உலகிலேயே மிக அசுத்தமான இடத்தில் காஸ்ட்லியான வியாபாரச் சந்தை எதுவென்றால், அது தமிழகமெங்கும் விரவியிருக்கும் மோட்டல்கள்தான்.
ஆம்! மோட்டல் எனப்படும் பேருந்து பயணத்தில் சாலையோர உணவகங்களில்தான் மேலே சொன்ன மகா கொடுமைகள்.
‘‘கீரையில உப்பு அதிகம். உருளைக்கிழங்கு வேகவே இல்லை. ரசம்ங்கிற பேர்ல கோமியம். அரை வேக்காட்டில் புழுத்துப்போன சாப்பாட்டுக்கு அம்பது ரூபா புடுங்கறீங்களே’’ என்று பயணி ஒருவர் சென்னை செல்லும் வழியிலுள்ள மோட்டலுக்குள் எகிற, அவரை அடித்து துவைத்து பிழிந்து காயப்போட்டு விட்டனர்.
கேள்வி கேட்டவர் இன்று மாதச் சம்பளத்தை இழந்து கைகால் ஊனமுற்று மருத்துவச் செலவு செய்து கொண்டிருக்கிறார்.
‘‘ஒரு காப்பியைக் கொடுத்துட்டு பத்து ரூபாய் என்கிறீங்க. காப்பியில பால் சுத்தமாவே இல்ல. என்னய்யா காப்பி விக்கிறீங்க?’’ என்று கொதித்துப்போன வழக்கறிஞர் காபியைக் காட்டிலும் சூடாகியிருக்கிறார். கடைசியில் இருதரப்பிலுமே கைகலப்பில் முடிந்திருக்கிறது.
தாறுமாறான விலை. தரங்கெட்ட மினிமம் கியாரண்டி. அவர்கள் வைத்ததே சட்டம் என்பதற்கு மேற்கண்ட சம்பவங்கள் சில சாம்பிள்களே!
‘‘மோட்டல்கள் இருக்கும் நட்ட நடு காட்டுப்பகுதியில் அவர்களை மீறி யாரும் ஒன்றும் செய்யமுடியாது. அந்தளவிற்கு மோட்டலில் வேலை பார்க்கும் ஆட்கள், அடியாட்கள் ரேஞ்சிற்கு அதட்டி மிரட்டி வியாபாரம் செய்வதுதான் அவர்களின் பெரிய பலம்’’ என்கிறார் சமூகநல ஆர்வலர் ஒருவர்.
காவல்துறையில் பணியாற்றும் நேர்மையான உயரதிகாரி ஒருவர்,
‘‘அடிக்கடி சென்னை போய்ட்டு வரக்கூடிய ஆளுங்க நான். நானே பல இடங்களில் அவங்களோட செயல்பாட்டை கண்டு கோபப்பட்டிருக்கேன். ஒருமுறை விக்ரவாண்டி மோட்டல்ல சாப்பிட நேர்ந்தது. ரெண்டு தோசையை வச்சாங்க. என்ன கறின்னு தெரியலை? கிண்ணத்துல கறியைக் கொண்டு வந்து வச்சாங்க. நான் கேட்டது தோசை மட்டுந்தான். ஆனா, அவங்களா கறின்னு கொண்டு வந்து வச்சுட்டு சட்டை பண்ணாம போய்ட்டாங்க. நான் எதிர்த்துக் கேட்டப்போ, இதுதான் இருக்கு. சாப்பிடறதா இருந்தா சாப்பிடுங்க. இல்லைன்னா அறுபது ரூபா பணத்தைக் கொடு’ங்கன்னு பில்லை வச்சுட்டான். நாம பேச சாய்ஸே தரமாட்டாங்க. நான் பிரச்னை பண்ணிட்டேன். உடனே அங்கிருந்த கேஷியர் அமைச்சர் ஒருவர் பெயரைச் சொல்லி ‘அண்ணந்தான் இன்சார்ஜ். அங்க பேசுங்கன்’னு காலரைத் தூக்கி விடுறான்!?’’ என்கிறார்.
‘‘பிஸ்கெட், வாட்டர் பாட்டில் எல்லாமே ஐந்து ரூபாயிலிருந்து எட்டு ரூபாய் வரை விலை ஜாஸ்தியாத்தான் இருக்கும். சில இடங்களில் பொம்பளைங்க பாத்ரூம் போறதுக்கு மட்டும் அஞ்சு ரூபாய்க்கு அதிகமா வாங்கிறாங்க. ஏன்னா அவங்களால மோட்டலை சுத்தி வேற எங்கேயும் போகமுடியாது. ஆம்பளைக போனா உருட்டுக்கட்டையால அடிச்சு ஆளைகாலி பண்ற மாதிரி அடாவடி வேலைகளாம் பண்ணி பெட்டுல படுக்க வைச்சுருவானுக. இதெல்லாம் பாக்கிறப்ப வயித்தெரிச்சலாத்தான் இருக்கு’’ என்று குமுறுகிறார் இன்னொரு பயணி.
சென்னைக்கு அடிக்கடி சென்று வரும் தனியார் வங்கி ஊழியரோ,
இங்கே சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவர்கள் பரிதாபத்திற்குரிய பாவப்பட்டவர்கள். ஏனெனில், தன் வாழ்நாளில் யாரிடமும் வாங்காத பேச்சுக்களையும் திட்டுகளையும் இங்கே சிறுநீர் கழிக்கும் இருபது முப்பது நொடிகளுக்குள் வாங்கிவிடுவார்கள். இன்னும் ஒரு சிலரோ, ரத்தம் சொட்ட உருட்டுக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவார்கள்.
‘‘அரை கப் பால் பதினைஞ்சு ரூபா. காஞ்சு போன இள நீர் இருபது ரூபா. ஒரு கப் புளிச்ச மாவுல ஊத்துற ஊத்தப்பம் பதினெட்டு ரூபா. ஒரு இட்லி ஆறு ரூபா. அஞ்சு ரூபாய்க்கு பொறாத கூல்டிரிங்ஸ் பதினைந்து ரூபா. இதெல்லாம் எந்த நாட்டுலங்க? அநியாயத்தை யாருமே தட்டிக் கேட்கிறதில்லை. மீறி கேட்டா, ‘ஒருமையில பேசி அந்தப் பகுதியில இருக்கிற ஆளுங்கட்சி மினிஸ்டரைப் போய் பாரு’ங்கன்னு சொல்றானுக.
மாமண்டூர், விக்ரவாண்டி, தொழுதூர், கொட்டாம்பட்டி, துவரங்குறிச்சி, வையம்பட்டின்னு திருச்சியை சுத்தியே எத்தனையோ மோட்டல் கொள்ளைகள் பகிரங்கமா நடந்துட்டு இருக்கு.
இன்னைக்கு இந்த ‘ஹைடெக் தொழில் கொள்ளை’ தமிழகமெங்கும் மக்களை மிதிச்சு கோரமாக தடம் பதிச்சிருக்கு’’ என்றார் முகம் சிவக்க. இதுபற்றி திருச்சி டெக்கான் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில செயலாளர் பாரதராஜாவிடம் விளக்கம் கேட்டோம்.
‘‘மோட்டல் கொள்ளையை விட மோசமாக மக்களுக்கு தீங்கிழைக்கிற விஷயம் இன்னைக்கு வேறெதுவும் இல்லீங்க. எந்தவொரு மோட்டல்லயும் விலைப் பட்டியலே வச்சிருக்கமாட்டாங்க. கிராமத்துல திருவிழாவுல போட்டிருக்கும் கடை மாதிரி வாய்க்கு வந்த விலையைச் சொல்லுவாங்க.லட்சக்கணக்கான மக்களின் (பேருந்து) வழிப்பறியைத் தடுப்பதாக நினைத்துக்கொண்டு மோட்டல்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை நிறுத்தவே கூடாது என அரசாங்கமே அரசாணை இடுவதைத் தவிர வேறு வழியில்லை ’’ என்கிறார் பாரதராஜா நெத்தியில் அடிச்ச மாதிரி. கவனிக்குமா நம் அரசு?.
இரா.கார்த்திகேயன் KUMUDAM.
19 May 2008
ஹைவே ஹோட்டல்கள் .ஹை டெக் தில்லு முல்லுகள்.
Posted by Abdul Malik at 2:24 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment