பூமியில் இருக்கின்ற அம்மாவுக்கு, சொர்க்கத்திலிருந்து உன் குழந்தை எழுதும் முதல் கடிதம் இது. இல்லை இல்லை உன்கரு எழுதுகின்ற கடிதம் இது. உருத்தெரியாமல் போய்விட்ட எட்டு மாத கரு பேசுகிறேன். பூமியில் வாழ வருவதற்கு முன் தெருவில் தீக்கிரையாக்கப்பட்ட கருவின் முனகல் சப்தம் இது. வேடிக்கையாக இருக்கிறது அம்மா.. கடிதங்கள் சுமக்கும் கருக்களுக்கு மத்தியில் ஒரு கருவே இங்கு கடிதம் எழுதுகிறது பாரேன்..? உன்னுடைய வடிவில் இறைவனை சந்திக்க நினைத்தேன். இப்பொழுது இறைவனின் முகத்தில் உன்னை கண்டு கொண்டிருக்கின்றேன். ம்..ஆமாம்மா.. நான் இப்போது இறைவனின் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கின்றேன். அவன் என்னை உலகத்தில் எல்லோரைவிடவும் அதிகமாக விரும்புகின்றான். என்னம்மா நீ நக்கலாக சிரிப்பது போல தெரிகின்றது. "ம் என்னடா உலகத்தில் யார் யார் எப்படி எப்படி என்னை விரும்புவார்கள் என்று தெரிவதற்கு முன்னரே என்னை அழித்து விட்டார்களே..? எனக்கு எப்படி யார் அதிகமாய் விரும்புவார் என்று தெரியும் என்கிறாயே...? " யார் எப்படியோ தெரியாதம்மா ஆனால் நீ என்னை அதிகமாய் விரும்பியிருக்கிறாய் என்று உன் வயிற்றிலிருக்கும்போது நீ தந்த ஸ்பரிசத்திலிருந்து மெல்ல மெல்ல உணர்ந்தேன். நான் உன்னுடைய குழந்தையாக மாற நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது என்று இதுவரை உணர முடியவில்லை. ஏனம்மா என்னை கருவில் அழித்தார்கள்? உன் வயிற்றினுள் இருக்கும் அந்த அறையில் நான் மெய் மறந்து இருந்தேன் தெரியுமா..? அந்த பாதுகாப்பான இருட்டறை எவ்வளவு சுகமாய் இருந்தது? எந்த குழாய் வழியாகவோ வருகின்ற உணவுகள்.. யாரோ எனக்கும் சேர்த்து மூச்சு விடுவது போன்ற உணர்வுகள்.. நீ அங்குமிங்கும் நடக்கும்போது மேகங்களுக்கு மத்தியில் நான் உலா வருவது போன்ற கனவுகள்.. திடீரென்று ஆசிர்வதித்து விட்டு மறைந்து போகும் கைகள்.. எனக்கு முளைத்துள்ள குட்டி குட்டி விரல்கள்... எல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அம்மா.. அந்த இருட்டு உலகத்தில் எப்பொழுதும் யோசனையுடனும் தூக்கத்துடனும் என்னுடைய பொழுதுகள் கழிந்து கொண்டிருந்தன.. அவ்வப்போது நீ சமைக்கும்போது வருகின்ற குக்கர் விசிலின் சத்தம் கேட்டு நானும் பதிலுக்கு விசில் கொடுக்க நீ பரவசப்பட்டு ஒரு தட்டு தட்டுவாயே..? உன்னை நானும் என்னை நீயும் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் உனக்கும் எனக்கும் உள்ள அந்த நெருங்கிய உறவுக்கு என்ன பெயர் வைப்பது என்று இதுவரை என்னால் சொல்ல முடியவில்லையம்மா. எப்போதும் வயிற்றில் காதுவைத்து என் சத்தங்கள் கேட்டு மகிழ்ந்து என்னைவிடவும் ஒரு குழந்தையாக மாறி கத்துவாரோ என் தந்தை.. அந்தச் சத்தங்கள் எல்லாம் தொப்புள் கொடி வழியாக என்னைத் தொட்டுக்கொண்டிருந்தன.. எவ்வளவு சுகமாய் இருந்தது தெரியுமா..? பின்னர் உன்னைச்சுற்றிய உறவினர்களின் கேலி கிண்டல்கள் எல்லாம் கேட்டு கேட்டு அவர்களின் குரல் எனக்குள் பதிந்து போயிற்று.. வெளியே வந்ததும் முதல் வேலையாக உன்னை கேலி செய்தவர்களின் முகத்திலெல்லாம் ஒண்ணுக்கு அடித்து விடலாம் என திட்டமிட்டிருந்தேன் தெரியுமா..?
ஆரம்பிக்கின்றாய்.."வேண்டாம் ..வேண்டாம் விட்டுறுங்க .."என்று கெஞ்சுகிறாய்.. தந்தையின் குரல் வேறு பதட்டத்தோடும் உன்னைச் சுற்றி கதறியபடியும் கேட்கிறது.. ஒரு அரை மணி நேரமாவது நீடித்திருக்கும் அந்தக் குரல்களும் அப்பாவின் கதறல்களும், அதன் பிறகுதானம்மா அந்த உச்சக்கட்ட பயங்கரம் நடந்தது. ஒரு கூர்மையான சூலாயுதம் ஒன்று மெல்ல மெல்ல இருட்டறையைத் துளைத்துக் கொண்டு என்னை நோக்கி வருவதைக் கண்டேன்.. அந்த சூலாயுதம் துளைத்த ஓட்டை வழியாக பார்த்தால் சுற்றி எவரெவர்களோ ஆயுதங்களோடு நான் இருந்த இருட்டறையின் இருட்டை விடவும் மிகவும் இருட்டாய் உன்னைச் சுற்றிக் கொண்டு நிற்பதை.. நான் பயத்தில் அலற ஆரம்பித்து விட்டேன் அம்மா. ஆனால் என்னுடைய அலறல் உங்களுடைய காதுகளுக்கு கேட்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது.. ? பயங்கர சப்தத்துடன் விழுகின்ற அருவியின் அருகே ஒரு கட்டெறும்பின் கதறல் யாருக்கு கேட்கும்.? வெள்ள நீர் வீட்டுக்குள் நுழைந்து விட குடிநீரைப் பற்றி யாரும் கவலைப்படுவதுண்டோ..? நான் கதறுகிறேன்.. என்னுடைய கதறலையும் மிஞ்சி நீ கதறுகிறாய் அம்மா.. பாரேன் கதறலில் கூட நம் குரல்கள் ஒரே சீரில் ஒலிக்கின்றது.. வெகு தூரத்தில் இருந்து சில பெண்களின் குரல்கள் வேறு பரிதாபமாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட தவளையின் முனகலாய்;. என்னுடைய வலியைவிடவும் அந்தப்பெண்களின் அபாயக் கதறல்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது. யாரம்மா அந்தப் பரிதாபக் குரலுக்குச் சொந்தக்காரர்கள்.? அந்த அபாயச் சப்தங்களுக்கிடையே என்னுடைய வலியின் கதறல்கள் யாரையும் பொருட்படுத்தவில்லை.. அந்த சூலாயுதம் முதலில் நம்மை இணைத்த தொப்புள் கொடிகளை அறுத்தெறிந்து பின் என்னுடைய பிஞ்சு வயிற்றில் வந்து நிற்கிறது அம்மா.. நான் மறுபடியும் கதறுகின்றேன்.. நம் கதறல்களின் சப்தத்தோடு சுற்றியுள்ளவர்களின் கோஷ சப்தங்கள் ஓங்கி ஒலிக்கின்றது. சிரிப்புச் சப்தங்களும் கேட்கின்றது... அவர்கள் யாரம்மா..புதியாய் உலகத்தில் தோன்றிவிட்ட மிருக ஜாதிகளோ..? அந்த சூலாயுதம் என் சதைகளில் குத்தி உருவப்படும்பொழுது எனக்குண்டான வலியை கேட்கும் சக்தியும் உனக்கு இல்லை.. அந்த வலியில் கதறுகின்ற உனது வலியை உணரும் சக்தியும் எனக்கு இல்லாமல் போயிற்று.. "அம்மா அம்மா காப்பாற்றுங்கள் என்னை..ரொம்ப வலிக்கிறது அம்மா..தாங்க முடியவில்லை....என்னை விட்டு விடச்சொல்லுங்களேன்..""இனிமேல் இந்த உலகத்தின் எவர் கருவுக்கும் அனுப்பிவிடாதே என்று இறைவனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.. அவர்களிடம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள் அம்மா " வலி பொறுக்க முடியாமல் நான் மீண்டும் மீண்டும் கத்துகிறேன்.. எனது வயிற்றின் வழியாக பாய்ந்த அந்த சூலாயுதம் எனது குட்டி கண்கள் , குட்டி மூக்கு, குட்டி உதடுகள் , பட்டு விரல்கள் எல்லாம் தாறுமாறாய் கிழித்துப் போகிறது.



1 comment:
This article has really shaken me. I have no words to console the foetus who has been deprived of life due to barbaric assaults. Of course on many occassions these animals do such things in the name of religion. They are to be executed without mercy.
Post a Comment