7 Aug 2007

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் துணிகரம்

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் துணிகரம்பயணியை தாக்கி ரூ.10 ஆயிரம் பறிப்புஓட ஓட விரட்டிச் சென்று மர்ம கும்பல் அட்டகாசம்
பட்டுக்கோட்டை,ஜுலை.31-
பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் பயணியை ஓட, ஓட விரட்டி தாக்கி ரூ.10 ஆயிரம் பறித்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
பஸ்பயணி
பட்டுக்கோட்டையை அடுத்த புனல் வாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டான்லி (வயது 32) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மயிலாடுதுறைக்கு சென்றுவிட்டு ரெயிலில் பட்டுக்கோட்டைக்கு வந்தார்.
தொடர்ந்து சொந்த ஊருக்கு போகவேண்டிய டவுன் பஸ்சுக்காக பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது பஸ்நிலையத்தில் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று தனியாக நின்ற ஜோசப் ஸ்டான்லியிடம் ` நீ எந்த ஊர்... பெயர் என்ன?' மிரட்டினர். மேலும் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறிக்க முயன்றனர்.
ஓட, ஓட தாக்குதல்
நிலைமையை புரிந்துகொண்ட ஜோசப் ஸ்டான்லி மர்ம கும்பலிடம் இருந்த தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் விடாமல் ஜோசப்பை ஓட ஓட விரட்டி, உருட்டு கட்டை, செங்கல்லால் தாக்கினர். அத்துடன் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துவிட்டு குற்றுயிராக விட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவத்தை பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம கும்பல் சுவர்ஏறி குதித்து தப்பி சென்றனர். உடலில் பலத்த காயத்துடன் கிடந்த ஜோசப் ஸ்டான்லி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகிறார்.
பாதுகாப்பு வேண்டும்
பயணிகளின் நெஞ்சை பதற செய்யும் இந்த சம்பவம் பற்றி பட்டுகோட்டை பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
`பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இரவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கணவனுடன் வரும் பெண்களின் நகைகளை பறிப்பது, அதனை தட்டிகேட்கும் கணவனை தாக்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை தட்டிகேட்டால் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
பஸ் நிலையத்தின் அருகில் போலீஸ் நிலையம் இருந்தும், இரவில் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, பஸ் நிலையத்தில் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.'
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: