14 Apr 2009

வளைகுடா வாசிகளுக்கு விடிவு எப்போது ?

வளைகுடாவாசிகளுக்கு விடிவு எப்போது?

மத்திய அரசின் கணக்குபடி ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் கோடி ரூபாயை தன் சொந்த நாட்டிற்கு அனுப்பி நாட்டின் முதுகெலும்பாய் இருக்கின்றனர் வெளிநாடு வாழ் இந்தியர்கள்.

பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அவர்கள் கூட்டம் கூட்டமாய் நாடு திரும்புவது அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மட்டுமல்லாமல் தமிழகம் உட்பட இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் நலனுக்காக வைக்கப்பட்ட கோரிக்கையான 114 கோடி ரூபாய் என்ற மிகக்குறைந்த அளவைக் கூட பட்ஜெட்டில் அரசு ஒதுக்காமல் போனது மிகவும் துர்பாக்கியமாகும்.
தேர்தலை கருத்தில் கொண்டு 14 வது லோக்சபா கூடிய அன்று பல்வேறு நிதிகளின் பெயரில் 55000 கோடிக்கான திட்டங்களை அறிவித்த மத்திய அரசு, இந்த வருடம் மட்டும் இந்தியாவுக்கு திரும்பவர இருக்கின்ற ஐந்து லட்சம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பரிதாபகரமான நிலையை கண்டுகொள்ளாமல் விட்டதற்கான காரணம் மக்களுக்கு தெரியாமலில்லை.

100 கோடி ரூபாயை ஒதுக்கி, திரும்பி வருபவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் வீதம் பண உதவி செய்ய நலவாரியம் திட்டமிட்டிருந்தது. வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுக்காக 14 கோடி ரூபாய்க்கான பாதுகாப்பு நிதிதான் இதன் அடுத்த திட்டம். வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்பவர்களிடமிருந்து 800 ரூபாய் அங்கத்தினர் கட்டணமாக பெற்று, வருமானத்திற்கான ஏற்பாட்டை செய்யவும் இது திட்டமிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு பட்ஜெட்டில் பணம் ஒதுக்காததால் அனைத்து திட்டங்களும் தண்ணீரில் எழுதப்பட்டதை போலானது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை ஏற்படுத்தப்படும் என அடிக்கடி சொல்லி ஏமாற்றி வரும் மத்திய அரசுக்கு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பாதுகாப்பு நிதி ஒதுக்கப்படாததற்கு நியாயமான காரணங்களும் இருக்கலாம்.

ஆனால், அதற்கும் மேலாக, வாக்களிக்கும் உரிமையில்லாத இவர்களுக்கு உதவி செய்வதாலோ இவர்கள் திருப்திப்படுவதாலோ நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்ற ‘ஜனாதிபத்திய சிந்தனை’ தான் இதற்கு முழுக்க முழுக்க காரணம்.

வளைகுடாவிலிருந்து கோடி கோடியாக இந்திய வங்கிகளுக்கு வந்து குவிந்தாலும் அங்கு பணிபுரிபவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால்தான் அரசு இவர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்தபோதும் மேற்சொன்ன காரணம் தான் மிக முக்கிய காரணமாகும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய 70000 கோடி ரூபாயை ஒதுக்கியும் அதில் பெரும்பகுதியை உடனடியாக வழங்கவும் செய்த போது ஆளுங்கட்சியினரின் கண் முன்னால் நின்ற ‘ஓட்டு வங்கி அரசியல்’, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விஷயத்தில் நிற்காததை தெரிந்து கொள்ள கடினமேதுமில்லை.

நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் கூட நிதியாக பத்து கோடி ரூபாயும் கடனாக 100 கோடி ரூபாயும் இந்த பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் மலையாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கிடைத்த மொத்த வருமானமான 1,62000 கோடியில் ஐந்தில் ஒரு பாகம் வளைகுடாவினால் ஏற்பட்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் இப்படி ஒரு நிதி ஏற்படுத்தப் பட்டுள்ளதா என்பதை நாம் அறிந்தவரை இல்லை என்றே கூறலாம். தமிழக அரசு வெளியிட்ட பட்ஜெட்டிலும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் மறுவாழ்வு பற்றி அரசு மூச்சு விடவில்லை.

இதில் வளைகுடா தமிழனிடம் வசூல் வேட்டையாடி மனிதநேயத்திற்காக களமிறங்கி இன்று திமுகவின் காலடியில் கிடக்கும் சிலர், நிறைவான பட்ஜெட், மிகச்சிறந்த பட்ஜெட் என்ற வர்ணணையுடன் ஒத்து ஊதும் நிலையை பார்த்து வளைகுடா தமிழர்களின் நெஞ்சம் கனக்கின்றது.

வளைகுடாவில் பணிபுரியும் ஐம்பது லட்சம் இந்தியர்களில் அதிகமானோர் தமிழர்களே. வீட்டு டிரைவர், மருத்துவ மனைகள் சுத்தம் செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், தெரு கூட்டுபவர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று மிகக்குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு, சொந்த நாட்டிற்கு உதவுபவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

ஆனால் இவர்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட்டின் போது நமக்காக கோரிக்கை வைக்கப்படுகிறது என்றோ அது நிராகரிக்கப் பட்டுவிட்டது என்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவின் செல்வந்தர்களும் பண முதலைகளும் ஸ்விஸ் பேங்க் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை சேமித்து வைக்கும் போது, வரிந்து கட்டிக் கொண்டு வெயிலிலும் பனியிலும் பணிபுரிந்து பொருளீட்டும் இந்த சாதாரண தொழிலாளர்களோ இந்திய வங்கிகளில் பணத்தை போட்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுகின்றனர்.

அதன் காரணமாகத்தான் இவர்களின் திரும்புதல் தமிழகத்தை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நியாயமான வழியில் பொருள் கிடைப்பதற்கான வேலையோ தொழிலோ இல்லாத பட்சத்தில் தான் திருட்டு, வழிப்பறி, விபச்சார தொழில், பொதை பொருள் விற்பனை, கடத்தல் போன்றவை பெருகும்.


எனவே மாற்று வழிக்கான ஏற்பாட்டை உடனடியாக செய்தாக வேண்டும். உள்நாட்டில் வேலையின்மை காரணமாக வெளிநாடு சென்று அடிமையாய் வேலைபார்த்து தாய்நாட்டுக்கு உதவிய தமிழர்களை உதாசீனப்படுத்துவது அரசுக்கு அழகல்ல.

தேர்தலை மட்டும் கவனத்தில் கொண்டு திட்டங்கள் தீட்டுவதை விட்டு மனிதாபிமான அடிப்படையில் அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான புனர் நிவாரணத்திற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அறிந்தோ அறியாமலோ நேற்று வாரிக் கொடுத்த வள்ளல்கள் இன்று வறுமையில் வாடும்போது வாரி அணைக்க வேண்டியது அரசின் கடமை. இதை மத்திய, மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் சமுதாய அமைப்புகளும் குறிப்பாக மீடியாக்களும் நினைத்தால் செய்ய முடியும்.

“அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைக்கிறான். தான் நாடியோரை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்.” - அல்குர்ஆன் 10:25

நன்றி : உணர்வு வார இதழ்

No comments: