7 Jul 2009

ஒல்லிக்குச்சி உடம்பு' வேண்டுமா ?

உடல் எடை என்பது இன்றைய நாகரீக, பரபரப்பான உலகில் பல இன்னல்களைத் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.

பொதுவாக நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள கொழுப்புச் சத்துகளும், தேவையற்ற சத்துகளும் உடலில் ஏற்படும் ஜீரண வேதி மாற்றத்தால் முழுவதுமாக எரியாமல் உடலின் ஓரிடத்தில் தங்குவதாலோ அல்லது தேவையற்ற பகுதிகளில் தசையோடு சேர்வதாலோ தொப்பை உள்ளிட்ட உடல் குண்டு தோற்றம் ஏற்படுகிறது.

கார்போஹைட்ரேட் உணவுகளையும், அசைவ உணவுகளையும் அதிக அளவில் உண்பதால் உடல் எடை பெருத்து, பார்ப்பதற்கு அசிங்கமான தோற்றத்தைத் தருகிறது. சரி, உடல் எடையைக் குறைத்து `ஸ்லிம்' ஆக இருப்பது எப்படி? என்பதற்கு சில யோசனைகளை இங்கே தந்துள்ளோம்.

அதற்காக இதைப்படித்து விட்டாலே உடல் எடை குறைந்து விடும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள்(!). படித்த கையோடு, உருப்படியான திட்டங்களை வகுத்து, அதற்கேற்ப உணவுப் பழக்க முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

விரைவில் நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்பை' பெற்று விடுவீர்கள். 2030ஆம் ஆண்டு வாக்கில், உலக அளவிலான மக்கள் தொகையில் 58 விழுக்காட்டினர் குண்டான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள் என்று அமெரிக்காவில் வெளியான ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளதாம்.

அந்த 58 விழுக்காட்டினர் என்பது இந்த கட்டுரையால், ஒரு விழுக்காடு குறைந்தாலும் மகிழ்ச்சியே. உங்களை அதிக உடல் எடையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், குண்டாக இருப்பவர்கள், உடல் எடையை குறைப்பதற்கும் சில யோசனைகள் இதோ...

1. பொதுவாக எந்தவகை உணவாக இருந்தாலும், அது உங்களுக்கு மிகவும் பிடித்த உணவானாலும் சரி, வயிறு புடைக்க சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இதுவே பாதியளவு உடல் கோளாறுகளைத் தவிர்க்கக் கூடியது. வயிற்றில் பாதியளவு உணவு, கால் பாகம் தண்ணீர், கால் வயிறு காலியாக இருத்தல் வேண்டும்.

2. கூடியவரை குறித்த நேரத்தில் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்தல் அவசியம். காலை உணவு 8.30 - 9.00 மணிக்குள். மதிய உணவு 1.30 - 2.30 மணி. மாலையில் 2 பிஸ்கட் உடன் தேநீர் ஒரு கப். இரவில் கூடுமானவரை 9 மணிக்கு முன் உணவு உண்டு, அரைமணி நேரமாவது விழித்திருக்க வேண்டும். சாப்பிட்டவுடன் தூங்கச் செல்வதைத் தவிருங்கள். மேலும் இரவு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நலம்.

3. வயதிற்கேற்ற உணவுப் பழக்கமுறை: 25 வயது வரை ஆண்/பெண் இருபாலருக்குமே ஜீரண சக்தி சீராக இருக்கும் என்பதால், எந்தளவு கடினமான உணவுகளையும் செரிக்கக்கூடிய வகையில் உடல் உறுப்புகள் செயலாற்றும். 25 வயதைத் தாண்டி விட்டாலே, அசைவ உணவுகளை குறிப்பிட்ட ஒருநாளில், ஒரு வேளையோ அல்லது இரு வேளையோ என திட்டமிட்டு, ஓய்வு நேரத்தில் சாப்பிடுவது நலம். அசைவ உணவு சாப்பிடும்பட்சத்தில், அவை ஜீரணமாவதற்குத் தேவையான பொருட்களை போதிய அளவு சேர்த்துக் கொள்தல் நலம்.

4.முப்பது வயதைக் கடந்து விட்டவர்கள், அசைவ உணவு சாப்பிடும் பட்சத்தில் முறையான அணுகு முறையைக் கடைபிடித்தல் வேண்டும். வயது ஏற, ஏற ஜீரண உறுப்புகளின் செயல்பாடு ஓரளவுக்கு குறையத் தொடங்கும். 40 வயதைக் கடந்தவர்கள் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை இரவில் சாப்பிடுவதால், உடல் எடைபோடுவதைத் தவிர்க்கலாம்.

5. சரி, குண்டாக இருப்பவர்கள், சாப்பாட்டைக் குறைக்க வேண்டுமா? அப்படி திடீரென்று சாப்பிடும் அளவைக் குறைப்பவர்களுக்கு சக்தி இழப்பு (Energy loss) ஏற்பட்டு சோர்வு உருவாக வாய்ப்புள்ளது. எனவே உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கக்கூடிய, அதே நேரத்தில் உடல் எடையைக் கூட்டாத உணவு வகைகளாகச் சாப்பிடலாம். இதனால் சோர்வு ஏற்படுவதில் இருந்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் திகழ முடியும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பழங்களையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

6. காலையில் காபி, டீ பானங்களுக்குப் பதிலாக இளநீர், பதநீர், அருகம்புல் சாறு, நீராகாரம் போன்றவற்றை அருந்துங்கள். இளநீர் உடல் சூட்டைத் தணிப்பதுடன், அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுநீரக எரிச்சலைப் போக்கி, ஜீரணத்தை எளிதாக்குகிறது.

7. உடல் பருமன் உள்ளவர்கள் காலைநேரத்தில் இட்லி, இடியாப்பம், புட்டு, ஓட்ஸ் கஞ்சி போன்ற நீராவியில் வேகக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

8. மதிய உணவாக ஒருபிடி அரிசி சோற்றுடன், காய்கறிகள் குறிப்பாக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறித்த அல்லது வதக்கிய காய்கறிகளை தவிர்த்தல் சிறந்தது. சிறிதளவு தயிரும் எடுத்துக் கொள்ளலாம்.

9. மாலையில் 2 அல்லது 3 பிஸ்கட் உடன் தேநீர் அருந்தலாம்.

10. இரவு உணவில் அவசியம் சப்பாத்தி, கோதுமையால் ஆன உணவு வகைகள் சாலச் சிறந்தது. கேழ்வரகுக் கஞ்சி, அடை போன்றவையும் கொழுப்பை மேலும் அதிகரிக்கச் செய்யாது.

உடல் பருமன் கொண்டவர்கள் இதேபோன்ற உணவுப்பழக்க முறைகளை குறைந்தது 2 மாதத்திற்குக் கடைபிடிப்பீர்களானால், அப்புறமென்ன, நீங்களும் `ஒல்லிக்குச்சி உடம்புக்காரர்கள்தான்...'

- மிவா

No comments: