28 Jan 2010

பெப்பர் ஸ்ப்ரே... பெண்களின் கையில் புதுவித ஆயுதம்!

பெப்பர் ஸ்ப்ரே...

பெண்களின் கையில் புதுவித ஆயுதம்! பெப்பர் ஸ்ப்ரே... திருடன்களிடமிருந்து தப்பிப்பதற்காக இப்போது பொதுமக்களுக்கு சென்னை, காவல்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் தற்காப்பு சாதனம்!

''அப்படியா..! அதென்ன 'பெப்பர் ஸ்ப்ரே..?' '' என்று ஆச்சர்யப்பட்டு கேட்பவர்களுக்கு பதில் அளிக்கிறார் சென்னை, துரைப்பாக்கம் சரகம் உதவி ஆணையர் கே.என்.முரளி!

"கண்களை எரியவைக்கும் தன்மையுள்ள, திரவ வடிவ பொருள், ஸ்ப்ரே செய்யும் வசதியோடு இருக்கும் சாதனம்தான் 'பெப்பர் ஸ்ப்ரே'.

ஈவ் டீஸிங், வழிப்பறி திருடர்கள், வீடு தேடிவரும் திருடன்கள் என்று எதிரிகளின் கண்களில் சமயோஜிதமாக செயல்பட்டு இதை ஒருமுறை ஸ்ப்ரே செய்துவிட்டால் போதும், கண் எரிச்சலில் தவிக்கும் அந்த நபரால் இரண்டு மணி நேரத்துக்கு எழவே முடியாது.

அதற்குள் 'அவசர போலீஸ் 100' எண்ணுக்கு தகவலைச் சொல்ல வேண்டும். நாங்கள் வந்து அவர்களை அள்ளிக்கொள்வோம்! தேவைப்பட்டால் குற்றவாளிக்கு மருத்துவ சிகிச்சை அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்" என்று உற்சாகமாகச் சொன்ன முரளி,

இது இப்போது காவல்துறையால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வரும் அவசியத்தையும் கூறினார்.

"அமெரிக்காவில் வழிப்பறிக் கொள்ளை அதிகம் என்பதால், அவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறையின் மூலமே 'பெப்பர் ஸ்ப்ரே' வழங்கப்படுகிறது.

சமீபத்தில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களைத் தொடர்ந்து, 'மக்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கினால் என்ன?' என்று எனக்கு யோசனை எழ, அதற்கான தகவல்கள் சேகரித்ததில் 'பெப்பர் ஸ்ப்ரே' தயாரிக்கும் நிறுவனம் பெங்களூருவில் இருப்பது தெரிந்தது.

என்னுடைய யோசனை மற்றும் சேகரித்த தகவல்களை சென்னை, காவல்துறை ஆணையரின் முன் வைத்தேன். அவரும் பரிசீலித்து ஒப்புதல் தர, இப்போது பொதுமக்களுக்கு 'பெப்பர் ஸ்ப்ரே' பற்றிய விழிப்பு உணர்வும் விநியோகமும் எங்கள் துறை சார்பாக நடக்கிறது" என்றவர்,

"இந்த 'பெப்பர் ஸ்ப்ரே' 35 கிராம் எடை கொண்டது. இருபதுமுறை ஸ்ப்ரே செய்யலாம். விலை 500 ரூபாய். எதிராளி எட்டடி தூரத்தில் இருந்தாலும் இதைப் பயன்படுத்தலாம்

முதலில் துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை போன்ற பகுதிகளில் படிப்படியாக அறிமுகப்படுத்தி வருகிறோம். இதுவரை நாற்பத்தி ஐந்து குடும்பங்கள் 'பெப்பர் ஸ்ப்ரே' வாங்கியுள்ளன. 'எங்களுக்கும் தேவை' என்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

இதைப் பற்றிய மேல் விவரங்கள் வேண்டுவோர், துரைப்பாக்கம் சரகம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம். காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்படும்.

இந்த ஸ்ப்ரே, வெளி மார்க்கெட்டில் கிடைக்காது!" என்று குறிப்பிட்ட முரளி,"பெண்கள் இந்த ஸ்ப்ரேயை தங்கள் ஹேண்ட்பேக்கில் வைத்துக்கொள்மளவுக்கு 'காம்பேக்ட்' சைஸில் உள்ளது.

இதன் மூலம் வேலைக்குப் போகும் பெண்கள், இல்லத்தரசிகள், வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்கள் என அனைவரும் பயன்பெறுவார்கள் என்று நம்புகிறோம்.

அதேசமயம், இதைப் பயன்படுத்துபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைளின் கைகளில் கொடுத்துவிடக்கூடாது!" என்றார்.

பெருங்குடி, திருமலைநகரில் உள்ள 'நிசி' விமன்'ஸ் ஹாஸ்டலில் இருந்து இந்த 'ஸ்ப்ரே' வேண்டி ஏற்கெனவே போலீஸூக்கு விண்ணப்பங்கள் வந்தாகிவிட்டன.

இதுபற்றி அங்குள்ள பெண்கள் கூறுகையில், "எங்களப்போல கால் சென்டர், ஐ.டி-னு ராத்திரி நேரத்துல வேலைக்குப் போக வேண்டிய பொண்ணுங்களுக்கு திருட்டுப் பயத் துல இருந்து தப்பிக்க இது ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். துரைப்பாக்கத்துல பார்த்தீங்கனா சாலை யோரத்துல எப்பவுமே நிறைய லாரிகள் நிக்கும்.

இடம் தாராளமா இருந்தாலும் நாங்க போற வழியில இடைஞ்சலா நிக்கறது, உரசுறதுனு லாரி டிரைவர்கள் சிலர் தினமும் 'டார்ச்சர்' பண்றாங்க. இனி அந்த 'ஈவ் டீஸிங்' குரூப்புக்கும் காத்திருக்கு 'ஸ்ப்ரே ட்ரீட்மென்ட்'!" என்றார்கள் பலநாள் கொடுமைக்கு சவுக்கடி கொடுக்கப் போகும் தெம்புடன்!

தொடர்புக்கு: துரைப்பாக்கம் சரகம், காவல்துறை உதவி ஆணையர் அலுவலகம், 044--23452776

13 Jan 2010

பெற்றோரே உஷார் !!! - விரல் நுனியில் விரசம்… மொபைல் விபரீதம்

விரல் நுனியில் விரசம்…

http://sirippu. wordpress. com/2009/ 12/02/sexting/

ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு டீன் ஏஜ் பையன்களின் “ரகசியப்” பொழுது போக்கு என்னவாக இருக்கும் ?

புத்தகங்களுக்கிடையே மஞ்சள் பத்திரிகை வைத்துப் படிப்பது, முகத்தை கர்ச்சீப்பால் மூடிக்கொண்டு காலைக்காட்சிக்குச் செல்வது இவ்வளவு தான் ! ஆனால் இன்றைய டீன் ஏஜ் நிலமை எப்படி இருக்கிறது ? விரல்களில் ஐ-போன், வீடுகளில் லேப்டாப். ஒரு சில வினாடிகள் போதும் பிடித்தமான பலான படத்தைப் பார்க்க !

இணைய வசதி உள்ள பதின் வயதுப் பருவத்தினர் சராசரியாக வாரத்துக்கு ஒன்றே முக்கால் மணி நேரம் “விவகார” படங்களைப் பார்க்கிறார்களாம். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருஷத்துக்கு 87 மணி நேரம். இப்படி ஒரு ஆராய்ச்சி முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது யூகேவிலுள்ள சைபர் செண்டினல் அமைப்பு.

வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள். இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை, விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி.

இன்றைய நவீனம் டீன் ஏஜினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் எதை வேண்டுமானாலும் அவர்கள் பார்க்கமுடியும் என்பது ஒரு பெற்றோருக்கான ஒரு எச்சரிக்கை மணி என்கிறார் சைபர் செண்டினல் அமைப்பின் இயக்குனர் எல்லி புடில்.

இண்டெர்நெட் எல்லோருக்கும் ஒரு நண்பனாகவே ஆகிவிட்டிருக்கிறது.
பிசிராந்தையார் கால நட்பெல்லாம் இல்லை, பெரும்பாலும் கூடா நட்பு தான். ஏதேனும் ரகசிய சந்தேகங்களை அம்மாவிடமோ, தோழிகளிடமோ பெண்கள் கேட்டது பழைய காலம். இப்போ என்ன கேட்கவேண்டுமென்றாலும் “கூகிளிடம் கேட்கிறார்கள்.

அதுவும் சில வினாடிகளில் இணைய உலகைச் சுற்றி வந்து ஞானப்பழத்தைக் கையில் தந்து விட்டுப் போய்விடுகிறது. சிலர் ஞானப்பழத்தை விடுத்து ஏவாள் கடித்த ஏதேன் பழத்தைத் தேடுகிறார்கள் என்பது தான் இதில் சிக்கலே.

லேப்டாப், டெஸ்க் டாப் என்றால் கூட பரவாயில்லை. பெற்றோர் ஓரளவு கண்காணிக்க முடியும். மொபைலில் பாலியல் சமாச்சாரங்கள் பரிமாறப்பட்டால் எப்படி தடுப்பது.

இருபத்து நான்கு மணி நேரமும் வைத்த கண் வாங்காமல் செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் இயலாத காரியம். இதிலிருக்கும் சிக்கலைப் பெற்றோர் பிள்ளைகளிடம் சொல்லவும் வேண்டும்.

இது தான் இன்றைய பெற்றோரின் மிகப்பெரிய சவால்
சராசரியாக ஒரு டீன் ஏஜ் பையனோ பொண்ணோ வாரம் இரண்டரை மணி நேரங்கள் யூ டியூபில் படம் பார்க்கிறார்களாம் ! யூ-டியூப் இப்போது வருகின்ற எல்லா ஹைடெக் மொபைலிலும் ஒரு தொடுதலிலேயே இயக்கக் கூடிய வகையில் வந்து விடுகிறது.

அதிக நேரம் பாலியல் படங்களைப் பார்ப்பது பல்வேறு விபரீதங்களுக்குள் பதின் வயதினரைக் கொண்டு போய் விடும் என்பதற்கு நிறைய உதாரணங்களும் உண்டு. 2003ல் ஜப்பானில் 17 வயதான ஒரு பையன் 30 பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டான். “பாலியல் வெப் சைட்களைப் பார்த்தா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால தான் இப்படி ஆயிடுச்சு” என்றான் அவன் !

இண்டர்நெட் கஃபேக்களில் அமர்ந்து கொண்டு பெயரை ஸ்டைலிஷாக மாற்றிக் கொண்டு சேட்டிங் செய்வதே பழசாகிவிட்டது. எல்லாம் மொபைல் தான். அதிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மொபைல் ஆறாவது விரலாகவே ஆகிவிட்டது.

ரயிலிலும், பஸ் ஸ்டாண்டிலும், நடக்கும் போதும் செல்போனைப் பார்த்துக் கொண்டே செல்லும் டீன் ஏஜ் தான் அதிகம். பள்ளி மாணவர்களிடையே செல்போனில் ஆபாச சமாச்சாரங்களை பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் வெகுவாக அதிகரித்திருக்கிறதாம்.

சுமார் 35 விழுக்காடு பேர் ஆபாச எஸ்.எம்.எஸ் கள், பாலியல் படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தினமும் பார்க்கிறார்கள், மற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. இங்கிலாந்திலுள்ள குழந்தைகள் நல அமைப்பு நடத்திய ஆராய்ச்சி சொல்கிறது.

இளம் கன்று பயமறியாது என்பது இவர்கள் விஷயத்தில் செம பொருத்தம்.
விளையப்போகும் விபரீதங்கள் குறித்து அலட்டிக் கொள்ளாமல் தங்களையோ நண்பர்களையோ ஆபாசமாய்ப் படமெடுத்து கேலியாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு முறை ஒருவருக்கு அனுப்பி விட்டால் அது எத்தனை இடங்களுக்குத் தாவும் என்பதைச் சொல்லவே முடியாது. எனவே இத்தகைய செயல்களில் ஈடுபடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய எம்மா ஜேன்.

இது பெற்றோருக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் ஒரு பெரிய தலைவலி. தவறுகளைத் திருத்தியாக வேண்டும், ஆனால் எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கம்ப்யூட்டரை ஒளித்து வைத்தால் மொபைல் அந்த இடத்தில் வந்து அமர்ந்து கொண்டுவிட்டது.

இதன் விளைவாக கர்ப்பமாகும் டீன் ஏஜ் பெண்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் படு வேகமாக அதிகரிக்கிறது. ஆண்டுக்கு அமெரிக்காவில் மட்டும் சுமார் ஏழரை இலட்சம் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பமாகிறார்கள் ! கடந்த பத்து ஆண்டுகளில் டீன் ஏஜினருக்கு எயிட்ஸ் நோய் வருவது பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதுக்கெல்லாம் காரணம் அமெரிக்காவில் செக்ஸ் கல்வி சரியாக இல்லை, இந்த இண்டர்நெட், மொபைல் நெட் எல்லாம் கட்டுப்பாடாக இல்லை என கோஷங்கள் எழுகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து என்றில்லை. எல்லா நாடுகளிலும் இதே கதி தான். சீனாவில் ஆண்டு தோறும் நடக்கும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை 13 மில்லியன். அதிலும் 29 வயதுக்குக் குறைவான பெண்கள் 66 சதவீதம் !
பிரச்சினை இப்படி பூகாகரமாக எரிந்து கொண்டிருக்கையில் எரியும் தீயில் பீடி பற்றவைக்கிறது இங்கிலாந்து.

செக்ஸ் பதின் வயதினருடைய உரிமை. அதை அவர்கள் கொண்டாட வேண்டும். தடுக்கக் கூடாது. என அங்கே ஒருசாரார் தீவிரமாக குஜால்ஸ் திட்டங்களுடன் களத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் பிட் நோட்டீஸ் விட்டு டீன் ஏஜ் மக்களை செக்ஸ் வைத்துக் கொள்ள உற்சாகப் படுத்துகின்றனராம்.


“நெதர்லாந்தைப் பாருங்கள்” செக்ஸ் ரொம்பவே ஓப்பன். அதனால தான் அங்கே நோயும் இல்லை, எயிட்ஸும் இல்லை. மூடி மறைக்காதீங்க, அது தான் பிரச்சினையே. தினமும் “அது” நடந்தால் நோய் கூட வராது என சொல்லி நமது மிட் நைட் டிவி லேகிய வினியோகஸ்தர்களுக்கு கிலியையும் கொடுக்கின்றனர்.

ஏற்கனவே பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இதுவும் நடந்துச்சுன்னா அவ்வளவு தான். “பெரியவங்களே சொல்லிட்டாங்க இது தேவையாம் வாங்கடான்னு” பசங்க கடமை நிறைவேற்றக் கிளம்பிடுவாங்க என பெற்றோர் கொந்தளித்துப் போய் இருக்கிறார்களாம்.

இருபத்து நாலு மணி நேரமும் குடிச்சுகிட்டே இருந்தா குடிக்கிறதை விட்டுடுவாங்கன்னு சொல்றமாதிரியில்லே இருக்கு இது அங்காய்க்கின்றனர் சிலர். இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடறமாதிரி இன்னொரு சமாச்சாரத்தையும் இங்கிலாந்து கொண்டு வந்திருக்கிறது.

கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் கேள்விப்பட்டிருப்பீங்க. சி-கார்ட் கேள்விப்பட்டிருக்கீங்களா ? சிம்பிளாகச் சொன்னால் சி-கார்ட் என்பது “காண்டம் கார்ட்” ன் சுருக்கம். இதைக் கொண்டு என்ன வாங்கலாம் என கேட்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

டீன் ஏஜ் கர்ப்பத்தைப் பெருமளவு தடுக்க இது ஒரு பக்கா பிளான் என்கிறது அரசு. இந்த கார்டைக் கொண்டு கடை, தியேட்டர், ஆஸ்பிட்டல், ஹெல்த் செண்டர் என எங்கே போனாலும் தானியங்கி மெஷின்களில் காண்டம் எடுத்துக் கொள்ளலாம். அவசர உதவிக்கு சி-கார்ட் இருந்தா கர்ப்பம் எப்படிப்பா வரும் என்கிறது லாஜிக் படி.

சி-கார்ட் வேணும்ன்னா என்ன செய்ய வேண்டும் ? வெரி சிம்பிள். அரசு நடத்தும் செக்ஸ் கல்வி செமினார் ஒன்றில் கலந்து கொள்ளவேண்டும். அவ்வளவு தான்.

பன்னிரண்டு வயசான பையனாய் இருந்தாலும் பரவாயில்லை. அவனுக்கு ஒரு கார்ட் கிடைக்கும். அதில் அவனுடைய பெயரோ, தகவல்களோ எதுவும் அந்த கார்டில் இருக்காது !.

இது டீன் ஏஜ் பிள்ளைகளைக் கெடுக்கும் செயல். அவர்களை செக்ஸில் ஈடுபட அரசே வழியனுப்பி வைக்கலாமா என்பது மத அமைப்புகள், மற்றும் பெற்றோரின் கவலை.

டீன் ஏஜ் சிக்கலைத் தடுக்க ஏன் அன்பைப் போதிக்க மாட்டேங்கறீங்க ? சி-கார்ட் தான் தேவையா ? ஆரோக்கியமான நட்பையோ, நேசத்தையோ போதித்து அதன் மூலம் டீன் ஏஜ் பசங்களை சரியான பாதையில் வழிநடத்த முடியாதா என்பது சட்டென நமது மனசில் ஓடும் கேள்வி.

ஏனென்றால், என்னதான் சட்டம், ஒழுங்கு, திட்டம் எல்லாம் இருந்தாலும் மன மாற்றம் இல்லேன்னா என்ன பயன் ?


கடைசியாக ஒன்று !! டீன் ஏஜ் பருவத்தின் முதல் பாகத்திலேயே செக்ஸ் பழக்கம் ஆரம்பிப்பவர்கள் பிற்காலத்தில் நோய், மன அழுத்தல், போதைப் பழக்கம், ஆழமான குடும்ப உறவு இன்மை என பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் என்கிறது அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக கட்டுரை ஒன்று.

மொபைலிலிருந்து செக்ஸ் சமாச்சாரங்களை அனுப்புவதை “செக்ஸ்டிங்” என்று பெயரிட்டு அழைக்கின்றனர். ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்புவது, சில்மிஷப் படங்கள் அனுப்புவது என சர்வமும் இதில் அடக்கம். அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் இந்தக் கலாச்சாரம் படு வேகமாக வளர்கிறது.

நிலமையை உணர்ந்து தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன மாநில அரசுகள். டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் பகுதியிலுள்ள பள்ளிக்கூடங்களில் கடந்த மாதம் முதல் செக்ஸ்டிங் தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் ஹூஸ்டனில் படிக்கிறார்கள்!

நியூசிலாந்திலும் இப்போது செக்ஸ்டிங் தான் பேச்சு. நாடு முழுவதும் இது பெரும் தலைவலியாய் உருவாகியிருக்கிறது என்கிறார் நியூசிலாந்தின் உள்துறை அமைச்சர் ஸ்டீவ் ஓ பிரையன். அரசு இதை சிம்பிளாக எடுத்துக் கொள்ளாது. செக்ஸ்டிங் குற்றம் செய்தால் ஜெயில் தான் என எச்சரிக்கிறார்.

அமெரிக்காவின் டாலாஸ் மாநிலத்திலுள்ள வாலாஸ் பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தான் 12 வயதான பொடியன். திடீரென அவனது செல்போன் வெட்கத்தில் சிணுங்கியது.

ஆசிரியர் எதேர்ச்சையாய் எடுத்துப் பார்க்க வந்திருந்தது ஒரு சின்னப் பெண்ணின் நிர்வாணப் படம் !. அனுப்பியது அந்தப் பெண்ணே தான் ! திகைத்துப் போன ஆசிரியர், கையோடு பையனைக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்தார் ! சின்னப் பிள்ளைகளின் நிர்வாணப் படம் “சைல்ட் போர்னோகிராபி” குற்றத்தின் கீழ் வருகிறது !. விளையாட்டா நினைக்காதீங்க 10 வருஷம் உள்ளே இருக்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றனர் காவல் துறையினர்.

ஸ்காட்லாந்தில் செக்ஸ்டிங் வளர்ந்ததன் விளைவு, டீன் ஏஜ் கர்ப்பமும் அதிகரித்திருக்கிறது. அதைக் கட்டுப்படுத்த ஒரு எளிய வழி பள்ளிக்கூடங்களில் கருத்தடை மாத்திரைகள் வழங்குவது தான் என திருவாய் மொழிந்திருக்கிறது அரசு.

இங்கிலாந்தின் பல பள்ளிக்கூடங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மாத்திரைகள் கிடைக்கின்றனவாம். அதைப் பின்பற்றி ஸ்காட்லாந்தும் இப்போது மாத்திரை வினியோகத்தில் இறங்கியிருக்கிறது. இலக்கியத்தில் மாத்திரைகள் படித்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. !

சீனாவில் செக்ஸ்டிங் சிக்கல் மக்கள் தொகையைப் போலவே சட சடவென வளர்ந்து வருகிறதாம். மாணவர்களிடையே உள்ள இந்த பழக்கத்தை அழிக்க என்ன செய்யலாம் என கடுமையான யோசனைகளில் சீனா இறங்கியிருக்கிறது. செக்ஸ்டிங் குற்றத்துக்கு மாணவர்களுக்கு ஐந்து முதல் 10 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கவும் வழி செய்திருக்கிறது !

9 Jan 2010

வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.

வாடகை மனைவி!
தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக்கலாசாரம்.
திருச்சி, உறையூரில் குறுகலான தெருவில் இருக்கிறது, அந்த பழங்காலத்து வீடு..! துருப்பிடித்த இரும்பு கிரில் கதவு... திறக்கும்போதே கிறீச்சிடுகிறது.
அதைக் கேட்டதுமே உள்வாசல் கதவு மெதுவாய் திறக்கிறது.
ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால் அதிகம் அறிமுகப் பேச்சு இல்லை!''வாங்க, வணக்கம்!'' என நம்மையும், நம்மை கூட்டிச் சென்ற தொழிலதிபரையும் கைகூப்பி வரவேற்கிறார், அந்தக் குடும்பத்தலைவி.
வீட்டுக்குள் நுழைந்த சில மைக்ரோ செகண்டுகளில் நம் கண்கள் உள்ளே அளவெடுக்கின்றன. எப்போதோ அடித்த டிஸ்டம்பர் பெயின்ட் பாதிக்குமேல் உதிர்ந்து வெளிறிய சுவர்கள்...
ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, சமையலறை..! ஹாலில் நான்கு ஃபைபர் சேர்கள் கிடக்க, புத்தம் புது எல்.ஜி. டி.வி--யில் ஏதோ பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
டி.வி.டி. பிளேயர், ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று மேல்நடுத்தர வர்க்கத்துக்கான வசதிகளைக் கொண்டிருந்தாலும், அது ஒரு வாடகை வீடு என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருக்கிறோம்.
'வீடு மட்டுமல்ல... நம்மை வரவேற்கும் அந்தக் குடும்பத் தலைவியே ஒரு வாடகை மனைவிதான்...' எனும்போது வாசகர்களுக்கு எப்படி தீயை மிதித்தாற்போல் இருக்கும் என்று புரிகிறது.
விவகாரத்தை முதலில் கேள்விப்பட்டபோது அதே உணர்வு தான் நமக்கும். 'மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுவதாக நாம் இதுவரை கேள்விப்பட்டிருந்த அதே விபரீத கலாசாரம், தமிழ்நாட்டுக்குள் காலடி வைத்துவிட்டது' என்று கோவிந்தன் சொன்னபோது, முதலில் நாம் நம்பவில்லை. ஆனால், துளிகூட ஜீரணிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்!
''ஒரு மாதம், இரண்டு மாதம் என்று தொழில் நிமித்தமாக ஊர் மாறி, மாநிலம் மாறி தமிழகம் வரும் பல தொழிலதிபர்களுக்கு 'விழிப்பு உணர்வு' கூடிப் போயிருக்கிறது. ஹெச்.ஐ.வி-க்கு இரையாவதற்கோ, தினம் தினம் ஒரு பெண்ணைத் தேடிப் போய்க் கொண்டிருக்கவோ அவர்களில் பலருக்கு இஷ்டமில்லை.
அதுவும் தவிர, அழகான ஒரு குடும்பத்துக்குத் தலைவியா இருக்கிற பெண்களை - கௌரவமான ஒரு உத்தியோகம் பார்க்கிற நடுத்தர வயது இல்லத்தரசிகளை - மொத்தமாக சில நாட்கள் தங்களுக்கே தங்களுக்கு என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்குத் தனியாக ஒரு கிக் இருக்கிறது. பேசிய அமவுன்ட்டை கொடுத்துவிடுகிறார்கள்.
இவர்களைச் 'சேர்த்து' விடுபவர்களையும் 'புரோக்கர்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது... '' என்று கோவிந்தன் கொடுத்த அறிமுகத்திலேயே, நம் தலை தட்டா மாலை சுற்றியது.
கோவிந்தன்..?
திருச்சியில் 'லைட் டிரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இவர். ''மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதுதான் எனது டிரஸ்டின் வேலை.
இதற்காக வேலூர் மலைப் பகுதிகளில், சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களுக்கு அடிக்கடி சென்று வருவது என் வழக்கம். அப்படி ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு சென்றபோதுதான் 'வாடகை மனைவி' என்ற பயங்கரத்தை முதலில் கேள்விப்பட்டேன்.
கணவர், குழந்தைகள், மற்றும் புகுந்த வீட்டுச்சொந்தங்களுடன் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே வாழும் சில பெண்கள், மாதக் கணக்கில் வேறொருவருக்கு மனைவியாகப் போய் வாழ்ந்துவிட்டு, கான்ட்ராக்ட்(?) காலம் முடிந்தவுடன் பழையபடி தங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்து, வழக்கமான குடும்ப வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சாட்சிகளுடன் உறுதி செய்துகொண்டபோது, கிட்டத்தட்ட நடுங்கிப்போய்விட்டேன்!
இந்த பயங்கரத்தின் அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் எனது டிரஸ்ட் ஊழியர்கள் சிலருடன் களத்தில் இறங்கினேன். முதலில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோக்கரின் உதவியுடன் ஒரு வாடகை மனைவியை சந்தித்தோம். அந்தப் பெண் காஞ்சிபுரம் பக்கமுள்ள ஒரு டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் லெக்சரராக இருந்தார்.
புரோக்கர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக என்னை அழைத்துச் சென்றார். குடும்பப்பாங்கான அழகும், அடக்கமும், லேசான மிரட்சியும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே போய், அவருடைய புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு மத்தியில் 'கான்ட்ராக்ட்'டுக்குப் பேச முடிந்தது.
வறுமைக்காக வழி தவறிப் போகிற பெண்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டு சூழலைப் பார்த்தபோது, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை நடத்துவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் கிளம்பி விட்டார்.
காபி கொண்டுவந்து கொடுத்தவர், எடுத்த எடுப்பிலேயே 'என்னைப் பிடிச்சிருக்கா?' என்று ஏதோ பெண் பார்க்க வந்தவரிடம் கேட்பதுபோல் விசாரிக்கவும்... தூக்கி வாரிப் போட்டது.
மேற்கொண்டு பேசப் பேசத்தான் இந்த பகீர் கலாசாரத்தின் நெட்வொர்க் தமிழ் நாட்டில் எந்தளவுக்கு விரியத் தொடங்கியுள்ளது என்று புரிந்தது...'' -சொல்லி நிறுத்திய கோவிந்தன்...''அதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன்.
அதற்கு முன், ஒரு கான்ட்ராக்ட் எப்படி முடிவாகிறது என்பதை நீங்களே கண்ணால் பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் இதன் முழுப் பரிமா ணத்தைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்று, சில ஏற்பாடுகள் செய்து நம்மை அனுப்பி வைத்தார்.
வாடகை மனைவிக்கான 'தேடலுடன்' திருச்சிக்கு வந்திருந்த ஒரு சென்னைத் தொழிலதிபருடன் ஏதோ 'மாப்பிள்ளைத் தோழன்' ரேஞ்சுக்கு நம்மையும் கோத்துவிட்டார் அவர். நம் வசம் உள்ள ரகசிய கேமராவில், ஒவ்வொரு நொடியும் காட்சிகளோடு சேர்ந்து பதிவாகிறது என்பது தொழிலதிபருக்குத் தெரியாது.
முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்பத்தலைவியும் அதை அறியார்!தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரத்தின் சாட்சியாக அந்த வீட்டுக்குள் நடப்பதை வாசகர்கள் நம்மோடு சேர்ந்து அமைதியாகக் கவனிக்கவும்.
இன்னும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன், பின்னணிகளை பிறகு பார்ப்போம்
-குடும்பத் தலைவி: (மெல்லிய குரலில்) வாங்க....உக்காருங்க....
தொழில் அதிபர்: வணக்கங்க!
குடும்பத்தலைவி: தண்ணீ குடிக்கிறீங்களா?
தொழில் அதிபர்: ம்....குடுங்க...
கு.த: இந்தாங்க.... (சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்).
தொ.அ: தாங்க்ஸ்ங்க... நீங்களும் உக்காருங்க!
கு.த: இப்பதான் வர்றீங்களா?
தொ.அ: ஆமாம்... (ஒரு பெயரைச் சொல்லி) உள்ள வரமாட்டேன் னுட்டார். வாசல்லயே அப்படியே கிளம்பிட்டார்.
கு.த: ஆமாம்.... எப்பவுமே அவரு போயிடுவாரு....
தொ.அ: சொந்த வீடா இது...
கு.த: இல்லீங்க, வாடகை வீடு.
தொ.அ: உங்க பேருங்க..?கு.த: (பெயரைச் சொல்கிறார்).
தொ.அ: நான் யாருன்னு சொன்னாரா?
கு.த: ம்....ஒண்ணும் சொல்லலை.
தொ.அ: என் பேரு ...... (சொல்கிறார்!). நான் சென்னை. மெடிக்கல் லைனுல
இருக்கறேன். அடிக்கடி திருச்சி வருவேன்.
கு.த: ஓ, அப்படியா...
தொ.அ: மேரேஜ் ஆயிடுச்சா, உங்களுக்கு?
கு.த: ம்....ஆயிருச்சு.தொ.அ: அப்படியா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க?
கு.த: ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.
தொ.அ: என்னவா..?
கு.த: சும்மா... கம்பெனியில ஒர்க் பண்றார்...
தொ.அ: சரி, சரி.. குழந்தைங்க இருக்குதா..?
கு.த: ஒரு பையன்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்.
தொ.அ: எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணமாகி?
கு.த: ஏழு, எட்டு வருஷம் ஆச்சு
தொ.அ: அவரு உங்களோட சொந்தக்கார பையனா?
கு.த: ஆமாம்...
தொ.அ: நீங்க வேற எங்கயும் ஒர்க் பண்றீங்களா?
கு.த: இல்லீங்க... நான் ஹவுஸ் ஒய்ஃப்தான்.
தொ.அ: வீட்டுலதான் இருக்கீங்க.... ம்... என்ன படிச்சிருக்கீங்க?
கு.த: (சின்ன தயக்கத்துடன்) டுவெல்த் வரைக்குந்தான்....
தொ.அ: ஏன்.... டிகிரி போக லையா?
கு.த: ம்ஹம்... படிக்கலை!
தொ.அ: ............தான் சொன்னாரு, எனக்கு எல்லா மேட்டரும்...
கு.த: ம்ம்ம்ம்...
தொ.அ: நான் எப்ப திருச்சி வந்தாலும் எங்கயாவது போறதுண்டு! அதான் அவர்கிட்ட(?)கேட்டேன். அவர் சொன்னாரு... இந்த மாதிரி இருக்காங்கன்னு! உங்களுக்கும் ஒண்ணும் பிரச்னை இருக்கா துன்னு சொன்னார்! அதான் பார்க் கலாம்ன்னு வந்தேன். ஆல்ரெடி நாலஞ்சு டைம் அவரு ஆபீஸுக்கு நீங்க வந்துருக்கீங்க. அப்ப நான் அறிமுகப்படுத்திக்கலை. பேசலை... ஆனா உங்களைப் பார்த்திருக்கேன்.
கு.த: ஓ... அங்கேயே பார்த் திருக்கீங்களா..!
தொ.அ: ஆமாங்க. நீங்க எவ்ளோ வாங்கறீங்க?
கு.த: 25,000 ரூபாய்.
தொ.அ: மாசத்துக்கு தானே?
கு.த: ம்.. மாசத்துக்குதான்.
தொ.அ: ஓ.. நான் இப்ப 25,000 ரூபாய் குடுத்துட்டா, நான் சொல்ற அந்த ஒன்மன்த்துக்கு வேற எங்கயும் போக மாட்டீங்க தானே...?
கு.த: வேற எங்கயும் போக மாட்டேன்.
தொ.அ: எப்படிங்க.... நான் வீட்டுக்கு வரணுமா? இல்லாட்டி நீங்க வெளியே வருவீங்களா?
கு.த: வெளியவும் வருவேன். நீங்க வீட்டுக்கும் வரலாம். ஒண்ணும் பிரச் னையில்லை.
தொ.அ: வீட்டுக்குன்னா? வீட்டுல குழந்தை..?
கு.த: என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தை இல்லாத நேரத்துலதான் வரமுடியும். ஏன்னா, பையன் ஸ்கூலுக்கு போயிடுவான். எயிட் டு ஃபோர் ஓ கிளாக் அவன் போயிடு வான். டியூஷனுக்கும் இடையில போயிடுவான். 4 மணிக்கு மேல, அந்த நேரத்துல ஆள் இல்லாத நேரத்துலயும் நீங்க வந்து போய்க்கலாம்.
தொ.அ: (நீண்ட மௌனத்துக்குப் பிறகு) ஓ!
கு.த: குழந்தை இல்லாத நேரம் போக, மத்தபடி வீட்டுக்காரர் இருக்கறப்ப கூட வரலாம்.
தொ.அ: அப்படியா... வரலாமா? அவருக்குத் தெரியுமாங்க எல்லாம்?
கு.த: அவருக்குத் தெரியுங்க.
தொ.அ: அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரா?
கு.த: எல்லாம் அவருக்குத் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டாரு.
தொ.அ: என்னங்க சொல்றீங்க..? பிரச்னை எதுவும் வந்துறாதா? நான் இங்க இருக்கற நேரம் அவரு வந்து ஏதாவது ரசாபாசம் ஆகிடப் போகுது...
கு.த: இல்லை... இல்லை... அந்த ஒரு மாசத்துக்கு நீங்க 'பே' பண்ணிடறீங்க, இல்லையா...
தொ.அ: இந்த மாசத்துல ஆல்ரெடி யாரும் இருக்காங்களா?
கு.த: ம்.... இருக்காங்க.
தொ.அ: யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?
கு.த: அவரும் ஒரு கம்பெனி ஓனர்.
தொ.அ: திருச்சியா அல்லது வெளியூரா?
கு.த: உள்ளூர்க்காரங்க எப்படி? வெளியூர்தாங்க.
தொ.அ: ஓஹோ... நான் வர்றப்பலாம் ஊட்டி, கொடைக்கானல்னு வேற ஊர்களுக்கும் போறதுண்டு. அங்கெல்லாம்கூட வருவீங்களா....?
கு.த: போலாங்க. எங்க ஃபேமிலியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறு மட்டும்தான் வெளியூர் வருவேன். அந்த சமயத்துல பையனை வீட்டுக்காரர் பார்த்துப்பாரு...
தொ.அ: அப்படியே பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்னையில்லை. உங்களுக் குத் தெரிஞ்ச ஃபிரெண்ட்ஸ் வேற யாரும் இதேமாதிரி இருக்காங்களா?
கு.த: இருக்காங்க! அவங்க எல்.ஐ.சி-ல ஒர்க் பண்றாங்க. லெக்சரரா ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. இ.பி-யில ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. சொன்னாக்கா, பண்ணித்தரலாம்.
தொ.அ: அவங்கள்லாம் எவ்வளவு?
கு.த: எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபேமிலி பாருங்க. நல்லா இருப்பாங்க. ஐம்பதாயிரம் வரைக்கும் வாங்கறாங்க.
தொ.அ: அவங்க வீட்டுக்குல்லாம் கூட தெரியுமா?
கு.த: அதுங்களா... .ஒரு சிலர் வீட்டுல தெரியலாம். ஆனா, அவங்க ஹஸ்பெண்டுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு சரியாத் தெரியலை!
தொ.அ: ஆனா, வருவாங்கள்ல?
கு.த: ம்...தொ.அ: எப்படி? வேலைக்குப் போனா எப்படி வருவாங்க?.
கு.த: எத்தனை நாள் வேணுமோ லீவு எடுத்துட்டு வருவாங்க!
தொ.அ: ஓ... ஓ... வேற பிரச்னை எதுவும் இருக்காதுல்ல?
கு.த: ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க என்ன பிரச்னையைக் கேட்கறீங்க?
தொ.அ: இந்த ஹெச்.ஐ.வி... எய்ட்ஸ் அந்த மாதிரின்னு சொல்றாங்களே... ஒரே பயமா இருக்கு (சிரிக்கிறார்!).
கு.த: (பதிலுக்கு மெலிதாகச் சிரித்து) நாங்க ஃபேமிலி கேர்ள்ஸ்தானேங்க! அதனால ஒண்ணும் வராது! அதுமாதிரி கேக்கறாங்கனுதான், ஒருத்தர்கிட்டே அக்ரிமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி நாங்களும்கூட ஃபிரெஷ்ஷா மெடிக்கல் டெஸ்ட் எடுத்துத் தந்துடறோம்.
தொ.அ: அதான்... அடுத்த மாசத்துக்கு இது பண்ணிக்கலாம்னுதான்... அன்னிக்கு ............கிட்ட 5,000 பணம் கொடுத்திருந்தேன், கொடுத்துட்டாரா?
கு.த: கொடுத்துட்டாரு.
தொ.அ: இதே வருஷத்துல மறுபடி வருவேங்க. அப்ப உங்க ஃபிரெண்ட் யாராவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்... (சிரிக்கிறார்).
கு.த: பார்த்துக்கலாம்ங்க. இல்லாட்டி அவர்கிட்டயே(?)கூட கேட்கலாம்.
தொ.அ: இந்த லெக்சரர் வேலை பாக்குறவங்க... (சட்டென்று) அது மாதிரி இல்லாட்டியும் காலேஜ் பொண்ணுங்க யாராவது இருக்காங்களா?
கு.த: காலேஜ் பொண்ணுங்களா? எனக்குத் தெரிஞ்சு காலேஜ் லெக்சரர்தான் இருக்காங்க....
தொ.அ: (மறுபடி) இந்த மாதிரி சின்னப் பொண்ணுங்க இல்லைன்றீங்க... ஆனா, இதுல பிரச்னை எதுவும் இருக்காதுல்ல..?
கு.த: இல்லீங்க... திருச்சியில அம்பது அறுபது பேர் இருக்காங்க....
தொ.அ: அவ்வளவு பேருங்களா?! எப்படி..? இவங்க எல்லாருக்குமே பேசி முடிக்கிறதுக்கு ஆள் இருக்காங்களா?
கு.த: ம்... இருக்காங்க. இப்ப உங்களை அறிமுகப்படுத்தி வெச்சாங்கள்ல... அவங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.
தொ.அ: இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் பணம் தரணுமுங்களா...
கு.த: அவங்களே கமிஷன் மாதிரி எடுத்துப்பாங்க...
தொ.அ: பட்.. என்னிக்காவது இதெல்லாம் பிரச்சனைஆயிடாதா?
கு.த: அப்படி ஆகறதுக்கு சான்ஸ் இல்லை, ஏன்னா நாங்க எல்லாம் ஃபேமிலீல இருக்கோம் பாருங்க... அதனால யாருக்கும் இப்படினு தெரியாது. அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.
தொ.அ: அவரு எப்படிங்க அக்செப்ட் பண்றாரு, ஆச்சர்யமா இருக்கு!
கு.த: இல்லை.... தெரிஞ்சுதான், நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணித்தான் இப்படி பண்றது.
தொ.அ: ஃபேமிலியில ஏதாச்சும் பெரிசா பணப் பிரச்னைங்களா?
கு.த: பிரச்னை இருக்கு. அவரு வாங்கற சம்பளம் எங்களுக்குப் பத்தாது. அதனால இந்த மாதிரி!
தொ.அ: அடுத்த குழந்தை எதுவும் பெத்துக்கலையா.....
கு.த: இல்லைங்க... பார்க்கலாம்.
தொ.அ: (சில நொடி அமைதி நிலவ) சரி... அதான் அடுத்த மாசத்துக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...
கு.த: கண்டிப்பா வாங்க.தொ.அ: இன்னும் 20,000 ரூபாய் தரணும், சரிங்களா?
கு.த: வரும்போது தாங்க!தொ.அ: சரிங்க. அப்ப அடுத்த மாசத்துக்கு நீங்க வேற யாரையும் எடுத்துக்க வேணாம்.
கு.த: இல்லீங்க... பணம் வாங்கிட்டா அப்படி எங்க குடும்பத்துல செய்ய மாட்டோம்!
தொ.அ: ஓகே, நான் கிளம் புறேன்...
கு.த: போய்ட்டு வாங்க..!
விக்கித்துப் போன நிலையிலேயே நாம் வெளியில் வருகிறோம். அடுத்தடுத்து நாம் சந்தித்த இன்னும் சில முகங்கள், அவர்களின் சுற்றுச் சூழல்கள்... தோரணைகள்...அது ஒரு விசாரணை வெடி குண்டு!
- இன்ஷா அல்லாஹ் தொடர்வோம் அடுத்த இதழில்...

6 Jan 2010

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன.

இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.

சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.

1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும்.

இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது.

பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !

இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்!

அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?

அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.

40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.

போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு.

என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27)

வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே! என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது.

ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.

தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?

தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள்.

இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.

ஆக தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?

இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !

பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.

தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி)

பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள்.

எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’ (அல்குர்ஆன் 2:195)

எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.

மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக்களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும்.

தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிர‌ணைய‌ கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?

திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத்தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.

ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது.

அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன. ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது?

மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா?

இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித்துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மையடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல ! நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !

- மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை