24 Feb 2009

அன்பார்ந்த முத்துப்பேட்டை நண்பர்களே

முத்துப்பேட்டை மக்களுக்காக ஒரு புதிய இனயதளம்
முத்துப்பேட்டை மற்றும் அதனைச் சார்ந்துள்ள ஊர்கள் தொடர்பான செய்திகளை நீங்கள் எங்களுக்கு அனுப்பி வைத்து, உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முத்துப்பேட்டை வட்டார மக்கள் தங்கள் பகுதிகளின் செய்திகளைத் தெரிந்து கொள்ள உதவுங்கள்.

திருமணம், மரணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளும் வரவேற்க்கப் படுகின்றன. வாழ்த்துக்கள், அனுதாபங்கள், சமூக கட்டுரைகள், விமர்சனங்கள் போன்றவைகளையும் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

எங்களது இமெயில் முகவரி admin@muthupet.org

எங்களது இணையதள முகவரி http://www.muthupet.org/
முத்துப்பேட்டை மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்தத் தளத்தினை துவங்கியுள்ளோம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் முத்துப்பேட்டை மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
இந்த இணைய தளத்தில் நீங்கள் இதுவரை உறுப்பினராகப் பதிவு செய்யவில்லையெனில், உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்.
முத்துப்பேட்டை மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்தத் தளத்தினை துவங்கியுள்ளோம். எனவே, இந்த இணையத் தளத்தில் வெளியிடும் தகவல்களுக்குக் கீழ்க்காணும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.
* தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது
* அனைத்து ஜமாத்தினருக்கும் பொதுவானதாக இருக்கச் செய்வது
* கட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது
* பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில்
தகவல்களை இடம் பெறச் செய்வது
* நம்பத்தகுந்த உண்மையான செய்திகளைப் பெறும் பொருட்டு, இந்த இணைய தளத்தில் பதிவு செய்துள்ள முத்துப்பேட்டை உறுப்பினர்களின் படைப்புகள் மற்றும் செய்திகள் மட்டுமே ஏற்றுக் கொள்வது.
இந்த இணைய தளத்தில் முத்துப்பேட்டையின் அனைத்து விவரங்களையும் வெளியிட முயன்று வருகிறோம். எனவே செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப் படங்கள், வாழ்த்துக்கள், அனுதாபங்கள் என அனைத்தையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.
ஏனெனில், நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள், பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.
உங்கள் படைப்புகள்...
ஆங்கிலம், தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை டைப் செய்து இருத்தல் வேண்டும். தமிழில் தகவல்கள் அனுப்பும் போது, பயன்படுத்துங்கள்.
எந்தவொரு தனி நபரையும் விமர்சனம் செய்தோ அல்லது புகழ்ந்தோ இருத்தல் கூடாது. பொய்யான அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களாக இருக்கக் கூடாது.
நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம். உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.
எங்களைத் தொடர்பு கொள்ள....

23 Feb 2009

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.

தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும். குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும் மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.

குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது. சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும். குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.

குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம். கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.

கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.

ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.

சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள்.
இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.

பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.

வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.

இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.

சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது.

சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.

ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.

வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள். கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.

தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்

சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள். கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்..

வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.

குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.

வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.

குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.

தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும். குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.

குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன. வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும். விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

- மிவா துபாய்

22 Feb 2009

இனி வாங்குவது கஷ்டம், தங்கத்தை விற்க விரும்பும் மக்கள்!

இனி வாங்குவது கஷ்டம்
தங்கத்தை விற்க விரும்பும் மக்கள்!

விலை உயர்வால் தங்களிடமுள்ள பழைய தங்க நகைகளை விற்பனை செய்வதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.11,500 கடந்து ரூ.12 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் விற்பனை 30 சதவீதத்துக்கு மேல் குறைந்துள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

மார்ச் மாதத்துக்குப் பிறகு விலை குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அதுவும் உறுதி என்று கூறிவிட முடியாத நிலை. இதனால் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்று காசாக்க மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இப்போது விற்றுவிட்டு மீண்டும் விலை குறையும் போது வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து, பழைய நகைகளை திரும்ப வாங்கிக் கொள்ளும் நகைக் கடைகளை நோக்கி நடந்த வண்ணம் உள்ளனர்.

இன்னொன்று வங்கிகளில் கடன் வாங்கும் சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாக உள்ளதால், இனி இருக்கும் நகைகளை நல்ல விலைக்கு விற்றுவிட்டு, கடனில்லாத வாழ்க்கைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

"பழைய நகைகளை எந்த நிலையில் இருந்தாலும், சந்தை விலையைவிட 1 சதவீதம் குறைவான விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். கடந்த 10 நாட்களாக, தங்கத்தை விற்பதற்காக வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விலை தொடர்ந்து அதிகரித்தால் இது மேலும் அதிகரிக்கும் என பிரபல நகைக்கடை ஜுக்ராஜ் காந்திலால் நிறுவனம் அறிவித்துள்ளது.
பங்குச் சந்தை சரிவால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், கடந்த அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலத்தில் தங்கத்துக்கான தேவை 84 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை தெரிவிக்கிறது.

14 Feb 2009

இன்று காதலர் தினம்

இன்று காதலர் தினம்:

நேற்று ஒரே நாளில் ஒன்பது விவாகரத்து வழக்குகள் தாக்கல்காதல் திருமணம் செய்தவர்களும் `குட்பை' சொல்வதுதான் வேதனை

சென்னை குடும்பநலக் கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் 9 விவாகரத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

கஷ்டதினமாகும் நாள்

காதலர் தினம் என்பது யாரிடமும் கேட்காமல் நாட்டுக்குள் நுழைந்துவிட்ட நவீன நாகரீகமாகும். காதலர்களுக்கு இந்த தினம் கொண்டாட்டமாக அமைந்தாலும், பெற்றோருக்கு இது கஷ்ட தினமாகத்தான் தோன்றும்.
காதல் பற்றிய தெளிவான கருத்து இதுவரை கூறப்படவில்லை என்பதால், அதுபற்றி எடுக்கும் சினிமா படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுவிடுகின்றன.

பல உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும் காதல், அந்தந்த காலகட்டங்களில் அனைவரின் மனதிலும் புகுந்து குத்தாட்டம் போட்டுவிடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கேள்விப்பட்ட காதல், இன்று தெருவுக்கு தெரு மறைவில் நிற்கிறது.

மல்லுக்கட்டும் காதலர்கள்

பெரும்பாலான காதல், திருமணத்தில் முடிகின்றன. அப்படிப்பட்ட காதல் திருமணங்களும் பெரும்பாலும் கோர்ட்டுகளில் முடிந்து விடுகின்றன. தற்போது கோர்ட்டுகளில் குவியும் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை, மிகுந்த ஆச்சரியத்தையும், அச்சத்தையும் எழுப்புகின்றன. இவைகளில் பெரும்பாலான வழக்குகளில், `முன்னாள்' காதலர்கள்தான் மல்லுக்கட்டுகின்றனர் என்பது இன்னும் வியப்பு.

சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கோர்ட்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு வழக்குகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, அதிகபட்சமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 3 ஆயிரமாக இருந்தது.

கடந்த ஆண்டில்...

ஆனால் கடந்த 2008-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 905 விவாகரத்து வழக்குகள் தாக்கலாகியுள்ளன. மாதமொன்றுக்கு அதிகபட்சம் 412 வழக்குகளும், குறைந்தபட்சம் 250 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
அதாவது சராசரியாக மாதம் ஒன்றுக்கு 350 வழக்குகளும், நாளொன்றுக்கு 17 வழக்குகளும் தாக்கல் செய்யப்படுகின்றன. காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 412 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இவற்றில் காதல் திருமணங்கள் ஏராளமாக உள்ளன.

5-வது நாளில் வந்த மனு

இந்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட விவாகரத்து வழக்கு ஒன்று, கோர்ட்டு ஊழியர்களை வியப்பில் ஆழ்த்தியது. சென்னையில் 23.1.09 அன்று (வெள்ளிக்கிழமை) நடந்த திருமணம் அது. 27-ந் தேதி காலையிலேயே மணமகன் தனது கையில் விவாகரத்து மனுவுடன் முதல் ஆளாக கோர்ட்டுக்கு வந்துள்ளார். மனுவைப் பார்த்த ஊழியருக்கு அதிர்ச்சி.
`திருமணம் ஆகி 5 நாள் கூட ஆகவில்லையே, இவ்வளவு சீக்கிரமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வந்து விட்டீர்களே', என்று கேட்டு இருக்கிறார். அதற்கு மணமகன், `சீக்கிரமா? தாமதமாக கோர்ட்டுக்கு வந்ததாக நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். 24 (சனிக்கிழமை), 25 (ஞாயிற்றுக்கிழமை), 26 (குடியரசுத் தினம்) ஆகிய தேதிகளில் விடுமுறை வந்துவிட்டதால் இவ்வளவு பிந்தி வரவேண்டியதாகி விட்டது. இல்லாவிட்டால் திருமணமான மறுநாளே மனுவோடு வந்து இருப்பேன்' என்று அந்த மணமகன் கூறி இருக்கிறார்.

மனைவிகளாகும் மாணவிகள்

மணமக்களின் மணமாலை கூட முழுவதுமாக வாடி முடிவதற்குள், இவர்களின் மணவாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது. இதுபோல் பல கல்லூரி மாணவிகள் சிலர், `திடீர்' மனைவிகளாகவும், முன்னாள் மனைவிகளாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றனர். குடும்பத்தையும், கடமையையும் மறந்து, அவர்களின் வயதையொத்த நண்பர்களின் ஆலோசனையின்படி, காதலனுடன் எங்காவது சென்று பதிவுத் திருமணம் செய்யும் மாணவிகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற திருட்டுத் தாலிகளை பெற்றோர் அல்லது உறவினர்கள் கண்டுபிடித்து விடுவதால் நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் விவாகரத்துக்கு வரும் மாணவி (மனைவி)களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. வரும்காலத்தில் பெற்றோருக்கு இது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.

நடிகைகளும் விவாகரத்தும்

விவாகரத்துக்கு வயதும் ஒரு தடையல்ல. 50 வயதைத் தாண்டிய பிறகு விவாகரத்து செய்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் இருக்கின்றனர். சென்னை கோர்ட்டில் தற்போது வீடியோ கான்பரன்சிங் என்ற தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம், வெளிநாடுகளில் உள்ள மணமக்களுக்கு விவாகரத்து வழக்கில் தீர்ப்பளிக்கப்படுகிறது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட சினிமா நடிகர்களும் விவாகரத்துக்கு தப்பவில்லை. ராமராஜன்-நளினி, பார்த்திபன்-சீதா இவர்களும் அடக்கம். ஸ்ரீவித்யா-ஜார்ஜ், ஊர்வசி-மனோஜ், ஹீரா-புஸ்கர்நட், சொர்ணமால்யா-அர்ஜுன், வனிதா-ஆனந்த் ஆகியோரும் மணவாழ்க்கையை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர்.

சுகன்யா-ஸ்ரீதர், பிரசாந்த்-கிரகலட்சுமி, சரிதா-முகேஷ், மீராவாசுதேவன்-விஷால் ஆகிய ஜோடிகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். காதல் பரிமாணத்தை வளர்க்கும் சினிமா, டி.வி. தொடர்களால், இளம் உள்ளங்கள் கெட்டு, இறுதியில் கோர்ட்டுக்கு கொண்டு வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

காதலர் தினத்துக்கு அர்ப்பணம்

இந்த ஆண்டிலும் கடந்த ஆண்டைப் போலவே விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை குடும்பநல கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. நேற்று மட்டும் தாக்கல் செய்யப்பட்ட 9 வழக்குகளில் (வக்கீல் புறக்கணிப்புப் போராட்டம் இருந்தாலும்) பெரும்பாலான வழக்குகள், காதல் மணம்புரிந்தோரால் தாக்கல் செய்யப்பட்டன.

காதலர் தினத்துக்காக இதை அர்ப்பணித்து இருப்பார்களோ, என்னவோ?

2 Feb 2009

நம்ம மின்னஞ்சல்லை அடுத்தவர்கள் பார்வையிடாமல் தடுப்பது எப்படி?

இப்படித்தான்

சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டாம் - வருகிறது கூகுள் ஜி&டிரைவ்

லேப்டாப் வாங்காமல் அவசரப்பட்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விட்டீர்களா?
லேப்டாப் இருந்தாலும் அதை மறந்து விட்டு வெளியே செல்கிறீர்களா?
எதுவானாலும் இனி கவலையில்லை. இருந்த இடத்தில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாக்களை தொடர்பு கொள்ளும் ஜி & டிரைவ் வசதியை கூகுள் விரைவில் அறிமுகம் செய்கிறது.
கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தக்கூடிய இந்த வசதி பற்றி அமெரிக்க தொழில்நுட்ப செய்திக்கான வெப்சைட் கூறுகையில், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்டிரைவை தூக்கி எறியுங்கள். கூகுள் ஜி&டிரைவ் விரைவில் வருகிறது என்கிறது.
அதாவது, நமது கம்ப்யூட்டரில் நாம் வைத்திருக்கும் அத்தனை டேட்டாக்களையும் இன்டர்நெட்டில் கூகுள் ஏற்படுத்தித் தரும் இடத்திலும் ஸ்டோர் செய்து வைக்கலாம். அதன்மூலம், இருக்கும் இடத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும். ஜி&டிரைவ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்களை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த வசதியில் இமெயில், போட்டோக்கள், இசை, தகவல் பைல்கள் என சகலமானவற்றையும் தொடர்பு கொள்ள முடியும். கூகுள் இப்போது அளித்து வரும் வசதிகளுடன் கூடுதலாக இந்த சேவையும் கிடைக்கப் போகிறது.
இந்த வசதி அறிமுகமாகி பிரபலமாகி விட்டால் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் உட்பட இப்போதைய டெஸ்க்டாப் சிஸ்டம்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர் கம்ப்யூட்டர் துறை நிபுணர்கள்.
எனினும், கூகுள் ஜி&டிரைவை நம்பி அதிகளவு தனிப்பட்ட மற்றும் வர்த்தக டேட்டாக்களை ஸ்டோர் செய்வது சரியாக இருக்காது.
உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் அளவு டேட்டாக்களுக்கு ஜி&டிரைவில் பாதுகாப்பு கிடைக்காது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி தொடர்பு கொண்டபோது கூகுள் தரப்பில் கருத்து தெரிவிக்க மறுத்தனர்.