22 Feb 2010

தினமும் 5 கி.மீ. நடந்தால் சர்க்கரை, இருதய நோயை விரட்டலாம் கருத்தரங்கில் அறிவுரை

கோவை: கோவை தினகரன் நாளிதழ் சார்பில் ஸ்ரீராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த மெடிஎக்ஸ்போ 2009 மருத்துவ கண்காட்சியில், காக்க காக்க இதயம் காக்க என்ற தலைப்பில் கே.ஜி. மருத்துவமனை இருதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரூக் பேசியதாவது:

இந்தியாவில் மாரடைப்பு நோய் விகிதாச்சாரம் அதிகரித்துக்கொண்டே போகிறது. முன்பு வயதானவர்களை தாக்கிய மாரடைப்பு நோய், இன்று வளம் வயதினரையும் தாக்குகிறது. நமது உணவு பழக்கவழக்க முறைகள்தான் இதற்கு காரணம்.

தாயின் வயிற்றில் குழந்தை உருவான ஆறாவது வாரத்தில் துடிக்க துவங்கும் தசைப்பகுதிதான் இருதயம். நமது உடலில் தொடர்ச்சியாக கடைசிவரை இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரே உறுப்பு இருதயம். இது, ஒருமுறை பழுதுபட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது கடினம்.

சர்க்கரை நோய், அதிக உடல் பருமன், கொழுப்பு சத்து, மது, புகை பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருத்தல், மனஅழுத்தம் ஆகியவை மாரடைப்பு உருவாக பிரதான காரணம். இப்பழக்கத்தை விட்டொழித்து இருதய நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம். இவ்வாறு டாக்டர் பரூக் பேசினார்.

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றி கோயம்புத்தூர் டயாபட்டீஸ் பவுண்டேசன் மருத்துவமனை தலைவர் டாக்டர் சேகர் பேசியதாவது:எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியம் அல்ல. நம் கடமையை நாமே திருப்திகரமாக செய்ய முடிந்தால் மட்டுமே அது ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். நம் உடலில் சர்க்கரை நோய் உருவாக நாம் சாப்பிடும் மாவு சத்துள்ள உணவு வகைகள்தான் காரணம். கார்போஹைட்ரேட் உணவுவகைகளை தவிர்த்து பழம், காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு வகைகளை பிரிஜில் நாள் கணக்கில் வைத்து சாப்பிடக்கூடாது. அதிக கொழுப்பு சத்து உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தானது.

அரிசி சாதம் அளவை மூன்றில் ஒரு பங்காக குறைத்துக்கொள்ள வேண்டும். பருப்பு, கீரை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தினம் 5 கி.மீ. தூரம் நடக்க வேண்டும். இது, இருதயத்தை வலிமைப்படுத்தும். தினமும் ஐந்து கி.மீ. தூரம் நடந்தால் நம் வாழ்நாள் 15 வருடம் கூடும். சர்க்கரை, இருதய நோயை விரட்டிவிடலாம்.

எந்த மருத்துவரும், மருத்துவமனையும் செய்யாத சாதனையை வாக்கிங் செய்யும். வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே முடிந்தவரை உடற்பயிற்சி செய்யலாம். உணவுமுறை மாற்றம், உடற்பயிற்சி இவை இரண்டும் இருந்தால் 70 சதவீத நோயை விரட்டிவிடலாம். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இவ்வாறு டாக்டர் சேகர் பேசினார்.

கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர் சதீஷ்குமார் உடல்பருமனுக்கான அறுவை சிகிச்சை முறைகள் குறித்து பேசியதாவது:

துரித உணவு பழக்கம், பரம்பரை கோளாறு, உடல்உழைப்பு குறைவு, உடற்பயிற்சி இன்மை காரணமாக இளவயதினருக்கும் உடல்பருமன் பிரச்னை காணப்படுகிறது. வயது, உயரம்த்திற்கு தகுந்த சராசரி எடை இருப்பது அவசியம். பித்தநீர் உணவுடன் சேர்ந்தால் கொழுப்பாக மாறி உடலில் சேர்கிறது. கை, கால் மற்றும் வெளிப்புற உடலில் உள்ள கொழுப்பைவிட வயிற்றில் உள்ள கொழுப்புதான் ஆபத்தானது.

அதிக கொழுப்பு உடலில் சேர்வதை தடுக்க சிறுகுடலில் 3 அடிக்கு மட்டும் பித்தநீர் சேருமாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவையான போது சிறுகுடலை பழைய நிலைக்கு கொண்டுவரமுடியும். ஆனால் வயிற்று பகுதியை வெட்டி எடுக்கும் சிகிச்சையில் பழைய நிலைக்கு கொண்டுவர இயலாது.

அதிக உணவு உட்கொள்ளாது தடுக்க இரைப்பையில் கிளிப் மாட்டும் முறை முன்பு இருந்தது. புண்ணாகிவிடும் ஆபத்து நிறைய உள்ளதால் அந்த சிகிச்சை நடைமுறையில் அரிதாகவே நடக்கிறது. கொழுப்பு பகுதி களை நீக்கும் சிகிச்சை எண்டாஸ்கோபி முறையிலேயே செய்வதால் தழும்புகள் ஏற்படாது. காய்கறி, கீரை, பழங்கள் உண்பது, வாய்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தினமும் நடைபயிற்சி உடல்பருமன் நோயை தீர்க்கும்.

கே.எம்.சி.எச் மருத்துவமனை டாக்டர் குப்புராஜன் சிறுநீரக நலன் குறித்து பேசியதாவது: சிறுநீரகம் சீராக இயங்க போதிய தண்ணீர் அருந்துவதே சிறந்தவழி. சிறுநீரகம் தனது பணியை சிறப்பாக நிறைவேற்ற தண்ணீர்தான் முக்கிய காரணி. பழங்கள், கீரைகள், காய்கறிகள் என நார்ச்சத்து மிகுந்த உணவுகள் சிறுநீரகத்தின் பணிகளை சீராக்கும்.

உடலின் கழிவுகளை சுத்திகரிக்கும் முக்கிய பணியை செய்து உடல் இயக்கத்தை முழுமையாக்குவது சீறுநீரகம்தான். சிறிய அளவிலான சிறுநீரக கற்கள் வாழைத்தண்டை சாப்பிட்டால் குணமாகும். அதற்கும் வாழைத்தண்டு சாறுடன் போதுமான தண்ணீரும் சேர்ந்து அருந்துவதான் முழுமையான தீர்வாக அமையும். சிறுநீரக கோளாறுகளை எளிதில் கண்டறிந்து குணப்படுத்த நவீன சிகிச்சை முறைகள், சரியான மருந்து மாத்திரைகள் உதவும்.

கோவை கிருஷ்ணா ஹெல்த் கேர் சென்டர் மருத்துவர் பாலகுமாரன் எலும்பு அறுவை சிசிச்சை குறித்து பேசியதாவது: நவீன வசதிகள், வாழ்க்கை முறை காரணமாக உடல் எலும்புகளுக்கு முழுமையான வேலை கொடுப்பதற்கு தவறிவிடுகிறோம். சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் குறைந்து வருகிறது. மேற்கத்திய கழிவறை உபயோகம் பெருகியதன் காரணமாக கால்மூட்டுகளுக்கு முழு வேலைகிடைப்பது இல்லை.

நிற்பது, அமர்வது, நடப்பது என எலும்புகளுக்கு முழுவேலை கொடுத்தாலே மூட்டுவலி வராது. மூட்டுக்கு முழுவேலை கொடுத்தால் வேதனை வராது. கை, கால், இடுப்பு எலும்புகளில் வலிஏற்படும் போது மூட்டு இணைப்புகளை இயல்பான நிலையில் இருக்கச்செய்தாலே பெரும்பாலான எலும்பு பிரச்னைகள் தீரும். வலியின் பிறப்பிடம் அறிந்து சிகிச்சை அளித்தால் மட்டுமே நோய் தீரும்.

கைகளில் வலி என்றால் முதுகெலும்பு இணைப்புகளை சோதிக்கவேண்டும். கால்களில் வலி என்றால் இடுப்பு எலும்பு இணைப்புகளை சோதிக்க வேண்டும். எல்லா எலும்பு பிரச்னைகளுக்கும் அறுவை சிசிச்சை தேவைப்படாது. முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களை அணுகினால் நிரந்தர தீர்வு பெறமுடியும்.

கோவை தெலுங்குபாளையத்திலுள்ள பென்ஸ் வெக்கேசன் கிளப் நிர்வாக இயக்குனர் சரவணன், ‘உடலும் உள்ளமும்’ என்ற தலைப்பில் பேசுகையில்: ‘‘உடலும் உள்ளமும் பிரிக்க முடியா தவை, ஒன்றோடு ஒன்று இணைந்தவை. உடலும் உள்ளமும் நன்றாக இருக்க உடற்பயிற்சி மிக அவசியம். உடலை சுத்தமாக வைத்துக்கொண்டு உள்ளத்தை கவனிக்காவிட்டால் எந்த பயனும் இல்லை.

எனவே தினந்தோறும் உடலை பேணுவதோடு, உள்ளத்தில் நல்ல சிந் தனையை வளர்க்க வேண் டும். ஒவ்வொருவருக்கும் மனதில் தைரியம் இருக்க வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். குடும்பம் நன்றாக இருந்தால் தான் உள்ளம் நன்றாக இருக்கும். உள்ளம் நன்றாக இருந்தால் தான் குடும்பத்தை சிறப்பாக நடத்த முடியும்.

உடல் ஆரோக்யமாக இருக்க காலையில் உடற்பயிற்சி செய்யலாம், நீச்சல் அடிக்கலாம், புத்தகம் படிக்கலாம். வாழ்க்கையில் வெற்றி பெற பொறுமை மிக அவசியம். மன பலம் இருந்தால் உடல் பலம் தானாக வரும்’’ என்றார்.

No comments: