26 May 2008

விலையை குறைத்தால் மட்டும் போதுமா ?

தமிழக உணவகங்களிலே, உணவுகளுக்கு விலைகுறைப்பு செய்ய வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

உணவக அதிபர்களும் விலை குறைப்பு செய்வதாக ஒப்புக்கொண்டனர் என்று செய்தி வெளியானது.

கடந்த 3 ஆண்டுகளில் உணவுப் பொருட்கள் மீதான விலை அசுரத்தனமாக எகிறியுள்ளது என்றுதான் கூறவேண்டும். 2 ரூபாய் இருந்த டீ 2.50 ஆகி இப்போது 3 ரூபாயாக உயர்ந்து விட்டது. வடையும் 3 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தரமான உணவகங்களிலே மதிய வேளை சைவ சாப்பாடு, சுமாராக 30 ரூபாயாக உயர்ந்து விட்டது. அதுவே அசைவ உணவுக்கு 50 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. இது எல்லாம் அளவு சாப்பாட்டுக்குத்தான்.

அளவு சாப்பாடு என்பது வயிற்றுக்குப் போதிய அளவு சாப்பாட்டை குறிக்காது. அது கொடுக்கும் நோய்க்குள் அடங்கும். கூடுதல் உணவை மேலும் ஒரு தட்டு வாங்கி சாப்பிடத் தூண்டும் அளவுக்கு அளவு சாப்பாடு அளந்து தரப்படுகிறது. சில உணவகங்களில் உணவை நிறுத்துத் தருகிறார்கள். சரியாக 400 கிராம், 500 கிராம் இருக்கும் என்கிறார்கள்.

சென்னையில் சாதாரணமாக மூன்று வேளை சாப்பாட்டுககு நாள் ஒன்றுக்கு ரூ75 செலவிடவேண்டும். சராசரியாக ஒரு மாதத்திற்கு சாப்பாட்டுக்கு மட்டும் 3000 ரூபாய் செலவிட வேண்டி வரும். குறைந்தது மாதம் ஒன்றுக்கு 4000 முதல் 5000 வரை சம்பாதிப்பவர்கள், சாப்பாட்டுக்கும், போக்குவரத்திற்கும் போக எண்ணிப் பார்த்தால் மீதமாக இரண்டு கைகளிலும் பத்து விரல்கள் தான் மிஞ்சும்.

புதிய புதிய வேலைவாய்ப்புகளுக்காக நகரங்களுக்கு நகர்ந்து செல்லும் இளை ஞர்கள் லாட்ஜ்களிலும், மேன்சன்களிலும் வாடகைக்கு அறை எடுத்து தங்குகின்றனர். இவர்களின் உணவு தேவைகளால் நகரங்களில் உணவகங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நல்ல தரமான ஊதியம் பெறுபவர்கள் விலையை கேட்காமல் சாப்பிட்டு விட்டு இடத்தை காலி செய்கின்றனர்.

சிலர் வாடிக்கையாளர்களாகி மாதந்தோறும் மொத்தமாக காசு கொடுத்து விடுகின்றனர். அதே விலை உள்ளூர்வாசிகளுக்கும் நிர்ணயிக்கப்படுகிறது. அவர்களது ஊதியம் போதியதாக இல்லாத போது, உணவுக்கான செலவுக் காசை ரசத்தில் கரைத்து விடுகிறது. இதனால், விலை குறைப்பு அறிவிப்பு அரசின் அக்கறை பாராட்டத்தக்கது.

அதே நேரம் விலை குறைக்கப்படும் என்பதற்கு உத்திரவாதம் ஏதாவது இருக்கிறதா? தரம் என்று வருகிறபோது, அதை நினைத்துப் பார்ப்பவர்களால் உணவை ஜீரணிக்க முடியாது. சந்தைகளிலே, அழுகிப்போன கழிவுகளை உணவகங்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. குறைந்த விலைக்கு வாங்கிப் போய் சமைத்து கொடுக்கின்றனர்.

சொத்தை கத்தரிக்காய், அழுகிய தக்காளி, புழு உள்ள வெண்டைக்காய், முற்றிய முருங்கைக்காய், வறண்டு போன அவரைக்காய் என எல்லாம் ஓட்டல் சமயலறையில்.

இதை எல்லாம் நினைத்துப்பார்த்தால் சாப்பிடும் இடத்தில் வாந்தியே வரும். அவசர கதியில் இயங்குபவர்களுக்கு இந்த கவனம் இருப்பதில்லை. அசைவ உணவகங்களிலே கோழி குருமா தருகிறார்கள். குருமாவுக்காக அவர்கள் கோழி வாங்குவதில்லை. கோழியில் இருந்து கழித்துப் போடும் தோல், இரைப்பை, ஈரல், தலை, கால்கள் எல்லாம் ஆக குறைந்த விலைக்கே வாங்கி நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

உணவகங்களில் மாட்டுக்கு போடும் முள்ளங்கியை தவிர கத்தரிக்காய், வெள்ளரிக்காய், முருங்கை காய்கறிகளை காணமுடிவதில்லை.
இவற்றில் நல்லவிதமாக சமைக்கப்பட்ட உணவுகள் உள்ள இடங்கள் உயர்தர உணவகம் என்று குறிப்பிடப்படுகிறது. குறைந்தது 60 முதல் 80 ரூபாய் வரை உணவுக் கட்டணம் வசூலிக்கப்படும்.

அடுத்ததாக கேரள மக்கள் வந்து உணவகம் நடத்தும் இடங்களில் உள்ள அவலம் தரத்திற்கு எந்த சான்றிதழ்களும் இல்லை. மேலும், பரோட்டோ தருவார்கள், அதற்கு குருமா தரமாட்டார்கள். குருமா தனியாக காசு கொடுத்து வாங்க வேண்டும்.

3 பரோட்டா 10 ரூபாய் என்றால் அதற்கான குருமா 30 ரூபாயாக உள்ளது. தமிழர்களை இழிச்சவாயன் என்று நினைக்கிறார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும். 3 ரூபாய்க்கும், 15 ரூபாய்க்கும் 20 ரூபாய்க்கும் விற்று வருகிறார்கள். இவற்றை தடுப் பதற்கு ஒரு அரசாணையே தேவைப் படுகிறது.
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள வர்த்தக கடைகளில் அனைத்துப் பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக விற்கப்படுகின்றன. ஒரு வடை 5 ரூபாய் ஒரு இட்லி 4 ரூபாய். ஒரு தோசை 14 ரூபாய். ஒரு தண்ணீர் உறை 1.50 அல்லது 2 ரூபாயாக உள்ளது. காரணம் கேட்டால் லட்சக்கணக்கில் ஏலத்திற்கு எடுத்திருக்கிறோம். அதனால் இதுதான் விலை என்கின்றனர். ஏலத்தில் கடை எடுப்பவன் நிர்ணயித்த காலத்திற்கும் சம்பாதிக்க முடியாத அளவு ஏல விலையை நிர்ணயிப்பதும் பின்னர் எவ்வளவு விலைக்கு வேண்டுமானாலும் விற்று கொள்ளலாம் என அனுமதிப்பதும் அரசாகவே இருப்பதால் யாரை குறை கூறுவது?

பயணிகளின் அவசரத்தையே தங்கள் கொள்ளை லாபத்திற்கு தோதாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். பேருந்து, ரயில் நிலையங்களில் விலை குறைப்புக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

உணவகங்களில் தரமான, சுத்தமான, அழுகாத காய்கறிகள் உபயோகிக்கப்படுகிறதா என்பதை அதிரடி ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை அமைக்க வேண்டும். துரித உணவகங்களில் கோழி உள்ளிட்ட பிராணிகள் உணவுக்காக கொல்லப்பட்டு குளிரூட்டும் பெட்டிகளில் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துகின்றனர். அவற்றை உண்பதால் உணவு செரிமான கோளாறு, வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல் போன்ற வியாதிகள் உண்டாகின்றன. இதுதான் காரணம் என்பதை புரியாமல் தொடர்ந்து அத்தகைய உணவுகளை வாங்கி உண்கின்றனர்.

அசைவங்களால் செய்யப்பட்ட ரோஸ்டர் உணவுகள் தயாரிக்கப்பட்டு பல நாட்கள் 'வெப்ப கட்டுப்பாடு வைப்புகளில்' வைத்து விற்பனை செய்கின்றனர். இத்தகைய உணவுகள் குறித்து மருத்துவர்கள் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மக்களும் விழிப்படையவில்லை. உணவக உரிமையாளர்களுக்கு மனிதாபி மானமும் இருப்பதில்லை. ஆட்சியாளர்களும் அக்கறை காட்டுவதில்லை. எண்ணெயில் பொரித்த உணவுகளால் இருதய நோய் அடைப்பு கொழுப்பு சார்ந்த நோய்கள் உண்டாவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

எண்ணெயில் பொரித்த உணவு விற்பனை செய்வதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். உணவு தடை உரிமை சட்டம் மத்திய அரசிடம் இருப்பதனால், மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாததால், பான் பராக் போன்ற அநீதிகள் நீதிமன்றங்களாலேயே விற்பனைக்கு மறு அனுமதி வழங்கப்படுகின்றன.

உணவு சார்ந்த அவலங்கள் ஒழிய மத்திய அரசே ஒரு ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அளவுக்கு உணவு சார்ந்த பிரச்சனைகள் பிசாசு பிடித்து கிடக்கிறது.

-ஜி.அத்தேஷ்

தகவல் : http://www.tmmkonline.org/

No comments: