22 Jun 2008

உங்கள் வாகனத்திற்க்கு பெட்ரோல் போட போறிங்களா ?

ஜீரோவைப் பாருங்க சார்!'' - டூ வீலருக்கு பெட்ரோல் போடச் சென்றால், பங்க்கில் இப்படி சின்சியராகத்தான் மீட்டர் பார்க்கச் சொல்கிறார்கள்.

ஜீரோவை முறைத்து முறைத்துப் பார்த்தாலும், நம் மனசில் ஏதோ உறுத்தல். கடைசியில், நாம் சந்தேகப்பட்டது சரிதான்.

வழக்கமாக ஒரு லிட்டருக்கு அறுபது கிலோ மீட்டர் போகும் பைக் இந்த முறை ஐம்பதிலேயே `ஸாரி தலைவா, இதுக்கு மேல முடியலை!'' என்று முட்டுகிறது.

சின்சியர் சிகாமணிகள் பெட்ரோலை குறைத்து ஊற்றிவிட்டார்கள்.
சர்வீசுக்கு விட்ட பைக்கை எடுத்து வரச் சென்றால், அங்கே மறுபடியும் ஒரு மனஉளைச்சல்.

``ஏதாவது நல்ல பங்க்ல பெட்ரோல் போடுங்க. இன்ஜின்ல மண்ணெண்ணெய் நாத்தம் அடிக்குது'' என கேஷுவலாகச் சொல்கிறார் மெக்கானிக்.

``வருஷத்துக்கு ஒருமுறை சட்டமுறை எடை அளவுத்துறை மூலமாக பெட்ரோல் பங்க்குகளில் இருக்குற மீட்டர் சோதனை செய்யப்படுது. மீட்டரில் சரியான அளவு மாறாதபடி, அதிகாரிகள் ஈயமுத்திரை போட்டு லாக் செஞ்சிடுவாங்க. இந்த லாக் இருந்தா,மீட்டர் காட்டுற அளவுப்படிதான் பெட்ரோல் போடமுடியும்.ஆனா பெரும்பாலான பங்க்குகளில் சாமர்த்தியமா இந்த லாக்கை ரிலீஸ் செஞ்சு, இஷ்டத்துக்கு மீட்டரை செட் பண்ணிடுறாங்க. இதன்மூலமாக, மீட்டர் அதிகமா அளவு காட்டுனாலும், பெட்ரோல் குறைவாதான் வரும்'' என்று சொல்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் நிறுவனர் தேசிகன்.

``சரி, ஒரு கேனை எடுத்துட்டுப் போய் பெட்ரோல் வாங்குனா?' என்று நம் கன்ஸ்யூமர் மனசு யோசிக்கலாம். ஆனால் சட்டமே நமக்குத் தடையாக நிற்கிறது. வெடிமருந்துப் பொருட்கள் சட்டத்தின்படி, பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை கேனில் எடுத்துச் செல்ல முடியாதாம். நாம் கொடுத்த பணத்துக்குக் குறைவான பெட்ரோல் ஊற்றினால், தீர்வுக்கு என்னதான் வழி?
அருகிலுள்ள சட்டமுறை எடை அளவுத்துறை அலுவலகத்தில் புகார் பண்ணலாம்.

``எங்களிடம் உள்ள 5 லிட்டர் அளவோடு பங்க்குக்குப் போய், சந்தேகத்துக்குரிய பம்ப்லயிருந்து பெட்ரோல் போடச் சொல்வோம். பெட்ரோல் சுலபமா ஆவியாகுற பொருள்ங்கிறதால, 15 மில்லி லிட்டர் வரைக்கும் குறைஞ்சா தப்பு இல்லை. அதுக்கும் மேலே அளவு வித்தியாசப்பட்டா, பெட்ரோல் குறைவா ஊத்தியிருக்கிறதை உறுதியா சொல்லிடலாம்!'' என நம்பிக்கையூட்டுகிறார் இந்தத் துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன்.
பெட்ரோலில் மண்ணெண்ணெய், நாப்தா, பென்சீன் உள்ளிட்ட பொருட்களைக் கலப்படம் செய்வதும் ஜோராக நடக்கிறது.

பெட்ரோலில் 15 சதவீதம் நாப்தா கலந்தால், ஒரு பங்க் தினமும் 32 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாய் லாபம் பார்க்க முடியும் என்கிறது ஒரு சுற்றுச்சூழல் பத்திரிகை. இந்த வேதிப் பொருளை 20 சதவீதம் கலந்தால்கூட, இந்தியத் தர நிர்ணய அமைப்பின் சோதனைகளால் கண்டுபிடிக்க முடியாதாம்.

உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலன் துறையில் புகார் செய்து, பெட்ரோல் கலப்படப் பிரச்னைக்கு வாடிக்கையாளர்கள் தீர்வு காண முடியும். பங்க்கில் பில்டர் பேப்பர் கேட்டு, அதில் பெட்ரோலை ஊற்றியும் கலப்பட பெட்ரோலைக் கண்டுபிடிக்கலாம்.

சாதாரண பெட்ரோலில் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போது, ஸ்பெஷல் பெட்ரோல் மட்டும் தரமாகவா இருக்கும்?

``ஸ்பெஷல் பெட்ரோலில் சில பூஸ்டர்களை சேர்க்குறாங்க. எத்தனால், மெத்தனால் உட்பட எல்லா ரசாயனப் பொருட்களும் இதுல சரியான விகிதத்தில் இருக்கும்.தூசுப் பொருட்களும் கணிசமாக குறைக்கப்பட்டுருது. இதனால் இன்ஜின் சீராக இயங்குறதோட, 10 சதவீதம் கூடுதலா மைலேஜ் கிடைக்கும்'', விளம்பரத்தில் வருவது போலவே சொல்கிறார் ஒரு பெட்ரோல் பங்க் ஊழியர்.

``ஸ்பெஷல் பெட்ரோல் போட்டா, கூடுதலா சில கிலோ மீட்டர் போக முடியலாம். ஆனால் இதைத் தயாரிப்பதில் சர்வதேச அளவில் பின்பற்றப்படும் விதிமுறைகளை நம் நாட்டுல பின்பற்றுறாங்களாங்கிறது சந்தேகம்தான்.

பெட்ரோல் எடுத்துவர்ற டேங்கர் லாரிகள் உள்சுவரில் வருஷத்துக்கு ஒருமுறை `கோட்டிங்' கொடுக்கணும். பத்து வருஷத்துக்கு ஒரு முறை பங்க்குகளின் டேங்குகளைப் புதுப்பிக்கணும். இதுமாதிரியான அடிப்படை விதிமுறைகளையே பல பங்க்குகள் மதிக்குறது இல்லை. அதனால் அங்கே பெரிய உத்தரவாதத்தோடு தரப்படுற ஸ்பெஷல் பெட்ரோலை எந்தளவுக்கு நம்ப முடியும்?'' என்று கேட்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வருடத்தில் எந்த நாளிலும் எண்ணெய் நிறுவனங்களின் ஏஜென்சிகள் பங்க்குகளைச் சோதனையிட முடியும் என டீலர்கள் சொல்கிறார்கள். பெட்ரோல் அளவு குறைந்தாலும் கலப்படம் செய்தாலும் அரசின் இரு வேறு துறைகள் நடவடிக்கை எடுக்கின்றன.

இருந்தாலும், வாடிக்கையாளர்கள் பங்க்குகளில் ஏமாறுவது தொடர்கிறது. நம்மூரில் கஷ்டமும் குழப்பமும் ஆன விஷயம் வாடிக்கையாளராக இருப்பதுதான்..

எப்படி ஏமாத்துறாங்க?

வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் பெட்ரோலைக் குறைத்து ஊற்றுகிற மோசடி எப்படி நடக்கிறது? தேசிய சட்டமுறை எடை அளவுத் துறையில் இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கிருஷ்ணமூர்த்தியிடம் பேசியபோது,

``பெட்ரோல் ஊத்துற மெஷினில் கியரை மாத்துனா, மீட்டரில் தெரிகிற அளவு அதிகமா இருக்கும். பெட்ரோல் கம்மியா வரும். சில சமயங்கள்ல பம்ப்புல காற்று அடைச்சிருந்தா, அதுக்கும் சேர்த்து மீட்டரில் அளவு கூடும். வாடிக்கையாளர்கள் கவனமா இருந்தா, இந்த மோசடியைத் தவிர்க்க முடியும். மீட்டர் ஜீரோ காட்டும்போது மட்டும்தான் பெட்ரோல் போட நாம அனுமதிக்கணும்.

வாடிக்கையாளர்கள் வராம, குறைந்த பட்சம் அரைமணி நேரம் சும்மா இருக்குற பம்ப்புல முதல் ஆளா போய் பெட்ரோல் போட்டாலும் அளவு குறையும். அதனால கூட்டம் இல்லாத பங்க்ல பெட்ரோல் போடறதைத் தவிர்க்குறது நல்லது.

பம்ப்பின் சரியான வேகம் ஒரு நிமிஷத்துக்கு 10 லிட்டர். இதுக்குக் குறைவான வேகத்துல பெட்ரோல் ஊத்தினா, அளவு குறையுதுங்கிறதை கண்டுபிடிச்சிடலாம். இரண்டு பம்ப் இருந்தா, பெரும்பாலும் அதுல ஒண்ணு மட்டும்தான் தப்பா செட் பண்ணப்பட்டிருக்கும். இன்னொரு பம்ப் ஒழுங்கா செயல்படும். ரெய்டு நேரத்துல தப்பிக்குறதுக்காக இந்த ஏற்பாடு.

பங்க்ல இருக்குறவங்க தவறான பம்ப் மூலமா நமக்கு பெட்ரோல் போடுறதுக்கு ஆர்வம் காட்டுவாங்க. அப்போ நாம் உஷார் ஆகி, அடுத்த பம்ப்புக்குப் போயிடணும். இதையெல்லாம் மீறி பெட்ரோலின் அளவில் சந்தேகம் இருந்தா, அந்தப் பகுதியில் இருக்குற எடை அளவு கட்டுப்பாட்டு அதிகாரிகிட்டே புகார் பண்ணலாம்'' என்று வழிகாட்டுகிறார்.

-ஆனந்த் செல்லையா
தகவல் : குமுதம்

No comments: