அண்ணாச்சி ஒரு ரூபாய்க்கு மிளகு சீரகம் கொடுங்க! உள்ளங்கை வியர்வையுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கடைக்காரரிடம் நீட்டினாள் சிறுமி.
கூலி வேலை பார்க்கும் வீட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். வறுமை, சோகம், சோர்வு என அனைத்தையும் தோற்றத்தில் அப்பிக் கொண்டு நின்ற அந்தச் சிறுமியை அண்ணாச்சியோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!
‘‘லூஸ்ல இல்லம்மா!’’ என்று கட்டையாய் சொல்லிவிட்டு, ‘‘கிலோ மிளகு இருநூறு ரூபாய் விக்குது! இதுல ஒரு ரூபாய்க்கு எண்ணியா குடுக்க முடியும்!’’ என்று தன் இயலாமையை சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் வெளிப்படுத்தியவர், ‘‘இத மாதிரி ஏழ பாளைங்களெல்லாம் எதையாவது கலப்படத்தத் தின்னுகிட்டு காய்ச்சல், வாந்தி பேதின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதுதான்!’’ என்று தன் ஆதங்கத்தையும் நம்மிடம் கொட்டினார்...
‘‘இது உண்மைதான்... இன்று ஃபுட் பாய்ஸனால் உடனடி வியாதிகள் மட்டுமின்றி நீண்டகால நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தக் கொடுமையின் உச்சம் மங்களகரமான மஞ்சளில்தான் ஆரம்பமாகிறது என்பது நமது சென்டிமெண்ட்டை மட்டுமல்ல இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்க்கிற விஷயம்...
நல்லது கெட்டது எதுவென்றாலும் மளிகை லிஸ்ட் எழுதும் பொழுது மஞ்சளில்தான் ஆரம்பிப்போம். கலப்படமும் அதுபோல் மஞ்சளில்தான் ஆரம்பிக்கிறது... மஞ்சள் பொடியுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்... இது என்றாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை...
எந்த மஞ்சள் பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று... முழு மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.’’
எந்த மஞ்சள் பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று... முழு மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.’’
கலப்படத்தின் அபாயத்திற்கான அலாரத்தை அடித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எஸ்.சந்தர்...
மரணத்தின் பிள்ளையார்சுழி மஞ்சள்தூளிலேயே ஆரம்பிக்கிறதென்றால் மற்ற பொருட்களின் நிலை எப்படி? மாநிலம் முழுக்க நம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள்... ‘‘பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம். ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்... இதற்கு முக்கியக் காரணம், அந்த எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி.... காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள். ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும் எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்!’’ என்கிறார் நெல்லை மாநகராட்சியின் சுகாதார உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம்.
கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள். இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள்.
கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது, சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது, கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் ‘சில்கி’, இன்னொன்று ‘செகண்ட்ஸ்’. இந்த ‘சில்கி’ தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும்.
கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த ‘செகண்ட்ஸை’தான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு... காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியரு ரூபத்தில் அங்கே காத்துக் கொண்டிருக்கும்!
சரி, இந்தக் கலப்படங்களையெல்லாம் கட்டுப்படுத்த சரியான சட்டமில்லையா? ‘‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது!
வெளிநாடுகளில் அப்படியல்ல. லண்டனில் உள்ள ‘நுகர்வோர் அகிலம்’ என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக் கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து ‘மோசமான உணவுக்கான விருது! என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது... அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது... அதிலும் குறிப்பாக, ‘பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்’ என சிபாரிசு வேறு! கலப்படத்தால் ஏழைகள் மட்டும்தான் சாக வேண்டுமா? வசதிபடைத்தவர்களும் கொஞ்சம் பாதிக்கட்டும் என்ற தார்மீக நியாயமோ என்னவோ?’’ என்று அரசின் மெத்தனப் போக்கை மெலிதாகச் சாடுகிறார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மார்ட்டின்.

பொதுவாகவே இந்தக் கலப்படக் குற்றங்கள் அதிகம் நடைபெறுவது சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில்தானாம். சென்னை மாநகராட்சி இது தொடர்பாக என்ன செய்து கொண்டிருக்கிறது? ‘‘சென்னையைப் பொறுத்தவரை பத்து மண்டலங்களிலும் கண்காணிப்பும் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வட சென்னை பகுதிகளில்தான் கலப்படம் அதிகம் என்றாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தரமான பொருட்களைப் பார்த்து வாங்குவது, எல்லா இடத்திலும் பாதுகாப்பானது. உணவுப் பொருட்களின் தயாரிப்புத் தேதிகளைப் பார்த்து வாங்குவது போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். தவிர, கலப்படக்காரர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செய்கிறோம். அண்மைக்காலமாக கலப்படக் குற்றங்கள் குறைந்து வருவதுதான் உண்மை.
2005_ல் நாங்கள் சோதனை யிட்ட 1169 இடங்களில் குற்றம் செய்தவர்கள் 34 பேர். 2007ல் 1083 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் 27 பேர்மீதுதான் தவறு இருந்தது...’’ என்று சென்னை மாநகராட்சியின் கூடுதல் நல அதிகாரியான டாக்டர் தங்கராஜன் புள்ளி விவரங்களைத் தருகிறார்.
குற்றங்கள் குறைவாகத் தெரிவதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத பல புதுப்புது யுக்திகளைக் கலப்படக்காரர்கள் கையாள்வதும் காரணம் எனலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஏறிவிட்ட விலைவாசியினால் எந்தப் பொருளிலும் பத்து முதல் இருபது சதவிகிதம் கலப்படம் செய்தாலே பல லட்சங்கள் பார்த்துவிடக்கூடிய வாய்ப்பு, கலப்படத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது’ என்பது பொதுமக்களின் அபிப்பிராயம். இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டினால் ஏழைகளின் ரசமும் விஷமாகும் என்பது தவிர்க்க முடியாதது!
நன்றி : குமுதம்
No comments:
Post a Comment