30 Jan 2009

செல்போன் உபயோகிப்பதால் புதிய நோய்கள் வரும்

செல்போன் உபயோகிப்பதால் புதிய நோய்கள் வரும்

மாணவர்கள் நடத்திய ஆய்வில் தகவல்

செல்போன் உபயோகிப்பதால் வரும் புதிய நோய்கள் குறித்து பெங்களூர் மருத்துவ மாணவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மனிதர்களின் பழக்க வழக்கங்கள் மாறுவதற்கேற்ப நோய்களும் புதிய அவதாரங்கள் எடுத்து வருகின்றன.செல்போன் உபயோகம் நாட்டில் அதிகரித்துவரும் நிலையில் செல்போன் உபயோகிப்பாளர்களை தாக்கி வரும் நோய் குறித்து பெங்களூர் கெம்பேகவுடா மருத்துவ அறிவியல் பயிற்சி மையம் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெங்களூர் கிம்ஸ் பணியாளர்களான டாக்டர்கள் யஷஸ்வினி தலைமையில் டாக்டர்கள் ஆஸ்தாகுப்தா, புஷ்பாகவுடா, ஸ்வப்னா ராமஸ்வாமி, வாணி, வினுதாரங்கப்பா ஆகிய 6 பேரும் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

பெங்களூரிலுள்ள 11 கல்லூரிகளில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.
அடிக்கடி உங்கள் பாக்கெட்டை சோதித்து செல்போன் இருக்கிறது என பார்த்து வருகிறீர்களா?. உங்களுக்கு வந்துள்ளது நோமோபோபியா,செல்போனை அடிக்கடி எடுத்து யாரும் அழைத்துள்ளார்களா என பார்க்கிறீர்களா உங்களை பீடித்துள்ள நோயின் பெயர் ரிங்சைடி.

செல்போன் உபயோகிப்பாளர்களிடம் அதிவேகமாக பரவிவரும் நோய் நோமோபோபியா. அதாவது, மொபைல்போன் பத்திரமாக உள்ளதா இல்லையா என்ற பயம்.இதனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி தங்கள் செல்போன் இருக்கிறதா என சோதித்துக் கொண்டேயிருப்பார்.

அடுத்து பரவிவரும் நோய் ரிங்சைடி அதாவது,தனக்கு அழைப்பு ஏதேனும் வந்துவிட்டதோ என்ற கவலையில் அடிக்கடி செல்போனை கையில் எடுத்து கால்கள்,எஸ்எம்எஸ் வரவை பரிசோதிப்பது.

இந்நோய்கள் தவிர நீண்டநேரம் செல்போன் உபயோகிப்பவர்களின் தூக்கம் குறைந்து வருவதாகவும்,காதுவலி,தலைவலி,கழுத்துவலி,கட்டைவிரல் வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

செல்போன்களை நடந்துபோகும் போது பேசிக்கொண்டே செல்லும் வழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் 44சதவீதம் பேர் விபத்துக்களில் சிக்கி மயிரிழையில் உயிர்பிழைத்துள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

No comments: