3 Jan 2008

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கரம்: 80 பேர் கும்பலிடம் சிக்கி சீரழிந்த 2 இளம் பெண்கள்


மும்பை, ஜன.3-
மும்பையில் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவு, நட்சத்திர ஓட்டலில் இருந்து வெளியே வந்த 2 இளம் பெண்களை 80 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தது.
தலைகுனிவு
கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பல்வேறு நகரங்களில் நடந்த கலாசார சீரழிவுகள் தற்போது வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சென்னையில் ஒரு ஓட்டலில், இரவு விருந்தின்போது மது மயக்கத்தில் ஆடிய இளைஞர்கள், மேடை சரிந்து நீச்சல் குளத்தில் விழுந்தனர். அதில் ஒரு கம்பியூட்டர் என்ஜீனியர் பலியானார். ஒரு பெண் என்ஜீனியர் உயிருக்கு போராடி வருகிறார்.
இதுபோல கொச்சி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடிய வெளிநாட்டு பெண்களிடம் சிலர் சில்மிஷம் செய்துள்ளனர். இந்த நிலையில் மும்பையின் பிரபல ஜுஹூ கடற்கரையில் ஒரு அதிர்ச்சி கரமான நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது. நாட்டையே தலைகுனிவுக்கு உள்ளாக்கும் அந்த சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
ஆடைகளை கிழித்து
திங்கள்கிழமை நள்ளிரவு, மும்பை ஜுஹூ கடற்கரையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, இரவு 1.45 மணிக்கு இரண்டு இளம் ஜோடிகள் வெளியே வந்தனர். அவர்களில் ஒரு பெண் கருப்பு நிற பாவாடை சட்டை அணிந்து இருந்தார். மற்றொரு பெண் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து இருந்தார். ஓட்டலில் இருந்து வெளியே வந்த அந்த ஜோடிகள், கடற்கரையை நோக்கி சென்றன. அங்கு இருந்த ஒரு கும்பல், ஆண் நண்பர்களை பிடித்து வைத்துக் கொண்டு இரண்டு இளம் பெண்களிடமும் சில்மிஷம் செய்ய ஆரம்பித்தது. அந்த பெண்கள் சத்தம் போட்டனர். உடனே அந்த கும்பலுக்கு ஆதரவாக மேலும் சிலர் வந்தனர். இதனால், கும்பலின் எண்ணிக்கை 80 பேராகி விட்டது.
15 நிமிடங்கள்
அந்த கும்பலை சேர்ந்தவர்கள், இரண்டு பெண்களையும் கட்டிப் பிடித்தபடி செக்ஸ் தொந்தரவு செய்தனர். அந்த பெண்களின் ஆடைகளையும் கிழித்தனர். அவர்களுடன் வந்த ஆண் நண்பர்கள் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றனர். இந்நிலையில், ஒரு பெண்ணை அருகில் உள்ள மரத்துக்கு கீழேயும், மற்றொரு பெண்ணை ஒரு காருக்கு அருகிலும் அந்த கும்பல் தள்ளியது. அதே வேகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் அந்த பெண்களின் மேல் விழுந்தனர்.
ஆடைகள் கிழிந்து, நகக் கீறல் காயங்களுடன் இருந்த இரண்டு பெண்களும் அபயக் குரல் எழுப்பினர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த போராட்டத்தை, மும்பையின் பிரபல பத்திரிகையை சேர்ந்த இரண்டு புகைப்படக்காரர்கள் கவனித்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு, கும்பலை சேர்ந்தவர்களை ரகசியமாக படம் பிடித்தனர்.
வெளிச்சத்துக்கு வந்தது
இதற்கிடையே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வந்து, கும்பலை விரட்டி அடித்தனர். இரண்டு ஜோடிகளையும் மீட்டு அருகில் உள்ள ஜுஹூ போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். திங்கள்கிழமை நள்ளிரவில் நடந்த இந்த கூத்து, மும்பை பத்திரிகையில் நேற்று காலை படங்களுடன் பிரசுரமான பின்னரே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வளவு சம்பவம் நடந்த பின்னரும், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. எனவே, நேற்று காலை வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. தற்போது பத்திரிகையில் செய்தி வெளியானதால், அதன் அடிப்படையில் நேற்று பிற்பகலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த படங்களை எடுத்த இரண்டு புகைப்படக்காரர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டு, கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே, `பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தர வேண்டும்' என்று மும்பை மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் அர்ச்சனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: