு நேரம் நடந்த அவர்கள், இருவரும் தொலைவில் ஒரு பாலைவனச் சோலை தெரிவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மகிழ்ச்சியுடன் அங்குள்ள குளத்தின் நீரை அள்ளிப்பருகிய இருவரில் இப்ராஹிம், பாலைவன சூட்டில் ஆர்வம் தாளாமல் குளிப்பதற்காக குளத்தில் குதித்தான். சிறிது நேரம் சென்றது.
குளத்தின் கரையோரம் மரங்களின் நிழல் தந்த சுகத்தில் லேசாகக் கண்ணயர்ந்திருந்த இஸ்மாயில், திடீரென கேட்ட இப்ராஹிமின் கூக்குரல் கேட்டு அதிர்ச்சியடைந்து குளத்தின் பக்கம் ஓடினான். அங்கே மரத்தின் வேர்களுக்குள் சிக்கி நீந்த முடியாமல் திணறிக்கொண்டிருந்த இப்ராஹிமைக் கண்டு உடனடியாக தாமதிக்காமல் தானும் குளத்தில் குதித்தான். கடும் சிரமங்களுக்குப் பின்னர் இப்ராஹிமை கரையோரமாக இழுத்து வந்தான் இஸ்மாயில்.
அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட இப்ராஹிம் சிறிது நேரம் கழித்து உணர்வு பெற்றான். நன்றியுடன் தன் நண்பனை பார்த்துக்கொண்டே சுற்றும் முற்றும் நோக்கி சற்று தள்ளி இருந்த பெரும் பாறை ஒன்றில் இவ்வாறு செதுக்க ஆரம்பித்தான்:
"என்னுயிர் சகோதரன், உண்மையிலேயே என்னுயிரைக் காத்த நாள் - இன்று "
இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இஸ்மாயில், "முன்பு நான் உன் கன்னத்தில் அறைந்தபோது பாலைவனத்தின் மணலில் எழுதிய நீ, இப்போது தேடிப்பிடித்து கல்லில் இதனை செதுக்குகிறாயே! ஏன்?" என்று சந்தேகத்துடன் நண்பனிடம் கேட்டான்.
லேசாக புன்னகைத்த இப்ராஹிம், "நம் சகோதரன் ஒருவன் உடலாலோ, உள்ளத்தினாலோ நமக்குத் தீங்கிழைத்து விட்டால் அத்தகைய செயல்களை, எதையும் நிமிடங்களுக்குள் மூடி மறைத்து விடும் பாலைவன மண்ணைப் போன்று மிக விரைவில் மறந்து மன்னித்து விடுமாறும், அதே சமயம் அச்சகோதரன் நன்மையான காரியங்களைச் செய்துவிட்டால் அதனைக் கல்லில் செதுக்கி வைக்கும் எழுத்துக்கள் நீண்டகாலம் நிலைத்திருப்பது போன்று என்றென்றும் மறவாமல் நிலையாக மனதில் நன்றியுடன் பதிய வைத்து நன்றி பாராட்டுமாறும் இஸ்லாம் நமக்குப் போதித்துள்ளது. இதனை ஏற்கனவே நீ அறிந்திருந்தாலும் அதனை உனக்கு வேறு வகையில் மனம் புண்படா வண்ணம் மென்மையாக உணர்த்த எண்ணியே இவ்வாறு செய்தேன்" என்று கூறினான் இப்ராஹிம். இதைக் கேட்டு வெட்கம் அடைந்து தலை குனிந்திருந்த இஸ்மாயிலின் கண்களிலிருந்து வடிந்த நீர் துளிகள், தன் உயிர் நண்பனை காயப்படுத்தியதற்கு அவன் மனதார மன்னிப்பு கோரியதையும், சகோதரர்/நண்பர்களுடன் பழக வேண்டிய முறை பற்றி தெளிவான முழு அறிவை அவன் பெற்றுக் கொண்டதையும் ஒருங்கே உணர்த்தின.
7:199 எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக! மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
7:200 ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.

(மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கிலச் சிறுகதை)

தமிழாக்கம்: அபூ ஸாலிஹா
நன்றி : www.satyamargam.com

1 comment:

அபூ ஸாலிஹா said...

அல்ஹம்துலில்லாஹ்!

மறுபதிப்பு செய்தமைக்கு நன்றி சகோதரரே! ஆனால் இவ்வாக்கத்தின் கீழ் இதனைப் பதித்த சத்தியமார்க்கம்.காம் (www.satyamargam.com) தளத்தினருக்கும் ஒரு நன்றியை சேர்ப்பித்து விடுங்களேன்!

நன்றி!