1 Dec 2008

வெப்கேமிரா வைத்திருக்கின்றீர்களா?


வெப்கேமிரா வசதியுடன் இணையத் தொடர்பு உள்ள கணிப்பொறி உங்களிடம் இருக்கின்றதா?
எச்சரிக்கையாக இருங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தோ நீங்கள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.
தன்னுடைய அறையில் தான் உடைமாற்றிய காட்சி எந்த ஆபாச இணையதளத்திலோ விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கேட்ட அவள் அதிர்ந்துதான் போனாள்.
யாரும் அத்து மீறி அந்த அறைக்குள் நுழையவில்லை?
எவருக்கும் மின்னஞ்சல் வழியாகவும், எந்த புகைப்படமோ வீடியோக் காட்சிகளோ அனுப்பவில்லை?
பின் தன்னுடைய படுக்கை அறைக்காட்சியை படம்பிடித்தது யார்? அது எப்படி சாத்தியமாயிற்று?
புனேயில் உள்ள Asian School of Cyber Law வில் புகார் அளித்தாள். அவர்கள் சொன்ன காரணம் அவளை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆம் அவளது அறையில் உள்ள வெப்கேமிராதான் அவளை படம்பிடித்திருக்கின்றது.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு ஒரு ஓரத்தில் அப்பாவியாய் அமர்ந்திருந்திருக்கிறது அந்த வெப்கேமிரா. ஆம் நம்புங்கள் அவள் அறையில் உடைமாற்றுவதையும் அவளின் அந்தரங்கங்களையும் படம்பிடித்தது அந்த வெப்கேமிராதான்.
மீடியாத்துறையில் பணிபுரிகின்ற அந்தப் பெண்ணின் பெயர் அனி ஜோலகர் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனது ப்ராஜக்ட்டுக்காக சில படங்களை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்திருக்கின்றாள். ஆனால் அவளுக்குத் தெரியாமலையே கணிப்பொறியில் ட்ரோஜன் என்கிற வைரஸ் / புரோகிராம் வந்து அமர்ந்து கொண்டது அந்த ட்ரோஜன் என்கிற புரொகிராமின் மூலம் அவளது கணிப்பொறியில் இணைக்கப்பட்டுள்ள வெப்கேமிராவை ரிமொட் முறையில் இயக்கி அவளது அந்தரங்களை படம்பிடித்து அவற்றை ஆபாச இணையதளத்திற்கு விற்றுக் கொண்டிருந்திருக்கின்றான் எவனோ ஒருவன்.
உலகத்தின் இன்னொரு மூலையில் தனது நிர்வாணப்படங்களும் அந்தரங்கங்களும் திரைப்படமாக்கப்படுகின்றதை அறிந்து அதிர்ச்சியானாள் அனி ஜோலகர். இணையத் தொடர்புடன் உள்ள அந்த கணிப்பொறியின் வெப்கேமிராவை பெரும்பாலும் அவள் ஆன் செய்தே வைத்திருக்கின்றாள்.
இணையத்தில் உலவிவிட்டு அணைக்காமல் அப்படியே இருந்துவிட்டதுதான் அவள் செய்த தவறு. கணிப்பொறி இடப்பெயர்ச்சி இல்லாமல்தானே அமர்ந்திருக்கின்றது அதுவென்ன செய்திட முடியும் என்று நீங்கள் சாதாரணமாய் இருந்துவிடமுடியாது. புரிந்து கொள்ளுங்கள் அது நம்மை நோட்டமிட்டுக்கொண்டிருக்கின்றது வெப்கேமிரா மூலம்.
கொஞ்ச நேரம் கழித்து உபயோகிக்கத்தானே போகின்றோம் அதற்குள் எதற்கு இணையத்தொடர்பை துண்டிக்கவேண்டும் என்று அலட்சியப்படுத்தினால் நம் அந்தரங்கங்கள் உலகத்தின் பார்வைக்கு வந்துவிடும்.
'தங்களது அறையினில் வெப்கேமிராவை வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாய் இருக்கவேண்டும். அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத் தொடர்பு அவசியம் இல்லையெனில் அதன் இணைப்பையும் வெப்கேமிராவின் இணைப்பையும் துண்டித்துவிடுங்கள். இந்த விழிப்புணர்வினை தங்களுக்கு தெரிந்தவரையிலும் மக்களுக்கு தெரியப்படுத்தினால்தான் அவர்கள் விழிப்புணர்வு அடைவார்கள்
தேவையில்லாமல் வெப்கேமிராவை ஆன் செய்து வைத்திருப்பது அல்லது அதன் தேவைகள் இல்லாவிட்டாலும் அதனை கணிப்பொறியுடன் இணைத்து வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் நிறையபேர் சமூக சூழலுக்குப் பயந்து அதனை புகார் தெரிவிக்காமல் இருப்பது மிகவும் பரிதாபத்திற்குரியது.
'- விஜய் முகி – கணிணித்துறை வல்லுனர்
இணையத்தில் இருந்து படங்களோ அல்லது வேறு சில பைல்களோ டவுண்லோடு செய்யும்பொழுது ட்ரேஜன் ஹார்ஸ் (Trojan Horse ) என்கிற வைரஸ் அல்லது வேறு ஏதேனும் வைரஸ் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்குத் தேவையான ஆன்டி வைரஸ் புரொகிராம்களை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள். அது மட்டுமல்ல தேவையில்லாத அல்லது கவர்ச்சியான விளம்பரங்களுடன் வருகின்ற மின்னஞ்சல்களையும் தவிர்த்து விடுங்கள்.
ஆகவே நண்பர்களே கணிப்பொறி உபயோகிக்காத நேரங்களில் அதனை அணைத்துவிடுங்கள். தங்களது அந்தரங்க விசயங்களின் பொழுது இணையத்தொடர்பும் வெப்கேமிரா தொடர்பும் துண்டிக்கப்பட்டிருகின்றதா என்று தயவுசெய்து ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். இணையத்தில் உலவும்பொழுது மட்டும் இணையத்தொடர்பினை இணைத்துவிட்டு மற்றநேரங்களில் அந்த தொடர்பினை கணிப்பொறியிலிருந்து எடுத்துவிடுங்கள்.
அதுபோலவே வெப்கேமிராவும். யாருடனும் அவசியம் என்றால் மட்டும் அதனை இணைத்துக் கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் அவற்றை கணிப்பொறியுடன் இணைக்காமலேயே வைத்திருங்கள். இல்லையென்றால் உங்களுக்குத் தெரியாமலேயே நீங்கள் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். அந்த நபர் உங்களுக்கு பக்கத்து அறையில் அல்லது பக்கத்து கண்டத்தில் கூட இருக்கலாம்.
- ரசிகவ் ஞானியார்

16 Nov 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல் அதிகாரி.


சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலைத் தடுக்கத் தவறிய காவல் துறை!
ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
என் நெஞ்சு எரிகிறது! அறிஞர் அண்ணா சொன்னது இது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடுமை அது.
தஞ்சை தரணியில் கீழ் வெண்மணி கிராமத்தில் கூடுதலாக கூலி கேட்டுப் போராடிய ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, அவர்கள் குடிசை வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.
அந்தச் செய்தி கேட்டு முகம் கருத்து, வெட்கத்தால் நாணி, தலை குனிந்த முதலமைச்சர் அண்ணா கீழ் வெண்மணி நோக்கி புறப்படத் தயாராக இருந்தபோது அவரிடம் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் அந்நிகழ்வு குறித்து கருத்துக் கேட்டார்.
வெறுமையுடன் அவரைப் பார்த்த அண்ணா, "எனது ஆட்சியிலா இது நடைபெறுகிறது? என் நெஞ்சு எரிகிறது" என்று கூறினார் என்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியதைக் கேட்டுள்ளோம்.
அந்த நிலைதான் நமது நாட்டு மக்கள் பலருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் - அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போலவே - பதறியிருக்கும்.
படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.
ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.
பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.
கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.
இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.
தலைவர்களைக் கேவலப்படுத்திய மாணவர்கள்! நடந்த வன்முறை நம்மை பதறச் செய்தது என்றால், இந்த நிகழ்வுகளுக்கான காரணம் நம்மை வெட்கித் தலைகுனியச் செய்வதாக உள்ளது.
இக்கல்லூரி மாணவர்கள் சிலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை கொண்டாடுவதற்கு அச்சடித்த அழைப்பிதழில், தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் உள்ள 'டாக்டர் அம்பேத்கர்' பெயரை தவிர்த்திருத்தனராம்.
அவரது பெயரை ஏன் தவிர்த்தீர்கள் என்று மற்ற சில மாணவர்கள் கேட்க, சாதி ரீதியாக அவர்களுக்குள் புகைச்சல் ஏற்ப்பட்டதாம். அதுவே இந்த அளவிற்கு ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு வித்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் மோதல் நாம் அறியாததல்ல. கிராமத்தில் வாழும் மக்களுக்கு படிப்பறிவிருக்காது, சிந்திக்கவும் தெரியாது, சிந்திக்க நேரமும் இருக்காது.
ஆனால் மாணவர்களுக்கு? அதுவும் சட்டம் படிக்கவந்த மாணவர்களுக்கு தெரியாதா இவ்விரு தலைவர்களும் யாரென்று? இதுதான் வருத்தமளிக்கும் ஆச்சரியம்.
நமது நாட்டின் சட்ட மேதை, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர், இன்றளவும் இந்த அளவிற்கு நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்று, கருத்துரிமை சுதந்திரம் பெற்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறோம் என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்பது கூட புரியாதா? தெரியாதா?
தான் சார்ந்த சமூகம், உடலுழைப்பின் மூலம் சமூக வாழ்விற்கு தனது பங்களிப்பை முழுமையாக செலுத்திய பின்பும் உரிமை மறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படுவது ஏன் என்று குரல் எழுப்பி, அதற்காக தன் வாழ் நாள் முழுவதும் போராடி, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றத் தலைவர்களுக்கும் புரியவைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தை அவர்களும் நுகரச் செய்ய வழி செய்தவரல்லவா அம்பேத்கர்? அவருடைய பெயரை தவிர்ப்பதற்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆழமான கருத்தாடல்களை படித்தவர்களா இவர்கள்? அப்படித் தெரியவில்லை.
சாதியத்தின் பிடி அந்த அளவி்ற்கு இவர்களுடைய சிந்தனையை கட்டிப்போட்டிருக்கிறது என்றால், இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி நாளை நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெற்றுத் தருவார்கள்? அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் சட்டம் ஏது? சட்டத்தின் ஆட்சி ஏது? இந்த இரண்டு தலைவர்களும் ஏதோ சாதியத்திற்காகப் போராடி உயிரைத் துறந்தவர்கள் போலல்வா இருக்கிறது இவர்களின் வெறியும் செயலும்.
சரி அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.
விலகுமா இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?

21 Sept 2008

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆணையர் எச்சரிக்கை

போலி இ-மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம்:

“போலி இ-மெயில்களை நம்பி, வெளிநாட்டு வங்கிகளில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்’ என்று கோவை மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி எச்சரித்துள்ளார்.

ஆப்பிரிக்கா நாடுகளில் பல போலி லாட்டரி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நாட்டு மக்களுக்கு லட்சக்கணக்கில் இ-மெயில்களை அனுப்புகின்றனர். மெயிலில் “ஆன்லைன் லாட்டரி மூலம் பல கோடி ரூபாய் பணம் பரிசாக உங்களுக்கு கிடைத்துள்ளது. இப் பரிசை பெற நீங்கள் குறிப்பிட்ட தொகையை வெளிநாட்டு வங்கியில் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்படும்.

உழைக்காமலே கோடி கணக்கில் பணம் கிடைத்தும் என்ற பேராசையில், போலி இ-மெயில்களை நம்பும் சிலர் வங்கியில் பணத்தைச் செலுத்துகின்றனர். இதன்பின், மீண்டும் பணம் செலுத்தும்படி மற்றொரு இ-மெயில் வரும்.

2-வது முறையும் பணத்தைச் செலுத்திய பின், போலி நிறுவனத்திடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்காது.

இத்தகைய நூதன மோசடியில் சிக்கி பணம் இழந்த ஒரு சிலரே போலீஸில் புகார் அளிக்கின்றனர். போலி இ-மெயிலால் சில ஆயிரங்களை இழந்தவர்கள் போலீஸில் புகார் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸர் கூறியது:

சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்போர் பலர் போலி இ-மெயில்களை நம்பி பணத்தை இழந்துள்ளனர். ஆனால் மிக சிலரே போலீஸில் புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இந்த மோசடியில் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர். இணையதள வசதியைப் பயன்படுத்தி மோசடி செய்யும் வெளிநாட்டு குற்றவாளிகளைப் பிடிப்பதில் ஏராளமான நடைமுறை சிக்கல் உள்ளன என்றனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கிக் கொடுப்பதாகக் கூறியும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபடுகின்றன. “சொந்த விவரங்களையும் (பயோடேட்டா), பணத்தையும் வங்கியில் செலுத்தினால், உங்களுக்கு வேலை ரெடி’ என்ற ரீதியிலான இ-மெயில்களை இந் நிறுவனங்கள் அனுப்புகின்றன. இவற்றை நம்பிக் கூட ஏமாந்தவர்கள் உண்டு.

இப் பிரச்னை குறித்து மாநகரக் காவல் ஆணையர் கே.சி.மஹாலி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மோசடி இ-மெயில்களுக்கு பதில் அனுப்பவோ, வங்கிக் கணக்கில் பணம் செலுத்தவதோ கூடாது. அறிமுகமில்லாதவர்களிடம் வங்கிக் கணக்கு எண், ரகசிய பாஸ்வேர்டு போன்ற விவரங்களை அளிக்க வேண்டாம். லாட்டரி பரிசுகளை வென்றுள்ளதாக கூரியர், இ-மெயில்களில் மூலம் வரும் தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்..

உப்பு, ரொம்பத் தப்பு

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். ஆனால் அதிக அளவில் உப்பைச் சாப்பிட்டால் உடலே குப்பையாகி விடும் என எச்சரிக்கிறது புதிய மருத்துவ அறிக்கை ஒன்று.

அதாவது, நாம் உட்கொள்ளும் உப்பின் அளவுக்கும் நமக்கு வரும் உயர் குருதி அழுத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பது இந்த ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வு முடிவு மருத்துவ உலகிற்கு மிக முக்கியமானது என்று கருத்து தெரிவிக்கின்றனர் உலகெங்குமுள்ள பல்வேறு மருத்துவர்கள்.

உயர் குருதி அழுத்தத்துக்கு நாம் உட்கொள்ளும் உப்பு காரணமாகிவிடக் கூடும் எனும் நம்பிக்கை ஏற்கனவே மருத்துவ உலகில் நிலவி வந்தாலும், இந்த விரிவான ஆய்வு மீண்டும் ஒருமுறை அந்த கருத்தை ஆதாரபூர்வமாக வலுப்படுத்தியிருக்கிறது.

உயர் குருதி அழுத்தமானது உடலில் மாரடைப்பு உட்பட பல்வேறு ஆபத்துகளைத் தரும் என்பது குறிப்பிடத் தக்கது.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதை இனிமேல் மாற்றி எழுதுதல் நலம்.

- அலசல்

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?

பொதுவாக எல்லோருக்கும் ஒருவித எண்ணம் உண்டு. "எப்போதும் கடுமையாக உழைக்கிறோம். புதிதாக யோசிக்கிறோம். மற்றவர்கள் இதை புரிந்து கொள்ள மறுக்கிறார்களே! ஒரு பாராட்டுகூட கிடையாதா...? என்று அங்கலாய்ப்பார்கள்.

பலரிடம் உள்ள இந்த எண்ணம் இது உண்மைதானா என்பது பற்றி எஸ்.பி.எம். பவுண்டேசன் என்ற அமைப்பு ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அர்த்த சாஸ்திரத்தில் சில தகவல்களை எடுத்து கூறி இதன்படி செயல்பட்டால் வாழ்வில் வெற்றிபெற தகுந்த ஆள் யார்? என்பதை முடிவு செய்யலாம் என்கிறது அந்த நிறுவனம்.

இதற்காக மூன்று முக்கிய விஷயங்களை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1) எடுத்த காரியத்தை முடிக்கிறீர்களா?

2) அதற்கு தேவையான விடை கிடைத்ததா?

3) அந்த பணியை செய்ததில் திருப்தி அடைகிறீர்களா?

இந்த மூன்றையும் கணித்து உங்கள் தினசரி பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறது அர்த்த சாஸ்திரம்.

இது தவிர 4 முக்கிய குறிக்கோள்களையும் அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.

1) உங்களது இலக்கு, லட்சியம், கொள்கையை சரியாக குறி வைத்து முடிவு செய்யுங்கள்.

2) ஒரு செயலை ஏன் செய்ய வேண்டும்? அதனால் என்ன பயன் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

3) ஒரு காரியத்தை எப்படி செய்வது என்ற திட்டமிடுதல் மிகவும் அவசியம். இதில் பலருடைய ஆலோசனைகள் அறிவுரைகள் தேவைப்படலாம்.

இவற்றை வரைபடம்போல மனதில் வைத்து செயல்படவேண்டும். இதற்கு தகுதியான ஆலோசனைகளை கேட்டு அறிவது அவசியம்.

4) பயணத்தை தொடங்கியதும் வெற்றி, தோல்வி வரலாம். எனவே விடாமுயற்சி முக்கியம். லட்சியத்தை பார்த்து வேகமாக செயல்படவேண்டும்.
இதில் பலர் தவறான பாதைக்கு செல்ல நேரிடலாம். எனவே பாதையை சரியானதாக தேர்ந்தெடுப்பது மிக அவசியம்.

அர்த்த சாஸ்திரத்தின் இந்த கருத்துகளை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறுவது சுலபம்.

16 Sept 2008

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

சைனா மொபைல் போன்களை உபயோகம் செய்யலாமா?

தற்போது சைனா மொபைல்போன்கள் வந்து மார்கெட்களில் சக்கைப்போடு போட்டுக் கொண்டுள்ளன.

அவற்றில் இரண்டு சிம்கார்டுகள் (தமிழில் என்ன வார்த்தை?) போடும் வசதி, மேற்கொண்டு இலவச பேட்டரி ஒன்று, ஆடியோ, வீடியோ, கேமெரா, SD கார்டு மற்றும் பிராண்டடு போன்களில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது.

மேலும் புளூ டூத்திலிருந்து இணைய வசதி வீடியோ சாட் வரை மேலும் டீவி பார்க்கும் வசதி உள்பட உள்ளது என்றும் விரைவில் பாத்ரூம் மற்றும் டாய்லேட் வசதிகள் கூட சைனா போன்களில் வந்துவிடும் என்கிறார்கள்.

ஆனால் ஒரு சாரார் மேற்படி சைனா போன்கள் ஒரு தடவை கீழே போட்டால் சுக்குநூறாக உடைந்துவிடும் என்கிறார்கள். பேட்டரி சீக்கிரம் போய்விடும் அதற்குத்தான் இன்னொரு பேட்டரியும் தருகிறார்கள் எனக்கூறுகின்றனர்.

மேலும் ஒரு சிலர் அந்த போன்களில் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதனால் காதில் உள்ள ஜவ்வு அறையில் உள்ள காது கேட்பதற்கு மிகவும் தேவையான மெல்லிய உணர்வு இழைகளை எரித்துவிடும் என்றும் அதனால் காது கேட்கும் திறன் முற்றிலும் இழந்து விடுவார்கள் என்றும் அதற்கு மருத்துவத்தில் சிகைச்சையே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இது எந்த அளவு உண்மை என்றும் தெரியவில்லை...
ஒரு வேளை சைனாக்காரர்கள் இந்தியா நாடு வல்லரசு ஆக முடியாமல் தடுக்க தனது போன்களை குறைந்த விலையில் விற்று இந்தியர்களை செவிடர்களாக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆனால் இதற்காக விற்பனை ஒன்றும் குறைந்ததாக தெரியவில்லை. விற்பனை அதிகரித்துக்கொண்டுதான் உள்ளது. அனைத்துவசதி கொண்ட கம்பெனி போன் ஒன்று வாங்கும் விலையில் இப்போன்களை இரண்டுக்கும் மேற்பட்ட போன்களை வாங்கலாம் எனக் கூறுகின்றனர்.

-கூடுதுறை

10 Sept 2008

நட்பு - நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள்

நட்பு - நண்பர்கள் பற்றிய பொன்மொழிகள்

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

-வா‌ணிஸ்ரீ ‌சிவ‌க்குமா‌ர்

7 Sept 2008

காய்கறிகளில் என்ன பலன் இருக்கிறது ?

வாழைக்காய்

பித்தம் குறைக்கும், தலைச்சுற்று நீக்கும், பித்த வாந்தியைக் குறைக்கும், உடற்சூடு தணிக்கும், சூட்டு இருமல் தணிக்கும், உமிழ்நீர் சுரக்கும்.

முருங்கைக்காய்

சளியைப் போக்கும், ஆண்மை மிகுவிக்கும், ஊளைச்சதை நீக்கும், எலும்பு வலுவாகும், பல் ஆட்டத்தை நிறுத்தும், காயங்களைக் குணமாக்கும், சோகை தீர்க்கும், ஈறுகளுக்கு உறுதி அளிக்கும்.

காலி ஃபிளவர்

சூட்டைத் தணிக்கும், சளி குறைக்கும், உடல் வறட்சியைப் போக்கும், இருமல் குறைக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், இளைப்பு நீங்கும், மேனியை மினுமினுப்பாக்கும்.

தக்காளிப் பழம்

மேனியை மினுமினுப்பாக்கும், வறட்சியைப் போக்கும், தாகம் தணிக்கும், உமிழ்நீரைச் சுரக்க வைக்கும்.

முட்டைக்கோஸ்

உடல் வளரச் செய்யும், கண் பார்வை மிகும், தோல் அழகாகும், பற்கள் உறுதியாகும், நரம்புகள் பலமாகும், தொற்று நோய்களைத் தடுக்கும், கருவுற்ற பெண்களுக்கு நல்லது, எலும்புக்கு உறுதி ஏற்படுத்தும், முடி கொட்டாது.

வெங்காயம்

வாய் துர்நாற்றம் போக்கும், மலப்பிரச்னைகள் தீரும், உடம்பில் மினுமினுப்பு உண்டாக்கும், வறட்சி நீக்கும், வாதம், பித்தம், கபம் இவைகளைச் சமப்படுத்தும்.

பீட்ரூட்

இரத்தம் சுத்தமாகும், மலப்பிரச்னைகள் தீரும், சூடு தணிக்கும், முகம் அழகாகும், தோல்வறட்சி நீங்கும், இரத்த சோகை போக்கும், கை கால் சோர்வைப் போக்கும், உடம்பு நிறம் கூடும்.

பச்சைப் பட்டாணி

பசியைப் போக்கும், உடம்புக்கு சக்தி கொடுக்கும், குடல்புண்களை ஆற்றும், மூளைக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்கும். றீ

உங்கள் கண்களை பாதுகக்கா....

கண்ணுக்குக் கண்ணாக என்று சொன்னாலும் நடைமுறையில் நமது கண்களைப் பாதுகாப்பதில் நாம் போதிய அக்கறை கொள்வதில்லை. பார்வைக் குறைபாடு வந்த பிறகே கண்களைக் கவனிக்கிறோம். ஆனால் கண்களைப் பாதுகாக்க பல எளிமையான வழிகள் இருக்கின்றன.

அவற்றில் சில மீன் உணவு கண்களுக்கு மிகவும் நல்லது. அதில் உள்ள ஓமேகா3 கொழுப்புத் தன்மை கொண்ட அமிலங்கள் வறண்ட கண் குறைபாட்டை போக்க வல்லது. மீன் சாப்பிடாதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடலாம்.

நீச்சல் அடிக்கச் சென்றால் அதற்கான கண்ணாடி அணிந்து செல்லுங்கள். குளோரின் கண்களைப் பாதிக்காமல் தடுப்பதோடு மண் கரிசல்கள் பாதிப்பு ஏற்படுத்தாமலும் பாதுகாக்கும்.

காரில் ஏசி இருந்தாலும், அதிலிருந்து முகத்திற்கு நேராக குளிர் காற்று வரச் செய்வதைத் தவிருங்கள். அதற்குப் பதிலாக கால் பகுதியை நோக்கி காற்று வரட்டும். காரணம், குளிர் சாதன காற்று பஞ்சு போல. கண்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். வறண்ட கண்களிலும் பல வித பாதிப்பு உண்டாகலாம்.

சிவப்பு வெங்காயத்தை அதிகம் பயன்படுத்துங்கள். அதில் உள்ள குயர்சிடின் (quercetin) காட்ராக்டை வராமல் தடுக்க வல்லது.

எப்போது வெளியே சென்றாலும் குளிர் கண்ணாடி அணியலாம். இது பந்தாவிற்காக அல்ல. பாதுகாப்பிற்காக. குளிர் கண்ணாடி சூரிய வெப்பத்தில் இருந்து காப்பதோடு காற்றில் உள்ள வறண்ட தன்மையில் இருந்தும் காக்கிறது.

வள்ளிக்கிழங்கு சாப்பிடுங்கள். அதில் உள்ள வைட்டமின் `ஏ' இரவு நேர பார்வையை அதிகரிக்கச் செய்யும்.

மேக் அப் செய்து கொள்ளும் பெண்கள் இரவு படுக்கச் செல்லும் முன் மேக் அப்பை கலைத்து விட்டு முகத்தைக் கழுவி சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.

டவல்கள் மற்றும் கைக்குட்டை மூலம் கிருமிகள் தாக்கலாம் என்பதால் இயன்றவரை முகம் துடைக்க புதிய (அ) துவைத்த டவலை மட்டுமே பயன்படுத்தவும்.

கண்ணாடி அணிந்தால் மட்டும் போதாது. தொப்பியும் அணிவது சிறந்தது. அல்ட்ரா வயலெட் கதிர்கள் கண்ணுக்குள் ஊடுருவாமல் தொப்பிகாக்கிறது.

படிக்கும் போதோ, வேலை செய்யும் போதோ அரை மணிக்கு ஒரு முறை அதனை நிறுத்தி விட்டு, கண்ணுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் தொலைவில் உள்ள பொருளை 30 விநாடி பார்க்க வேண்டும்.

அடிக்கடி ரத்தப்பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாவிட்டால் பார்வையைப் பாதிக்கலாம்.

மல்லிகை மலர் வாசனைத் திரவியம் (அ) வென்னிலா மனத்தை முகர்ந்து பாருங்கள். இவை மூளையில் பீட்டா கதிர்களை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் கவனிப்புத்திறன் கூடும். விழிப்புணர்வும் அதிகரிக்கும்.

வாரத்தில் நான்கு முறையேனும் உடற்பயிற்சி செய்யுங்கள். குளுகோமா நோயாளிகள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் பாதிப்பு குறைவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

கீரைகள் அதிகம் சாப்பிடுங்கள்.அதே போல் உப்புத்தன்மை கொண்ட பண்டங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள்!

3 Sept 2008

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா - 3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். 40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள். இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன.

இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன. அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா - 3 எண்ணெய் ஒரே அளவில்தான் இருந்தது. எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா - 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

-சுதன்