சில நாட்களுக்கு முன் சந்தித்த சில புது துபாய்வாசிகளைப் பற்றிய பதிவு இது.
மேலும், வேற்று நாட்டில் வேலை தேடும் எத்தனையோ நண்பர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களை குறிப்பிடவும் இந்தப்பதிவை உபயோகித்துக் கொள்கிறேன்.
போன வாரம் புதிதாக இங்கு வேலைக்குச் சேர்ந்த சிலரை சந்திக்க நேர்ந்தது. அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், என்னிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசினார்கள் (அல்லது பேச வைத்தேன்).
இவர்கள் வேலை ஒரு பெரிய நிறுவனத்தில் அனைவருக்கும் காபி, டீ அளித்து கவனித்துக்கொள்ளும் வேலை. ஏறக்குறைய உணவு பரிமாறும் சிப்பந்தி (சர்வர்/பட்லர்) வேலை போல. சிலர் சுத்தம் செய்பவர்கள் (cleaners). இவர்கள் அனைவரும் ஒரு பிரதிநிதி (ஏஜென்ட்) மூலமாக இங்கு வந்தவர்கள். ஒவ்வொருவரும், ரூ. 60,000 முதல் 1 லட்சம் வரை பணம் கொடுத்து வந்துள்ளனர். அவர்களிடம் சொல்லப்பட்ட வேலை - ஒரு ஓட்டலில். ஆனால், அவர்கள் ஒரு ஒப்பந்தக்கார நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒருவர் சென்னையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் மேற்பார்வையாளராக பணி செய்து கொண்டிருந்தாராம். சுமார் 10,000 வரை சம்பாத்தித்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு கிட்டத்தட்ட அதே அளவு சம்பள வேலைக்கு இங்கு வந்திருக்கிறார். உணவு பரிமாறும் சிப்பந்தி வேலை பார்க்க.
அவரிடம் சொல்லப்பட்டது ஓட்டலில் மேற்பார்வையாளர் வேலை! ஆனால்? அவர் ஒரு பட்டம் மற்றும் உணவு வழங்குவதில் உள்ள படிப்பு (Catering Tech. Diploma) படித்தவர். அதனால் அவருக்கு அளிக்கப்பட்டது 700 திர்ஹம் சம்பளம். பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு உடனே இங்கு வந்து விட்டதாக சொன்னார். அவரிடம் நான் கேட்ட கேள்வி, ஏன் இங்கு இந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டு வந்தீர்கள் என்பதே. 'தெரியாமல் வந்து விட்டேன்' என்ற வழக்கமான பதிலே கிடைத்தது.
மற்றுமொருவர், சவூதி அரேபியாவில் 10 வருடம் அனுபவம் உள்ளவர். அவர் அங்கு காசாளராக வேலை பார்த்ததாக சொன்னார். அரேபிய மொழியை நன்றாக பேசுகிறார். அவருக்கு சம்பளம் 500 திர்ஹம் மட்டுமே. அவர் கொடுத்த பணம் 70,000 ரூபாய். இவரிடம் கேட்டதற்கு, பணம் கொடுத்து வேலைக்கு ஒத்துக்கொள்வதானால் ஒத்துக்கொள், இல்லாவிட்டால், உன் பின்னால் தயாராக இருக்கும் ஆளுக்கு கொடுத்து விடுவோம் என சொன்னார்கள், அதனால் ஒத்துக்கொண்டு விட்டேன் என்றார்.
மற்றுமொருவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக (salesman) பணிபுரிந்து வந்தாராம். அவர் இங்கே செய்வது சுத்தம் செய்யும் வேலை. சம்பளம் 350 திர்ஹம். கண்டிப்பாக சென்னையில் இதை விட நிறைய சம்பாதித்துக்கொண்டு இருந்திருப்பார். அவரும் ரூ. 80,000 கொடுத்து தான் வந்திருக்கிறார். கேட்டதற்கு, இங்கு ஏற்கனவே இருக்கும் அவரது அண்ணன் சொல்லித்தான் வந்தாராம். இது பரவாயில்லையா என்றதற்கு, 'வேறு என்ன செய்வது' என்பதே பதிலாக கிடைத்தது.
இவர்களுடன் வந்த அனைவருமே இப்படித் தான் ஒரு தொகையினைக் கொடுத்து இங்கு வந்திருக்கின்றார்கள். ஒன்று செய்த நல்ல வேலையை விட்டுவிட்டு அல்லது இங்கு அந்த வேலையினை விட நல்ல வேலை இருக்கும் என்ற நம்பிக்கையில். இப்படி அடிக்கடி இங்கே நடப்பதை பார்த்திருக்கிறேன்.
இதற்கு என்ன காரணம்?
முதலாவது முக்கியக்காரணமாக நான் எண்ணுவது இதற்கு முன் இங்கு வரும் இப்படிப்பட்ட ஆட்கள். இவர்கள் வந்தவுடன் உண்மையான நிலையைக்கண்டு குமுறுவார்கள் ( நமது மேற்கண்ட புது நண்பர்களைப்போல ). சில வருடங்களுக்குப் பிறகு பழகிவிடும், ஊருக்கு விடுமுறைக்கு செல்வார்கள். எப்படி தெரியுமா? பகட்டான குளிர் கண்ணாடியும், புத்தம்புதிய கைத்தொலைபேசியும், வாசனை திரவியங்களுமாக. ( நமது வெற்றிக் கொடி கட்டு வடிவேலு ஞாபகம் வருகிறதா? ). தனது வீட்டு மக்களிடமும், நண்பர்களிடமும், தான் பட்ட அவதிகளையும் தான் செய்து வரும் உண்மையான வேலையையும் மறைத்து விடுவார்கள். வீட்டு மக்களிடம் மறைப்பது ஒரு நல்ல எண்ணதினால் தான் என்றாலும், மற்றவர்களிடம் மறைக்கப்படும் போது, அவர்களுக்கும் தானும் வெளிநாட்டில் வேலை பார்த்து இதே மாதிரி 'பந்தா' காட்டலாம், வசதியாக இருக்கலாம் என எண்ணத்தோன்றுகிறது.
சில பேர் இங்கு இருக்கும் உண்மை நிலையை அங்கு சொல்ல முற்பட்டாலும் அதை நம்பத் தான் ஆளில்லை. ஏனெனில் பெரும்பான்மை தானே எப்போதும் ஜெயிக்க முடிகிறது? அப்படிப்பட்ட பந்தாவிற்கும், ஓரளவு வசதியான வாழ்விற்கும் அவர்கள் கொடுக்கும் உண்மையான விலை தான் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகிறது.
குழந்தையின் மழலைப் பேச்சு, மனைவியின் அன்பு, பெற்றோருடைய பாசம், நண்பர்களுடன் உற்சாகம் - இவை அனைத்தையும் இழந்து தவித்து அவர்கள் சம்பாதிப்பது - அந்த ஓரிரு மாதம் விடுமுறையும், அதன் சந்தோஷமும் தான். அந்தப் போலியான சந்தோஷத்தை உண்மை என நினைத்து, தானும் அப்படி வெளிநாடு போக வேண்டும் என ஆசையில் இருக்கும் நண்பர்கள் தான் இப்படி மாட்டிக்கொள்கிறார்கள். பத்திரிக்கைகளில் இப்படி ஏமாற்றப்பட்டவர்கள் கதைகளை நிறைய படிக்கிறோம்.
இயக்குனர் சேரன் தனது 'வெற்றிக் கொடி கட்டு' படத்தில் ஒரு புதிய வழியையும் சொல்லியிருந்தார். ஆனாலும்? இந்த நிலை முக்கியமாக கீழ்தட்ட வேலை செய்பவர்களுக்கே ஏற்படுகிறது. மற்றவர்கள் அவ்வளவாக ஏமாற்றப்படுவதில்லை அல்லது ஏமாறுவதில்லை. இவைகள் நிகழாமல் தடுக்க முடியும். மேற்கண்ட நான் சொன்ன ஆட்கள், நிறைய துணை பிரதிநிதிகளிடம் சிக்கியுள்ளனர். இவர்களை வேலையில் அமர்த்தி இங்கு அனுப்பும் அனுமதியைப் பெற்றது மும்பையில் இருக்கும் ஒரு வேலையளிக்கும் நிறுவனம். இவர்களிடம் நேரடியாக சென்றவர்கள் அளிக்க வேண்டிய 'சேவை'க் கட்டணம் வெறும் 30 அல்லது 40,000 மட்டுமே. இந்த துணை பிரதிநிதிகள் கடலூர், கோவை மற்றும் சென்னையில் இருந்து கொண்டு, மேற்கொண்டு பணம் வாங்கிக்கொண்டு, இவர்களை மும்பைக்கும் அனுப்புகிறார்கள்.
கடலூர் போன்ற இடங்களில், மேற்படி தொகை அதிகமாகவும், சென்னையில் குறைவாகவும் இருக்கிறது. வேலைக்கு விண்ணப்பிக்கும் ஆட்கள் நேரடியாக வேலைக்கும் பணியமர்த்தும் பிரதான நிறுவனத்தை அணுகினால் துணை பிரதிநிதிகளுக்கு அளிக்கும் 'அதிக' கட்டணத்தை தவிர்க்கலாம்.
இரண்டாவது, அப்படி உரிமை பெற்ற நிறுவனத்தின் நம்பகத்தன்மையை வெளியுறவுத்துறையிடம் உறுதி செய்துகொள்ளலாம். இவர்களுக்கு உரிமம் எண் உள்ளதா, அப்படி இருக்கிறது என்றால் அது சரியானது தானா போன்ற தகவல்கள். மேலும், சொல்லப்படும் வேலை மற்றும் சம்பளம் என்ன என்பதை எழுத்து மூலம் வாங்கிக்கொள்வது மிகவும் நல்லது.
இவையெல்லாம், இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளே. ஆனால், நடைமுறைப் படுத்துவது வேலை தேடும் நபர்களிடம் தான் உள்ளது. குடியேற்ற துறை இவைகளை கட்டாயமாக்கப்போவதாக எங்கோ படித்தேன். என்ன தான் அரசாங்கம் கட்டாயமாக்கினாலும், இங்கு வரத் துடிக்கும் எத்தனையோ பேர் இருக்கும் வரை இந்த மாதிரி கதைகள் கேட்டுக்கொண்டு தான் இருக்க வேண்டி இருக்கும் என தோன்றுகிறது.
ஆக்கம் : துபாய்வாசி
21 Apr 2008
வெளிநாட்டில் வேலையா? - சில தெரியாத / புரியாத விஷயங்கள்
Posted by Abdul Malik at 12:31 pm 0 comments
துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்டு நிறுவனம் துவக்கம்
அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள நிறுவனங்கள் தான் (Contracting Companies). இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் போது குறைந்த சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு தருகிறார்கள்.
சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் அல்லது 14 மணி நேரங்கள் பணிபுரிகிறார்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிக மிக குறைவாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறைக்காலங்களிலும் வேலை செய்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியினை தருகிறது. அத்துடன் தொழிலாளர்கள் தங்கக்கூடிய இடங்களும் அடிப்படை வசதி இல்லாத அளவிற்கும் மாறிக்கொண்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் செய்யும் இத்தகைய தவறுகளால் பல பிரச்சனைகளை இங்குள்ள தொழிலாளர்கள் தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கிறது.
சென்ற சில மாதங்களாக துபாய், அஜ்மான், ஷார்ஜா போன்ற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை வசதி இல்லை, ஆறு மாத சம்பள பாக்கி, அறைகளில் மின்சாரம் இல்லை, தங்கி இருக்கும் பகுதிகளில் சரியான தண்ணீர் வசதி இல்லை மற்றும் இன்னும் பல காரணங்களை காட்டி சாலைகளில் இறங்கி போராட்டங்களை செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்களை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விட்டது துபாய் அரசாங்கம். அடிப்படை தொழிலாளர்கள் இல்லை என்றால், துபாயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி விடும் என்பதினை கருத்தில் கொண்ட துபாய் அரசாங்கமானது, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டி சோனாப்பூர் பேருந்து நிலைய பகுதியில் நிரந்தரமாக தொழிலாளர்கள் குறை தீர்க்கும் தொண்டு நிறுவனம் ஒன்றினை (Permanent Committee for Labour Affairs (PCLA) 18.4.08 வெள்ளிக்கிழமை மாலை அன்று பல தொழிலாளர்கள் முன்னிலையில் துவங்கியது.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மேஜர் ஜெனரல் முஹம்மது அஹமது அல் மாரி அவர்கள் (Major - General Mohammed Ahmed Al Marri - Director of the Dubai Naturalisation and Residency Department and Chairman of PCLA) அவர்கள் கூறுகையில், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை எற்பட்டாலும் எங்களிடம் முறையிடலாம், வேலை நேரம் அதிகம் நிறுவனங்கள் தருகிறது, சம்பள பாக்கி, அடிப்படை வசதி குறைவு இது போல் என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த துறைச்சார்ந்தவர்களிடம் (Relevant Department) கூறுவோம். ஒரு மணி நேரத்துக்குள் தொழிலாளர்களின் பிரச்சனை சரிப்படுத்த எங்களின் இந்த நிறுவனமானது முயற்சியினை மேற்கொள்ளும். தொழிலாளர்களின் வசதியினை கருத்தில் கொண்டு மாலை நேரத்திலும் எங்கள் தொண்டு நிறுவனம் பணி செய்யும். அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி அந்த நிறுவன அதிகாரிகளை சந்தித்து குறை சொல்வது போன்றவைகளை பற்றியும், கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அடிப்படை தொழிலாளர்களுக்கு கற்றும் தரும் பணியிலும் இந்த நிறுவனமானது செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தற்போது சோனாப்பூரில் துவங்கி இருக்கிறோம் அதன் பின் ஜெபல் அலி, அல் கூஸ் போன்ற பகுதியிலும் மிக விரைவில் துவங்க உள்ளோம் என்றும் சொன்னார்.
இந்த துவக்க நிகழ்ச்சியில் இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சார்ந்த அரசுத்துறை (Government Diplomats) அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பாகிஸ்தான் தூதரகத்தினை சார்ந்த முஹம்மது வாஷின் (Mohammed Waseen – Welfare Consul at the Pakistani consulate in Dubai) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த நிறுவனமானது தொழிலாளர்களின் அடிப்படை வசதிக்காகவும், மற்றும் மகிழ்வுடன் தொழிலாளர்கள் துபாயில் இருப்பதற்கான அனைத்து வசதி வாய்ப்பினை தரும் என்றும் கூறினார்.
நன்றி : கலீஜ் டைம்ஸ் 19.4.2008 முதல் பக்க செய்தி
தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
Posted by Abdul Malik at 11:57 am 0 comments
20 Apr 2008
மாணவர்களுக்கு உதவும் இணையதளம்
மத்திய அரசின் மனிதவள அமைச்சகம் உண்டாக்கியுள்ள தளமிது. இந்தியாவில் உள்ள மாணவர்கள் உதவித்தொகை (Scholarship) பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இந்த இணையதளம் உருவாக்கப் பட்டுள்ளது. அரசு மட்டுமின்றி தனியார் துறை வழங்குகின்ற உதவித்தொகை பற்றிய தகவல்களும் இதற்குள் அடங்கும். பள்ளிபடிப்பு முதல் பி.எச்.டி. படிப்பு வரை பல்வேறு உதவித்தொகைகள் கிடைக்கின்றன. கலைக்கல்லூரி படிப்புகள், மருத்துவம், பொருளாதாரம், புள்ளியியல் படிப்புகள் என எல்லா துறை படிப்புகளுக்கும் உதவித்தொகை கிடைக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் பல்வேறு நாடுகளிலும் படிக்க கிடைக்கும் உதவித்தொகை பற்றிய தகவல்களையும் அறியலாம். உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன சான்றிதழ்களை வைக்கவேண்டும், கடைசித் தேதி போன்ற தகவல்களும் இந்த இணைய தளத்தில் உண்டு. கல்விகடன் கொடுக்கும் வங்கிகள், கடனை பெறும் முறை போன்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். கல்வி சம்பந்தமான முக்கிய தகவல்கள், வெளியீடுகளும் இங்கு பார்க்கலாம். கல்வி கற்கும் அனைத்து பிரிவினரும் தெரிந்து கொண்டு, பயன்பெற வேண்டிய இணையதளம்.
இணையதள முகவரி: www.educationsupport.nic.in
அன்புடன்,மு.சாதிக்.
Posted by Abdul Malik at 10:51 am 0 comments
17 Apr 2008
லஞ்சம் இல்லாம காரியம் சாதிக்கனுமா? இவரைப் போய் பாருங்க!
இவர் பேரு Mr. RTI. இவருக்கு வயசு 3 தான். ஆனா பவர் ரொம்ப அதிகம்! இவர் எப்பிடி உங்களுக்கு உதவி பண்ணுவாரு?
உதாரணத்துக்கு, நீங்க உங்க புது வீட்டுக்கு மின்சார இணைப்பு வாங்கனும். பொறுப்பான குடிமகனா, விண்ணப்பம் எல்லாம் நிரப்பி, வட்டார மின் வாரிய அலுவலகத்துக்கு அனுப்பிச்சிட்டீங்க. சாதாரணமா, 10 நாள் எடுக்கவேண்டிய இந்த சேவை 20 நாளாச்சு, 40 நாளாச்சு ஒண்ணுத்தையும் காணோம். போன் பண்ணி பாக்கிறீங்க, நேரா போயி பாக்கிறீங்க ம்ம்ம்ஹூம்ம் ஒண்ணும் ஆகலே.
வெறுத்துப் போய் இருக்குற நேரத்துல, பக்கத்து தெரு பரமசிவம் வறாரு. 'என்னங்க, இதுக்குப் போய் வருத்தப் படுறீங்களே. ஜேயீயை பாத்து ஒரு ஆயிரம் ரூவா குடுத்தா டாண்ன்னு வரும் கரண்டு' ன்னு சொல்றாரு. நீங்க இந்த சமயத்துல தாராளமா நம்ம RTI யை அணுகலாம்!
நீங்க செய்யவேண்டியது எல்லாம், நேரா வட்டார மின்வாரிய அலுவலகத்துக்கு போங்க. அங்கே போய், 'Public Information Officer - PIO' ஐப் பாக்கனும்னு சொல்லுங்க. அவர்கிட்டே போய், ஒரு பத்து ரூவா கட்டுனா ஒரு படிவம் குடுப்பாரு. அத வாங்கி, உங்க முகவரி, நீங்க விண்ணப்பம் அனுப்புன நாள், அதற்கான கட்டணம் கட்டப்பட்ட ரசீது (நகல்) எல்லாம் சேத்து, சுருக்கமா, தெளிவா உங்கப் பிரச்சினையைப் பத்தி எழுதுங்க. 40 நாள் ஆச்சு, என் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்குன்னு கேள்வி கேட்டு படிவத்த முடிச்சு அத அவருகிட்டே குடுத்துட்டு வாங்க. வேற யாருக்கும் எதுவும் குடுக்கவேண்டாம்.
நேரா போக முடியலேன்னா பரவாயில்ல. ஒரு வெள்ளைத்தாளில் மேற்கண்டவற்றை எழுதி, 10 ரூபாய்க்கு போஸ்டல் ஆர்டரோ இல்ல டிமாண்ட் டிராப்டோ எடுத்து (Payable to PIO - Department Name) சாதாரண தபால் அல்லது பதிவுத் தபாலில் கூட அனுப்பலாம். சில தபால் நிலையங்களுக்கு போயி கூட படிவத்தைக் குடுக்கலாம். அவங்க, பணத்த வாங்கிகிட்டு படிவத்த ஏத்துகிட்டதுக்க்கான ஒரு ரசீது குடுப்பாங்க. எந்தெந்த தபால் நிலையங்களில் இதச் செய்யலாம்? இங்கே போய் பாருங்க. உங்க படிவம் ஏத்துக்கலைன்னா? கவலையே வேண்டாம். அதுக்கும் நம்ம RTI ஒரு வழி பண்ணியிருக்காரு. ஒவ்வொரு துறைக்கும் ஒரு தல இருக்கும். இந்தத் தலைங்களுக்கு, இந்த மாதிரி படிவத்த ஏத்துக்காத PIO - க்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை அபராதம் போட அதிகாரமிருக்கு. எண்ணி 30 நாட்கள்ல (35 நாட்கள் நீங்க Assistant PIO கிட்டே படிவத்த குடுத்துருந்தா. உயிர் போற அவசரம்னா, 48 மணி நேரத்துல உங்களுக்கு தகவல் குடுத்தாகனும்்!) உங்களுக்கு தகவல் எதுவும் வரலன்னா, நீங்க அப்பீல் பண்ணலாம். பொதுவா, PIO-க்களுக்கு மேலே உள்ளவர் அப்பீல பாக்குறவரா இருப்பாரு.
இது சும்மா ஒரு மாதிரிதான். நெறய விசயங்களுக்கு நீங்க இவர் உதவிய நாடலாம்! இவரப் பத்தி மேலும் தெரிஞ்சிக்கனுமா? கீழே உள்ள சுட்டிகள்ல போய் பாக்கலாம்:
http://www.rti.gov.in
http://rti.aidindia.org
http://www.righttoinformation.ஒர்க்
ஆக்கம் : தஞ்சாவூரான்
Posted by Abdul Malik at 11:05 am 1 comments
16 Apr 2008
உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம்.
அண்ணாச்சி ஒரு ரூபாய்க்கு மிளகு சீரகம் கொடுங்க! உள்ளங்கை வியர்வையுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கடைக்காரரிடம் நீட்டினாள் சிறுமி.
எந்த மஞ்சள் பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று... முழு மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.’’
கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது, சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது, கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.
வெளிநாடுகளில் அப்படியல்ல. லண்டனில் உள்ள ‘நுகர்வோர் அகிலம்’ என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக் கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து ‘மோசமான உணவுக்கான விருது! என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது... அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது... அதிலும் குறிப்பாக, ‘பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்’ என சிபாரிசு வேறு! கலப்படத்தால் ஏழைகள் மட்டும்தான் சாக வேண்டுமா? வசதிபடைத்தவர்களும் கொஞ்சம் பாதிக்கட்டும் என்ற தார்மீக நியாயமோ என்னவோ?’’ என்று அரசின் மெத்தனப் போக்கை மெலிதாகச் சாடுகிறார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மார்ட்டின்.
Posted by Abdul Malik at 4:29 pm 0 comments
மனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்
தலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா..?
ஆம் அவர்களைப் பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்கனவே மாமாப்பயலுவ என்ற ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். கண்ணுக்கு முன் நடக்கின்ற சம்பவங்களின் கொதிப்பில் மீண்டும் எழுதத் தூண்டுகின்றது இதுபோன்ற கட்டுரைகள். மனைவிக்கு துரோகம் செய்யும் தமிழர்கள் என்று எழுதலாமென இருந்தேன். ஏனென்றால் என்னைச் சுற்றி எனக்குத் தெரிந்து மனைவிக்கு துரோகம் செய்யும் கண்ணில் பட்ட தமிழர்களைப் பற்றி மட்டும்தான் எழுதப்போகின்றேன். சரி தமிழனை மட்டும் குறிப்பிட்டு கூறியது போல ஆகிவிடுமே.. அப்புறம் கருத்துச் சுதந்திரப் பிரச்சனைகள் வந்திடுமோ என்று பயந்துதான் தலைப்பு மட்டுமாவது மாறியிருக்கட்டுமே என்று மாற்றியிருக்கின்றேன்.
அப்படியென்ன துரோகம் என்கிறீர்களா..? வேற என்ன விபச்சாரம்தாங்க.. தமிழன் கடல் தாண்டி வணிகம் செய்தான் என்ற பெருமைகளை சீர்குலைப்பதற்காகவே இவர்கள் கடல் தாண்டி விபச்சாரம் செய்கிறார்கள். நான் ஒரு ஹைக்கூவில் கூட குறிப்பிட்டிருக்கின்றேன்:
துபாய்பகலில் கட்டிடக்கலை அழகு
இரவில் கட்டிடக் கீழே அழுக்கு
பெரும்பாலும் இங்கே மனைவியோடு இருக்கும் கணவன்களும் - இறைபக்தியோடு இருக்கும் பேச்சுலர்களும் தப்பித்துக்கொள்கிறார்கள். மாட்டிக்கொள்வது எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களும் - எது நடந்தாலும் கேட்பதற்கு எவனுன்டு என்ற திமிரில் திரிபவர்களும்தான். சிலர் சம்பாதிக்கின்ற பணத்தை வீட்டிற்கு அலுப்பாமல் தானே வைத்து புழங்கி அவற்றை செலவழிக்க வழிதெரியாமல் கடைவீதியில் சுற்றுகின்றவளிடமும் -பாரில் பரதம் ஆடுபவளிடமும் கொடுத்து வீணாக்குகின்றனர்.
எனது நிறுவனத்தில் பணிபுரிகின்ற ஒரு கூலித்தொழிலாளி இராமநாதபுரத்தைச் சார்ந்த செல்வம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நபர் இங்கே நர்சாக பணிபுரியும் ஒரு மலையாளிப் பெண்ணோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தார். நான் அவரிடம் ஒரு நேர்முகத் தேர்வே நடத்தியிருக்கின்றேன்.
எப்படி ஆரம்பிச்சது இது..? ஒரு தடவை என்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக செல்லும்போது இரத்தம் சோதனை செய்கிற பணியில் உள்ள அந்தப்பெண் பழக்கமானாள்..
பின் நான் அடிக்கடி அங்கு செல்ல ஆரம்பிக்க அப்படியே ஆரம்பிச்சுது. (அவள் இரத்தம் எடுத்திரக்கின்றாள் இவர் இதயம் கொடுத்துவிட்டார்)
சரி அந்தப்பெண்ணுக்கு இங்கே ஆதரவுன்னு யாரும் இல்லையா..?
இல்லை.. அந்தப் பெண்ணுக்கு கல்யாணமாகி விவாகரத்து ஆகிடுச்சு.. இங்க தனியாத்தான் இருக்கா..
சரி அந்தப்பொண்ணு உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு சொல்லலையா? சில சமயம் சொல்லுவா.. ஆனா நான் தான் எப்படியாவது சமாளிச்சுருவேன் உங்களுக்கு கல்யாணம் ஆனதாவது தெரியுமா..?
ம் தெரியும் நான் அவகிட்ட சொல்லிட்டேன்.. ( என்னடா இழவாப் போச்சு.. தெரிஞ்சும் இவர் மேல ஆசைப்பட்டாளா.. அப்படியென்றால் இருவருக்குமே காமம் மட்டுமே அடிப்படை இது காதலல்ல)
ஊர்ல மனைவி குழந்தைங்க எல்லாம் இருக்காங்க.. அவங்களுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..? ஒருதடவை எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் எங்க வீட்டுக்கு போன்செய்து சொல்லிவிட உடனே அவ எனக்கு போன் பண்ணி ஓ ன்னு அழ ஆரம்பிச்சிட்டா.. என்ன செய்ய அதெல்லாம் ஒண்ணுமில்லைடி சத்தியம் அடிச்சி நம்ப வச்சிட்டேன்..( நீ சத்தியம் அடித்ததில் அவளுக்கு அழுகை நின்றது. ஆனால் உன் ஆண்மையல்லா அழ ஆரம்பித்துவிட்டது ) அவர் பெருமையாய் சொல்ல எனக்கு கடுப்பாய் இருந்தது.எப்படி சமாளிக்கிறீங்க.. வீட்டுக்கு பணம் அனுப்பணும்.. இங்க வாடகை - அவளுக்கு செலவு..? ஒரு மாசம் அவ வாடகை கொடுப்பா.. இன்னொரு மாசம் நான் வாடகை கொடுப்பேன் ( அட இதுதான் லைப் பார்டனர்ரு சொல்றாங்களோ..) சரி..ஏன் இது தப்புன்னு தெரியலையா உங்களுக்கு..? அது மாதிரி உங்க மனைவியைப் பற்றி நீங்க தப்பா கேள்விப்பட்டீங்கன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்..? என்ன செய்ய இப்ப விட்டுட்டேன்.. இப்ப அதெல்லாம் இல்ல.. என்று திக்கி திணறி பதில் சொல்லி சமாளித்தார்.
அதிகமாக நோண்டினால் பிரச்சனை என்று நானும் அதற்கு மேல் கேட்காமல் விட்டுவிட்டேன். பாருங்களேன் இந்த செல்வம் ஊரில் மனைவி குழந்தைகள் என்று அழகான குடும்பத்தை வைத்துக்கொண்டு இங்கே இன்னொருத்தியை வைத்திருக்கின்றார். இவருடைய உணர்ச்சிகள்தானே அங்கே அவருடைய மனைவிக்கும் இருக்கும். இது ஆண்மையின் வரம்பு மீறல் இல்லையா..? ஊரில் இவருடைய மனைவியைப் பற்றி யாராவது தவறாய் இவரிடம் சொல்லிவிட்டால் எந்த அளவிற்கு துடித்துப்போவார்..? தன் மனைவி தனக்கு மட்டும்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் எல்லா கணவன்களைப் போலவே தன் கணவன் தனக்கும் மட்டும்தான் கணவனாக இருக்கவேண்டும் என்ற அவளது ஆசையில் மண் போடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பது?
எனது ப்ளாட்டிற்கு அருகே வசிக்கும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் இங்கே ஜெபல் அலி என்னுமிடத்தில் பணிபுரிகிறார். அவரது ஊரைச் சேர்ந்தவர்களுக்கு அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். இங்கேயே ஏதோ வியாபாரமும் செய்து கொண்டிருக்கிறார். எப்பொழுதும் அவரை நேருக்கு நேர் சந்திக்கும் பொழுதும் ஒரு அமைதியான சிரிப்பை உதிர்த்து விட்டு செல்வார். இவரா இப்படிச் செய்தார் என்பதை நினைக்கும் பொழுது நம்ப முடியவில்லை.
அவரை ஒருநாள் ஒரு பெண்ணுடன் பார்த்துவிட்டு அதிர்ந்து போய்விட்டேன். பின் அவரது ப்ளாட்டில் வசிக்கும் எனது நண்பனிடம் கேட்டேன். அவனும் சந்தேகத்தோடு கூறினான். ஒருநாள் அவர் மொபைல் போனை மறந்து வச்சிட்டு போய்ட்டாருடா.. அப்போ ஒரு போன் வந்திச்சு.. நான் எடுத்தேன் க்யு நகி ஆயா என்று இந்தியில் ஒரு பொண்ணு பேசுறா.. நான் உடனே பக்கத்தில் இருந்த அவரது தம்பியிடம் கொடுத்துவிட்டேன்.. அவர் துருவி துருவி கேட்க அந்தப்பெண் போனை வைத்துவிட்டாள்.. அதிலிருந்து அவரது தம்பிக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தேகம்டா.. என்று என்னிடம் கூற ஆச்சர்யப்பட்டுப் போனேன் நான். பின்னர்தான் அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது பல தகவல்கள் கிடைத்தது
அவர் தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் சுரா என்ற மலையாளி பெண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று. பின்னர் மதுரையில் இருந்து அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை விசிட் விசாவில் இங்கு அழைத்து வந்து ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டு விட்டு மெல்ல மெல்ல தனது விஷ நாக்குகளை நீட்ட ஆரம்பித்திருக்கிறார். அந்தப் பெண்ணிற்கு வயது 24 க்குள் இருக்கும். இவருக்கோ 40 வயது. அந்தப்பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக கூற அந்தப்பெண்ணோ நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன். ஆனால் உங்கள் முதல் மனைவியிடமிருந்து கையெழுத்து வாங்கி வரவேண்டும் என்று பிடிவாதமாய்க் கூற இவர் முதல் மனைவியின் சம்மதம் பெற முயன்று கடைசியில் தோற்றுப் போனார்.
கடைசியில் அவரது தம்பிக்கு விசயம் எல்லாம் தெரிந்து ஊருக்கும் தெரிந்து விட இறுதியில் வேறு வழியில்லாமல் இப்பொழுது மனைவியை அழைத்து வந்திருக்கிறார். அவர் செய்தது எவ்வளவு பெரிய துரோகம்..? கடைசிவரை எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கு எடுத்துக் கொள்வேன் என்ற ஒப்பந்தத்தில் திருமணம் முடித்த பிறகு இவன் மட்டும் அந்த ஒப்பந்தத்தை மீறுவது எந்த வகையில் நியாயம்?
ஒருநாள் நண்பர்களுடன் துபாய் டெய்ரா டாக்ஸி நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது ஒரு தமிழர் அவரது மனைவியோடு தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அவரது வாகனத்தை வைத்து அவர் சவுதி மற்றும் மற்ற வளைகுடா நாடுகளில் புகழ்பெற்ற ஒரு கொரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் என தெரிந்து கொண்டேன். அவர் தன் மனைவியோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததில் என்ன தவறு என்கிறீர்களா..? ஒரு கையால் போனை காதில் வைத்திருக்கிறார் இன்னொரு கையால் பெண்ணின் கழுத்தைச் சுற்றியிருக்கிறார். அந்தப்பெண் முகத்தை வைத்து அவள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவள் என தெரிய வந்தது. இவன் ஊருக்குப் போகும்போது மட்டும் ஏதோ கற்புக்கரசனாக – இறை பக்தியாளனாக நடிக்க ஆரம்பிக்கின்றான். எப்போதும் சட்டையில் வாசனைத் திரவியம் - கைகளில் கோல்ட் வாட்ச் – விலை உயர்ந்த சட்டை - என்று சமூகத்தை ஏமாற்றுகிறார்கள். ரொம்ப சுத்தம் பார்ப்பார்கள் - டீசண்டான ஆட்கள் போல காட்டிக் கொள்வார்கள். ஆனால் இங்கே இவன் சாக்கடையில் புரண்ட கதை யாருக்குத் தெரியும்..? விடுமுறையில் ஊரில் தங்கியிருக்கும் இரண்டு மாதமும் மனைவிக்கு விருப்பப்பட்டதை வாங்கிக் கொடுப்பது- தங்கம் - சேலை என்று போன்ற போலியான கவர்ச்சிகளில் மனைவிகள் எதையும் கேட்பதில்லை. கணவன் துபாய் போய் வந்திருக்கிறான் என்றால் சமூகத்தில் அந்த மனைவிக்கும் ஒரு மரியாதை வர ஆரம்பிக்கிறது அந்த தற்காலிக மரியாதையை அவள் எதிர்பார்க்கின்றாள். ஆனால் கடல் கடந்து சென்றவன் கற்பிழந்து நிற்கிறான் என்று தெரியுமா அவளுக்கு..?
ஆகவே அப்பாவி மனைவிமார்களே உங்கள் கணவரின் நடவடிக்கைகளைப் பற்றி உங்கள் சுற்றுபுரத்தில் இருந்து துபாய்க்கு செல்லுபவர்களிடமும் துபாயிலிருந்து வருபவர்களிடமும் அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருங்கள். இவர்களைப்பற்றிய எனது கோபங்களை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எதனால் இப்படிச் செய்கிறார்கள்..? அவர்களுக்கு காமம்தான் அடிப்படையா..? அப்படியென்றால் ஏன் திருமணம் செய்து கொள்கின்றார்கள்? வாழ்நாள் முழுவதையும் விலை மாதுக்களுடனையே கழித்து விடவேண்டியதுதானே..? உடல் உறவுகளையும் தாண்டி மனைவியின் உணர்வுளைச் சரியாகப் புரிந்து கொள்பவன் கண்டிப்பாய் மனைவிக்கு துரோகம் செய்யமாட்டான்.
சென்ற வருடம் துபாய் நைஃப் என்னுமிடத்தில் எனது பகுதியைச் சார்ந்த ஒரு மதிப்புமிக்க குடும்பத்தை சார்ந்த சா.... என்ற இளைஞன் ஒரு ரஷ்யப் பெண்ணிடம் விலை பேசிக் கொண்டிருந்தான். மாடுகள் விலைபேசுதலில் கைகள் மூடப்படுகிறது இந்தமனித விலைபேசுதலில் கற்புகள் மூடப்படுகிறதா..? அவள் உடலுக்கு விலை பேசினானா இல்லை இவனுடைய மனைவி இவன் மீது வைத்த நம்பிக்கையை விலை பேசிவிட்டானா தெரியவில்லை? நான் அந்த இளைஞனை கவனித்து விட அவனும் என்னை கவனித்துவிட்டு பக்கத்தில் உள்ள ஒரு பில்டிங்கில் அருகே உள்ள சந்தில் ஒளிந்து கொண்டான். நானும் அவனைக் கவனிக்காமல் செல்வதைப்போல சென்று அந்த ஓரத்தில் உள்ள கேஎப்சி அருகே மறைந்து நின்றேன். அவனோ நான் சென்று விட்டேனா என்று உற்று பார்த்து கவனித்துவிட்டு பின் விலை பேசிக் கொண்டிருந்த அந்த ரஷ்யப் பெண்ணை அழைத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றான் உடனே அவனுக்கு தெரிந்த இன்னொரு நண்பரிடம் விசயத்தை கூறி அவனுடைய வீட்டிற்கு கண்டிப்பாய் இதனை தெரியப்படுத்துங்கள் அல்லது அறிவுரை செய்யுங்கள் என்று சொன்னேன். அந்த நண்பர் தெரியப் படுத்தினாரா அல்லது அவனை தனியாக அழைத்து அறிவுரை சொன்னாரா எனத் தெரியவில்லை.
இதுபோன்று மனைவிக்கு துரோகம் செய்யும் பச்சைத் தமிழர்கள் ஏராளம் இங்கு உண்டு. எவளோ ஒருத்தி விதவையாகட்டும் பரவாயில்லை மனைவிக்கு துரோகம் செய்பவனுக்கு மரணதண்டனை கொடுத்தால்தான் என்ன?
ஆக்கம் - ரசிகவ் ஞானியார்
Posted by Abdul Malik at 3:50 pm 1 comments