கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...
அன்பார்ந்த நண்பர்களே ஒருநாள் கொண்டாட்டத்திற்காக கிரெடிட் கார்டை கவனமில்லாமல் கையாண்டால் அது பல நாட்களுக்கு பிரசினைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...
1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.
2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட உங்கள் விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒரு ஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.
3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.
4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.
5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.
6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.
7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள்.? தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.
8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.
9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.
10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.
11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.
12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.
13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (available balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.
15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.
16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.
17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.
18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.
19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள்.
அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது http://www.creditcardwatch.org/ என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.
(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்க்கவும்)
-மக்கள் சட்டம்
4 Jun 2009
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா? சில ஆலோசனைகள்...
Posted by Abdul Malik at 12:34 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment