10 Jun 2008

பிளஸ் 2 பெயிலானவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் 11.06.2008 முதல் வினியோகம்

பிளஸ் 2 பெயிலானவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் 11.06.2008 முதல் வினியோகம்

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுத நாளை முதல் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 2 தேர்வில் 3 பாடங்களுக்குள் தேர்ச்சி அடையாத மாணவ, மணவிகளுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத் தேர்வுகள் நடக்கின்றன.

தேர்வு எழுத ஏற்கனவே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கடந்த 6ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. கடைசி தேதி வரை விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுதலாம்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்புவோர் அதிகபட்சமாக 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாமல் இருந்தால் மட்டுமே தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விரும்புவோர் தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதன்படி ஒரு பாடத்துக்கு ரூ.85 மற்றும் ரூ.1,000 சேர்த்து செலுத்த வேண்டும். இரண்டு பாடங்களுக்கு ரூ.135 மற்றும் ரூ.1,000 சேர்த்து செலுத்த வேண்டும். மூன்று பாடங்களுக்கு ரூ.185 மற்றும் ரூ.1000 சேர்த்து செலுத்த வேண்டும்.

தேர்வுக் கட்டணங்களை,
அரசு தேர்வுகள் இயக்குனர், சென்னை -60
என்ற பெயரில் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஏற்கனவே தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தனித்தேர்வர்கள் சிறப்புக் கட்டணமாக ரூ.1,000க்கு மட்டும் டிடி எடுத்து சமர்ப்பித்தால் போதும்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு ஆதாரமாக தேர்வுத் துறையால் அனுப்பப்பட்ட குறிப்பாணையை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் தேர்வு எழுதுவோருக்கான விண்ணப்பங்கள் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வினியோகிக்கப்படும்.

விண்ணப்பங்களை சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள்,

திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்கள்,

புதுச்சேரியில் உள் இணை இயக்குனர் (கல்வி) அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 13ம் தேதி மாலைக்குள் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் சென்னையில் மட்டுமே தேர்வு மையம் அமைக்கப்படும்.

எனவே, சென்னை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் சமர்ப்பிக்கும் போது அப்போதே பதிவு எண் மற்றும் தேர்வு மையம் குறிப்பிட்டு ஹால் டிக்கெட் வழங்கப்படும்.

இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தகவல் : தமிழ்முரசு

No comments: