3 May 2009

அக்னி வெயிலை சமாளிப்பது எப்படி ?

நாளை தொடங்கி 24 நாட்களுக்கு சுட்டெரிக்கும்
அக்னி வெயிலை சமாளிப்பது எப்படி? டாக்டர்கள் டிப்ஸ்

கோடையின் உச்சகட்டமான அக்னி வெயில் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டு 28ம் தேதி வரை நீடிக்கும் காலகட்டத்தில் கடுமையாக வெப்பம் இருக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் அக்னிக்கு முன்பே வெயிலின் கொடுமை அதிகமாக உள்ளது. குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் இப்போதே 110 டிகிரியை நெருங்கி வெயில் கொளுத்துகிறது. கடந்த ஆண்டு அக்னியின்போது கோடை மழை பெய்ததால் அதிக அளவில் பாதிப்பில்லாமல் மக்கள் தப்பினர். ஆனால் இந்த ஆண்டு வெயில் கொடுமை அதிகமாக இருக்கும் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்னி நட்சத்திர வெயிலை சமாளிப்பதற்கு டாக்டர்கள் சில டிப்ஸ்களை அளித்துள்ளனர்.

அவை வருமாறு:

சாதாரணமாக உடல் வெப்பம் 98.6 பாரன்ஹீட் இருக்கும். கோடை காலங்களில் 113 பாரன்ஹீட் வரை எட்டும். இந்த வெப்பத்தை வியர்வை மூலமாக உடல் சமன் செய்கிறது.

கோடை காலத்தில் சிலருக்கு 3 வகையான வெப்ப நோய்கள் ஏற்படுகிறது. முதல் வகை ஹீட் கிரம்ப்ஸ். இதற்கு நீரில் உப்பு சேர்த்து அருந்தினால் சரியாகிவிடும்.

இரண்டாவது வெப்ப வெளியீடு. அதிக சூடு, உடல் நீர்த்தன்மை குறைவதால் இந்த நோய் வருகிறது. இதனால் அதிக களைப்பு, வாந்தி, தலை சுற்றல், தலைபாரம் போன்ற அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். இப்படிப்பட்ட நோயாளிகள் உடனடியாக குளிர்ந்த, நிழலான இடத்துக்கு செல்ல வேண்டும்.2 முதல் 2.5 லிட்டர் திரவ ஆகாரங்கள் உட்கொள்ள வேண்டும். ஐஸ் கட்டிகளை உடலின் பல்வேறு பாகங்களில் வைக்க வேண்டும். மோருடன் சிறிது உப்பு சேர்த்து பருகலாம். இப்படி செய்வதின் மூலம் நோயாளிகள் ஓரிரு தினங்களில் குணமாவர்.

மூன்றாவது அசாதாரணமான வெப்ப தாக்கம். நீண்டநேரம் கடுமையான வெயிலில் நிற்பதாலும், அதனால் உடல் வெப்பத்தை தணிக்க வியர்க்காததாலும் இந்த நோய் வருகிறது. உடனடி சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் நிரந்தர ஆரோக்கியமின்மையும், இறப்பையும் உண்டாக்கும். மூளை, கிட்னி, கல்லீரல், தோல் உள்பட பலவற்றை பாதிக்கும். இந்த நோயாளியை உடனடியாக அறைக்கு உள்ளே அழைத்து வர வேண்டும். குளிர்ந்த நீரை சருமத்தில் விட்டு, வியர்வை உண்டாக்க மின் விசிறி அல்லது காற்று படுமாறு செய்யவேண்டும். ஐஸ் கட்டிகளை தொடை இடுக்கு மற்றும் அக்கிள்களில் வைக்கலாம்.

பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலை செல்பவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது. இதனால் அவர்கள் தினமும் 6 முதல் 8 லிட்டர் நீர் பருக வேண்டும். டீ, காபி, ஆல்கஹால் பருகுவதை நிறுத்த வேண்டும்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்தான் வெப்ப காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு வெப்ப தாக்கம் வந்தால் காப்பாற்றுவது கடினமானது. ஏனெனில் பிறந்த சில நாட்களேயான குழந்தைகளுக்கு உடல் வியர்க்காது. அந்த குழந்தைகளால் எதுவும் சொல்ல முடியாது. அதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால், நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்லவோ அல்லது விளையாடவோ அனுமதிக்க வேண்டாம். குழந்தைகளுக்கு அடிக்கடி அதிகமாக தண்ணீர் கொடுக்கவும், இளநீர், எலுமிச்சை சாறு, மோர், தர்பூசணி சாறு போன்றவற்றை பருக கொடுக்கலாம்.

லேசான மெல்லிய பருத்தி ஆடைகளை அணியலாம். மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்தலாம். வெளியே செல்லும்போது தொப்பி அணிவதன் மூலம் வெப்பத்தை தவிர்க்கலாம். 2 அல்லது 3 முறை குளிக்க வைக்கலாம் என்று டாக்டர்கள் கூறினர்.

No comments: