நாட்டு மக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்திற்காக பொது பட்ஜெட்டில் 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இது தாமதமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் என்றாலும் சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாகும். மேற்கத்திய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் இந்த அடையாள அட்டை நிலவில் உள்ளதால் இந்திய மக்கள் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
இந்தியாவிலுள்ள 117 கோடி மக்களுக்கும் இந்த பிரத்யேக அடையாள அட்டை வழங்கும் பொறுப்பை ‘இந்திய சிறப்பு அடையாள அட்டை ஆணையம்’ எனும் ஆணையத்தை அரசு அமைத்ததோடு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை தலைவராக இருந்த நந்தன் நீல்கனியை தலைவராகவும் நியமித்துள்ளது. 12 முதல் 18 மாதங்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
117 கோடி மக்களுக்கும் இந்த அடையாள அட்டையை வழங்குவது சாத்தியமா என்று அரசு கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய தேர்தலுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து குடும்பங்களுக்கும் ரேசன் கார்டும் வழங்கப்பட்டு விட்டது. இவையெல்லாம் சாத்தியமாகும் போது ஒருங்கிணைந்த அடையாள அட்டை என்பதும் சாத்தியமே.
இந்த அடையாள அட்டை புழக்கத்தில் வந்துவிட்டால் அது நாட்டிற்கும் மக்களுக்கும் மிகப்பெரிய பயனை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு இந்திய குடிமகன் தான் ஒரு இந்தியன் என்பதை நிரூபிக்க பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை தற்போது பயன்படுத்தி வருகின்றான்.
இதன்றி டிரைவிங் லைசென்ஸம் பயன்படுகின்றன. இதில் மேலே கூறிய பாஸ்போர்ட் தேர்தல் அடையாள அட்டை ரேசன் கார்டு போன்றவற்றை ஒருவர் எப்பொழுதும் தன் கையில் வைத்திருக்கமாட்டார். தேவைப்படும் பொழுது மட்டுமே எடுத்து செல்வார்.
டிரைவிங் லைசென்ஸ் ஒருவரிடம் எப்பொழுதும் இருக்கும் என்றாலும் அதை வாகனம் வைத்திருப்பவர் மட்டுமே வைத்திருப்பார். எனவே எப்பொழுதும் கைவசம் வைத்திருக்கக்கூடிய அடையாள அட்டை என்பது காலத்தின் கட்டாயம்.
இந்த அடையாள அட்டை என்பது இந்திய மக்கள் தொகையை துல்லியமாக தெரிவிப்பதோடு ஆண் பெண் குழந்தைகள் என தனித்தனியாக கணக்கெடுக்க முடியும். மிக முக்கியமாக அந்நிய நாட்டினர் ஊடுருவுவதை தடுக்கும். தமிழக மேற்கு வங்க அரசியல் வாதிகளை போன்றவர்களுக்கு இது வயிற்றில் புளியை கரைக்கும். ஏனெனில் இலங்கை தமிழர்களையும் வங்க தேசத்து மக்களையும் இந்தியாவில் குடியமர்த்தி அரசியல் லாபம் பெறுவது முடியாமல் போகும். எனவே அவர்களை போன்றவர்கள் இதை எதிர்க்கவும் வாய்ப்புண்டு.
இந்த திட்டம் பயனுள்ள ஒரு திட்டமாக இருந்தாலும் இது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல் அதை தயாரிக்கும் போதே பிற நாடுகளில் இருப்பதை போன்று ஒவ்வொருவரின் கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவின் எப்பகுதியில் ஒருவர் திருட்டு கொலை போன்ற குற்றங்கள் செய்தாலும் அவர்களின் கைரேகைகள் மூலமாக குற்றவாளி இவர் தான் என்று 10 நிமிடத்தில் சொல்லிவிட முடியும்.
குற்றம் புரிபவர்கள் தாம் எப்படியும் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோம் எனும் நிலை வரும்போது நாட்டில் குற்றங்கள் குறையும். குண்டுவெடிப்பு நேரங்களில் குற்றவாளியை கண்டுபிடிக்க இயலாத போது ஏதாவதொரு முஸ்லிமை பிடித்து இவன்தான் குற்றவாளி என்று கூறி ஃபைலை குளோஸ் பண்ணும் நிலை போலீஸாருக்கு ஏற்படாது.
வளைகுடா நாடுகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு கைரேகையும் எடுக்கப்படுகின்றன. அந்த அடையாள அட்டையின் எண்ணை கம்பியூட்டரில் தேடினால் அவரது முகவரி தொலைபேசி எண் அவர் எங்கு பணி புரிந்தார் எந்த நாட்டை சார்ந்தவர் எந்த தேதியில் வந்தார் எத்தனை வருடமாயிற்று போன்ற ஆதி முதல் அந்தம் வரை உள்ள அவரது அனைத்து விபரங்களும் தெரிந்து விடும்.
இது போன்று நாம் தயாரிக்கும் அடையாள அட்டை இருக்குமானால் பயனுள்ளதாக இருக்கும். விபச்சாரத்தில் ஈடுபட்டு பிடிபடும் போது தாங்கள் கணவன் மனைவி என்று கூறி பெரும்பாலானவர்கள் தப்பித்து விடுகின்றனர். அடையாள அட்டை புழக்கத்துக்கு வந்து விட்டால் இது போன்ற தவறுகளும் தடுக்கப்படும். விபத்துக்கள் ஏற்படும் சமயங்களில் அடையாளம் தெரியாத ஒருவர் மரணமடைந்தார் அல்லது காயமடைந்தார் எனும் பத்திரிகை செய்திகள் குறையும்.
ஒருவர் தன் கைவசம் எப்பொழுதும் அதை வைத்திருப்பதால் அவரை அடையாளம் கண்டு அவரது உறவினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்து பாதுகாக்க முடியும். அடையாள அட்டையில் ஒருவருக்கு வழங்கப்பட்ட எண்ணில் வருமானம் முதற்கொண்டு அனைத்து விபரங்களும் அடங்கிவிடுமாதலால் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் தவறானவர்களுக்கு செல்லாமல் உரியவர்களுக்கு மிக சுலபமாக போய் சேரும்.
மொத்தத்தில் இது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. முதற்கட்ட பணியில் இது சிரமமாக தெரிந்தாலும் நாளடைவில் அது மிக மிக எளிதானதே. ஒரு குழந்தை பிறந்த உடன் பிறப்பு சான்றிதழ் வழங்கும்போதே அடையாள அட்டையையும் வழங்கிவிடலாம்.
இந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டையானது குற்றம் புரிபவர்களுக்கு கசப்பானது என்றாலும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் இது மிகவும் இனிப்பான செய்தி என்றால் அது மிகையல்ல.
நன்றி: உணர்வு வார இதழ்
17 Sept 2009
வரவேற்கத்தகுந்த தேசிய அடையாள திட்டம்
Posted by Abdul Malik at 3:20 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment