24 Jul 2008

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்.....

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் அவர் கண்டுபிடித்த விண்டோசை சென்னை மக்கள் என்று அழைத்திருப்பார்கள். என்று பார்போம்

அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

windows = ஜன்னல்
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

- ரசிகவ் ஞானியார்

23 Jul 2008

சத்தான காய்கறின்னா… என்னென்ன தெரியுமா

காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். ஆனால், எல்லா காய்கறிகளும் பழங்களும் சத்தானவை என்று சொல்ல முடியாது.

நாற்பது வயதை கடந்தால் சிலவற்றை ஒதுக்கி விட வேண்டும் என்று நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால் அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவதில்லை.

முள்ளங்கி தழையும் :

முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா? இல்லையெனில் உடனே வாங்கி சாப்பிட பழகுங்கள். இதில் இல்லாத சத்துக்களே இல்லை. ஜீரணம் ஆவது முதல் பித்த நீர்ப்பை கல் வரை நீக்குகிறது. முள்ளங்கி இந்திய பயிர் அல்ல. மேற்காசியா கிழக்கு ஐரோப்பா சீனாவில் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. எகிப்தில் 4,500 ஆண்டுக்கு முன் திட உணவாக பயன்பட்டுள்ளது. முள்ளங்கியில் பல நிறங்கள் உள்ளன வெள்ளை முள்ளங்கியாகட்டும் சிவப்பு முள்ளங்கியாகட்டும் நார்ச்சத்தில் குறைவில்லை. இதை உணவாக சமைத்து சாப்பிடலாம். அப்படியே கேரட் போல சாப்பிடலாம் ஜூஸ் செய்து குடிக்கலாம். எதிலும் சத்துக்கள் உள்ளன. முள்ளங்கியில் கால்சியம், வைட்டமின் சி, சோடியம், பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி தழையை பலர் உணவாக சாப்பிடுவதில்லை. அதில்தான் சத்துக்கள் முள்ளங்கி தண்டை விட அதிகமாக உள்ளன. ஜூஸ், சூப்பில், முள்ளங்கி துண்டுகளுடன் இதை பயன்படுத்தி சாப்பிடலாம். நன்றாக சுவையாக இருக்கும்.


ஒரு நாளுக்கு ஒரு முட்டை :

கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டை விட, அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர். கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ். கேரட் பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது. ஒரு வேறுபாடு, காய்கறி உணவை விட, முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்து உடனே உடலில் ஏற்றுக்கொண்டு விடுகிறது. இதனால் பலன் கைமேல். ஒரு நாளுக்கு ஒரு முட்டை போதும். கொலஸ்ட்ரால் அளவு கூடி விடுமே என்று பயப்பட வேண்டாம். கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைடு அளவை கூட்டாமல் தான் முட்டை இந்த சத்தை தருகிறது. கேரட்டோட காய்கறியோட முட்டையையும் தான் சாப்பிடுங்களேன்.


கிரீன் டீ சாப்பிடறீங்களா? :

காலம் காலமாக காபி, டீ சாப்பிட்டு வந்தால் அதை மாற்றவே கூடாது தேவையும் இல்லை. ஆனால், உடல் பாதிப்பு என்று வந்து விட்டால், டாக்டர் சொல்படி தான் பின்பற்ற வேண்டும். அதுபோல லைப்ஸ்டைல் மாறியுள்ள இளைய தலைமுறையினருக்கு எவ்வளவோ சத்தில்லா பாக்கெட் உணவுகள் விற்பனையில் இருந்தாலும் சத்தான சில பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் கிரீன் டீ. இப்போது கிரீன் டீ பிளாக் டீ சாப்பிடுவது பேஷன் என்பது போய் சத்தான உணவாகி விட்டது. டாக்டர்களே இதை பரிந்துரைக்கின்றனர். மூளை சுறுசுறுப்பு, மறதி நோய் வராமல் இருப்பதற்கு இது மிக பயனுள்ளது. ஜப்பானியர் இதைத்தான் பல ஆண்டாக பயன்படுத்துகின்றனர். அதனால் தான், சுறுசுறுப்பாகவும், அல்சீமர் நோய் வராமலும் உள்ளனர் என்பது நிபுணர்கள் கருத்து. கிரீன் டீக்கு எங்கும் அலைய வேண்டாம் கடைகளில் விற்கிறது தரமான பிராண்ட் வாங்கி பயன்படுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டால் மூளை சூப்பர் தான்.


ஏதாவது ஒரு ஜூஸ்? :

தினமும் தண்ணீர், ஜூஸ், சூப் குடிப்பது நல்லது. முன்பெல்லாம் காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கப்போகும் வரை உணவு முறை சீராக இருக்கும். இப்போது அப்படியல்ல தலைகீழாய் மாறிவிட்டது சொல்வதற்கு பெரியவர்களும் இல்லை. இருந்தாலும் கேட்பதற்கு இளைய தலைமுறையினருக்கு விருப்பமில்லை. இதனால் பல நல்ல விஷயங்கள், மருத்துவ கலாசார விஷயங்களில் இளைய தலைமுறையினர் தவறாக செல்ல வாய்ப்பு அதிகம். சத்துக்களை தருவதில் முக்கிய பங்கு குடிதண்ணீர், பழங்களின் ஜூஸ், சூப்களில் உள்ளது. இந்த கோடையில் தர்பூசணி, ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பல பழங்களின் ஜூஸ் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இவற்றில் உள்ள “ஆன்டி ஆக்சிடென்ட்’ ரசாயன சத்து உடலுக்கு மிக முக்கியம். எந்த கோளாறும் அண்டாமல் செய்யும். ஒரு நாளைக்கு இவை எல்லாம் சேர்த்து 8 - 10 டம்ளர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.


என்ன ஊதுபத்தி…? :

ஊதுபத்தி ஏற்றி வைத்தால் வீடு முழுக்க மணம் கமழத்தான் செய்யும். ஆனால், அவை ரசாயனம் கலந்தது என்று பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. தாங்க முடிகிற அளவுக்கு உள்ள தரமான ஊதுபத்தி பிராண்டுகளை வாங்குங்கள் கண்டதை வாங்கினால் வாசனை இருக்கும் ஆனால், வியாதியும் வரும். பூக்கள் மூலிகைகள் மூலம் தயாரிக்கப்படும் ஊதுபத்திகள் ரசாயனம் கலக்காதவை. ஆனால், விலை அதிகம். கொசுவர்த்திக்கு பதில், கற்பூரம் ஏற்றிப்பாருங்கள். கொசுக்கள் போய் விடும். இப்படி மூலிகை வழியில் பல நன்மைகள் உள்ளன. இருந்தும் கவர்ச்சி பாக்கெட்கள் தான் நம்மை ஈர்க்கின்றன............

- செந்தில்

“ஙே…’ன்னு இருந்தால்…! : ரத்த சோகையாக இருக்கலாம், மருந்தில்லாம குணப்படுத்தலாம்

சிலரை பார்த்தால் “ஙே…’ன்னு இருப்பர். திடீரென சோர்வடைவர்.
தலை கிறுகிறுக்கும் என்னவென்றே தெரியாமல் திணறுவர். ஆனால், அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவு குறைவாக இருக்கும் என்பது தெரியாது.

இப்படி அளவு குறைவாக ரத்த சிவப்பு அணுக்கள் இருந்தால், அனீமியா குறைபாடு உள்ளது என்று பொருள். இதற்காக உடனே “டென்ஷன்’ ஆக வேண்டாம். டாக்டர் சொல்படி, சத்தான உணவுகளை சாப்பிட்டால் போதும் ஒரு ஆண்டில் ரத்த சோகையை விரட்டி விடலாம்!

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் பணி மிக முக்கியம். சிவப்பு அணுக்கள் சீராக இருந்தால் தான், எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை அனுப்ப முடியும் குறைபாடாக இருந்தால் பாதிப்பு தான் அதனால் தான் தலை கிறுகிறுப்பு, மயக்கம், சோர்வு எல்லாம். ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் ஒருவருக்கு 12 கிராம் இருக்க வேண்டும். அதில் குறைபாடு இருந்தால் பாதிப்பு ஆரம்பமாகும். எட்டுக்கு கீழ் இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு நோயும் ஒவ்வொரு காரணத்தால் ஏற்படுவது போல, ரத்த சோகையும் பல காரணங்களால் ஏற்படுகிறது. அதனால், 400 வகை ரத்த சோகைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக உள்ளது சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை தான். மற்றபடி, வேறு பெரிய நோயால் ஏற்படும் ரத்த சோகை, ரத்தத்தில் பாரசைட் காரணமாக ஏற்படும் ரத்தசோகை, கருத்தரித்த போது ரத்த சோகை என்று பல வகையில் உள்ளன.

உடல் உறுப்புகள் இயங்க அடிப்படையில் சில சத்துக்கள் தேவை. அவை உணவில் கிடைக்காவிட்டால், சத்து குறைபாடு அனீமியா ஏற்படுகிறது.

குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லாருக்கும் ரத்த சோகை வரும். ஆறு மாதம் முதல் 35 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு முழு அளவில் போஷாக்கு தேவை. அது கிடைக்காவிட்டால் ரத்த சோகை ஏற்படும் அதுபோல, பெண்களுக்கு அதிகமாக வரும்.

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு எடுத்த சர்வேயில், இந்தியாவில் 79 சதவீதம் பேருக்கு ரத்த சோகை பாதிப்பு உள்ளது பெரும்பாலோருக்கு தங்களுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதே தெரியாது’ என்று தெரியவந்துள்ளது.

இந்திய பெண்களில் 56 சதவீதம் பேருக்கு உள்ளது அதில், 58 சதவீத கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண்களை ஒப்பிடும் போது ஆண்களுக்கு மிகக்குறைவான பாதிப்பு தான். 24 சதவீதம் பேருக்கு தான் ஏற்படுகிறது.

சத்தான உணவு சாப்பிடாமல் உள்ளவர்களுக்கு தான் அதிக அளவில் வரும். குறிப்பிட்ட நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர், அறுவை கிகிச்சைக்கு பின் சிலர், வயதானவர்கள் போன்றவர்களுக்கு ரத்த சோகை வாய்ப்பு உண்டு. இதனால் தான் டாக்டர்கள் இவர்களை சத்துணவு சாப்பிடும் படி அறிவுறுத்துவர்.

காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற சத்தான உணவுகளை சாப்பிட்டால் தான் வைட்டமின், கனிம சத்துக்கள் கிடைக்கும். அப்படி இருந்தால் ரத்த சோகையே வராது.

எந்த ஒரு கோளாறு இருப்பதையும் வெளித்தோற்றத்தில் காட்டிக்கொடுத்து விடும். ஆனால், பலரும் அதை கண்டுகொள்வதே இல்லை. ரத்த சோகைக்கும் அப்படி பல அறிகுறிகள் உள்ளன. அடிக்கடி சோர்ந்து படுப்பர் எந்த வேலையும் செய்ய மனது வராது அப்படியே செய்ய முயற்சி செய்தாலும் உடல் உழைக்காது பசி எடுக்கும் ஆனால், சாப்பிடவும் பிடிக்காது. நடக்க பிடிக்கும் ஆனால், மூச்சு வாங்கும் நாடித்துடிப்பு படபடக்கும். யாருடனும் பேச பிடிக்கும் ஆனால், எரிச்சல் வரும். கண்களை சுற்றி கருவளையம் ஏற்படும் நகங்கள் வெண்மை படியும்.

வேறு அறிகுறிகள்…?
சிலர் திடீரென சாம்பல் சாப்பிடுவர் கேட்டால் விளக்கம் சொல்லத் தெரியாது. சிலர் ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு மெல்லுவர். கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார். அதுபோல, புண்ணாக்கு போன்ற கால்நடை தீவனங்கள் உட்பட மனிதர்களின் உணவல்லாத உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் இருக்கும். இவற்றை அடிக்கடி சாப்பிட்டால், அவர்களை டாக்டரிடம் காட்டுவதே நல்லது. அவர்களுக்கு கண்டிப்பாக ரத்தசோகை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

என்ன மருந்து சாப்பிட்டால், இந்த நோய் சரியாகும் என்று தான் டாக்டரிடம் கேட்கின்றனர் பலரும். ஆனால், என்ன உணவு சாப்பிட்டால் குணமாகும மீண்டும் வராது என்று யாராவது கேட்கின்றனரா? உண்மையில், மருந்து மட்டுமல்ல, உணவையும் டாக்டர் தான் சொல்லி பின்பற்ற வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், கொட்டைகள், சோயா போன்ற பட்டாணி வகைகள் மற்றும் காபி, டீயில் கூட சத்துக்கள் இல்லாமல் இல்லை.

எச்சரிக்கை என்ன?

இவற்றை எல்லாம் சாப்பிட்டாலும், அதை அதிகமாக சூட்டில் சமைத்தாலோ, பிரிஜ்ஜில் வைத்து மீண்டும் சமைத்தாலோ சத்து இருக்காது. இவற்றை மட்டும் ஒரு ஆண்டு பின்பற்றினால், ரத்த சோகை மட்டுமல்ல, பல உடல் கோளாறுகளுக்கும் இடமில்லை.

-செந்தில்

21 Jul 2008

மனைவிக்கவிதைகள்

காதலியைப்பற்றி எழுத ஆயிரக்கணக்கான கவிஞர்களும் அவர்கள் எழுதிய கோடிக்கணக்கான கவிதைகளும் இருக்கின்றன.

"வீட்டுல அதைப் பாடுங்க - பொண்டாட்டிய லவ் பண்ணுங்க"என்ற இளையராஜா நீங்கலாக, மனைவியைப்பற்றி கவிதை மழை பொழிந்த யாரும் என் கண்ணில் படவில்லை.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டிவிட்ட முதுகலை இல்லறத்தியல் பட்டதாரியான நானும் எழுதாவிட்டால் மெல்லத் தமிழினிச் சாகுமோ என்ற பயம் வந்துவிட்டது. மேலும்

"மேட்டர் இல்லாதவனுக்கு கவிதையே கைகண்ட மருந்து" என்ற என் கவிமடத் தலைவன் பொன்மொழியும் நினைவில் ஆட, எடுத்துவிட்டேன் கலப்பையை.

கவிப்பேரரசுவின் லிஸ்ட் கவிதைகளையும், பாரதியின் கண்ணன் / கண்ணம்மா சீரீஸ் கவிதைகளையும் என் முன்னோடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறேன்!

மனைவி ஒரு எலக்ட்ரானிக் விந்தை

மனைவி ஒரு டெலிவிஷன் இன்னும் யாரும் அதற்குரிமோட் கண்டுபிடிக்கவில்லை.

மனைவி ஒரு ரெப்ரிஜரேட்டர் பழைய சண்டை நினைவுகளையும் கெடாமல் காப்பவள் -தேவையான நேரத்தில் கொடுப்பவள்.

மனைவி ஒரு வாட்ச் காலையில் எழுப்ப, கண் போகும் பாதையை கவனிக்க, எல்லா அர்த்தத்திலேயும்.

மனைவி ஒரு குக்கர் வேலை செய்வதைவிட செய்ததைக்காட்ட விசில் அடிப்பதில்தான் ஆர்வம் அதிகம்!

மனைவி ஒரு வாஷிங்மெஷின் துவைப்பதில், பிழிவதில் வெளுத்துக்கட்டுவதில்!

மனைவி ஒரு தொழில்நுட்பப்புரட்சி

மனைவி ஒரு செல்போன் இன்கமிங்கில் வசதிகள் இருந்தாலும் அவுட் கோயிங் எப்போதும் செலவுதான்.

மனைவி ஒரு ரீசார்ஜ் கார்டு. பழிவாங்குதலை உடனே செய்யும் பூத் கார்டு கொஞ்சநாள் தாங்கும் ப்ரீபெய்டு சேர்த்து வைத்துத் தாக்கும் போஸ்ட் பெய்டு. விடாது ஆப்பு!

மனைவி ஒரு கணினி உதவி போல் உள்ளே வந்து எல்லா நேரத்தையும் ஆக்கிரமிக்கும் அதன் கீபோர்டில் கண்ட்ரோல் ஆல்ட் டெலீட் மட்டும் கிடையாது!

மனைவி ஒரு இ-மெயில் அட்டாச்மெண்டுகள் அதிகமானால் வேகம் குறையும்।

மனைவி ஒரு இலக்கியம்

மனைவி ஒரு சிறுகதை எப்போதுமே எதிர்பாராத முடிவுதான்।

மனைவி ஒரு நாவல் முரண் படும் பல பாத்திரங்களை முழுதாக உள்ளே கொண்டவள்

மனைவி ஒரு கவிதை படைத்தவனையும் சேர்த்து யாருக்கும் புரியாத கவிதை।

மனைவி ஒரு நாடகம் காட்சி அமைப்பில் இன்னும் சிலர் இருப்பினும் ஓரங்கம் மட்டுமே பேசும்।

இப்போதைக்கு இவ்வளவுதான்

முக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற "வாழ்த்து" வழங்கப்படும்.

முக்கியமோ முக்கியமான பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்।

பட்டைய கிளப்புனது பினாத்தல் சுரேஷ்

20 Jul 2008

பத்து பைசா கூட நன்கொடை இல்லாமல் அசத்தும் தனியார் பள்ளி.

பத்து பைசா கூட நன்கொடை இல்லாமல் அசத்தும் தனியார் பள்ளி.

26 கிரவுண்டு பரப்பில் பிரத்யேக கவனத்துடன் கல்வி
சென்னை நகரின் சந்து பொந்துகளில் தீப்பெட்டி சைசிற்கு இடம் கிடைத்தாலும், அதில் பள்ளி போர்டை தொங்கவிட்டு பணம் பார்க்கும் இந்தக் காலத்தில், "இப்படியும் ஒரு பள்ளி இருக்குமா' என நமது புருவங்களை உயர்த்த வைக்கிறது திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலைப் பள்ளி.

அரசு, நன்கொடை என எதையும் எதிர் பார்க்காமல், பரந்து விரிந்த இடத்தில் மாணவர் களைப் பண்படுத்தி, பக்குவப்படுத்தும் "குருகுலம்' ஸ்டைலில் முற்றிலும் இலவச கல்வி அளித்து வருவது இதன் சிறப்பம்சம்.

சென்னை வேப்பேரியில் 26 கிரவுண்டில் திருவொற்றீஸ்வரர் இலவச உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது.

பரந்த விளையாட்டு மைதானம், அழகான பூந்தோட்டம், அடர்ந்த மரங்களுக் கிடையே அருமையான நீச்சல் குளமும் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் கரந்திட்டைகுடியை சேர்ந்த ராமசாமி பிள்ளை, 1947ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி இந்தப் பள்ளியை தொடங்கினார்.

அப்போதைய அமைச்சர் அவினாசிலிங்க செட்டியார், பள்ளியை திறந்துவைத்தார்.

பள்ளிக்கு தனது பெயரை வைக்காமல், கடவுள் மீது வைத்திருந்த அதிக பற்றால், "ஸ்ரீ திருவொற்றீஸ்வரர்' என்ற பெயரை சூட்டினார்.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 110 மாணவர்கள் மட்டும் இருப்பது போல் பார்த்துக்கொண்டனர். மாணவர்கள் தாராளமாக விளையாடுவதற்கு வசதியாகவும், அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி பாடம் நடத்தவும் வசதியாக, அதிக மாணவர்களை சேர்ப்பதில்லை.

சென்னையில் முதல் முறையாக இலவச கல்வி தந்தது திருவொற்றீஸ்வரர் உயர்நிலை பள்ளிதான். பெற்றோரின் ஆண்டு வருமானம் 4 ஆயிரத்து 800 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது.

சிலசமயம் மாணவர்களின் குடும்ப சூழ் நிலையை கருதி விதிவிலக்கு தளர்த்தப்படுகிறது. "நமது சேவை தினம்' என ஏற்படுத்தி ஆசிரியர், மாணவர்களை அதில் ஈடுபடச் செய்து, சமுதாயச் சேவை குறித்து மாணவர் களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.

தினந்தோறும் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும், பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்து வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும். காலை பிரார்த்தனையில் தினந்தோறும் ஒரு திருக்குறள் சொல்லி, அதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.

வகுப்புகள் தொடங்கியதும், முதல் பத்து நிமிடம் நீதிபோதனை கதைகளுக்காக ஒதுக்கப் படுகிறது. பள்ளி முடிந்ததும் மாலையில் அவசியம் ஒரு மணி நேரம் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்து விளையாட வேண்டும்.

மாதிரி நீதிமன்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் மாணவர்களையே நீதிபதிகளாகவும், வக்கீல் களாகவும், போலீசாராகவும் நியமித்து சட்டத்தை மதிக்கிற பண்பையும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் மாணவர்களுக்கு உணர்த்துகின்றனர்.

மாணவர்கள் அனைவருக்கும் நீச்சல் பயிற்சி கற்றுக் கொடுக்கிறது. இதற்காகவே, அழகான நீச்சல் குளத்தை அமைத் துள்ளனர். அரசு பள்ளிகளில் 10 ஆயிரம், 15 ஆயிரம் என சம்பளம் வாங்கும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர், கற்பித்தலில் அவ்வளவாக ஈடுபாடு காட்டுவதில்லை. ஆனால், இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகவும் சொற்ப சம்பளத்தில், அதே நேரத்தில் முழு ஈடுபாட் டுடனும், திருப்தியுடனும் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றனர்.

அதிகபட்ச சம்பளம் நான்காயிரம் ரூபாய் தான். பள்ளி தொடங்கியது முதல் மாணவர்களின் தேர்ச்சி 80 முதல் 100 சதவீதம் வரை இருந்து வருகிறது. 1969-70ம் ஆண்டில் மூன்று மாணவர்கள் தேசியளவில் "மெரிட் ஸ்காலர்ஷிப்' பெற்றுள்ளனர்.

தற்போது ஆறாம் வகுப்பில் ஒரு மாணவர், ஏழாம் வகுப்பில் மூன்று பேர், எட்டாம் வகுப்பில் ஐந்து பேர், ஒன்பதாம் வகுப்பில் மூன்று பேர், பத்தாம் வகுப்பில் ஐந்து பேர் என மொத்தமே 17 மாணவர்கள் தான் உள்ளனர்.

நான்கு ஆசிரியர்கள் தான் பணிபுரிகின்றனர். பள்ளி நிர்வாகம், தகுதியான மாணவர்களுக்கு, மேல்படிப்புக்கு உதவி செய்து வருகிறது. இங்கு படித்த பழைய மாணவர்கள் பள்ளிக்கு உதவி செய்ய முன்வந்தாலும், நிர்வாகம் ஏற்பதில்லை.

பள்ளி நிறுவனர் ராமசாமி பிள்ளை, அந்தக் காலத்தில் சென்னையில் சிறந்த வணிகராக இருந்துள்ளார். அதில் கிடைத்த வருவாயில் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

அவற்றில் கிடைக்கும் வருவாயில் தான் பள்ளியை நிர்வகித்து வருகிறார், ராமசாமி பிள்ளையின் மகன் கண்ணன்.

நகரின் மையப்பகுதியான வேப்பேரியில் வேறு யாருக்காவது 26 கிரவுண்டு இடம் இருந்தால், என்றைக்கோ சுளையாக பல கோடிகளுக்கு விற்பனை செய்திருப்பர். ஆனால், தந்தையால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளியை மூடக்கூடாது என்பதிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச கல்வி அளிக்க வேண்டும் என்பதிலும் கண்ணன் உறுதியாக இருக்கிறார்.

இன்றைய எம்.பி.ஏ., பாடம் அன்றைக்கே நடத்திய அதிசயம்: பள்ளியின் பழைய மாணவர்கள் வங்கி அதிகாரி குணசேகரன், அரசு அதிகாரி சாலை சாம்பசிவம் மற்றும் கோபிகிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில்,

""கோவில், புராணங்களில் குருகுலத்தைப் பற்றி படித்ததுண்டு. அதை, அந்தப் பள்ளியில் படிக்கும் போது அனுபவத்தில் உணர முடிந்தது. ஒழுக்கம் தான் முன்னுரிமை; அதன் பிறகு தான் கல்வியும், விளையாட்டும். இன்றைக்கு எம்.பி.ஏ., பாடத்திட்டத்தில் உள்ள மேலாண்மைக் கல்வியை அன்றே எங்களுக்கு போதித்தனர்,'' என பெருமை பொங்க மலரும் நினைவுகளில் மூழ்கினர்.

பள்ளி நிறுவனரின் தாராளம் பள்ளி நிறுவனர் ராமசாமி பிள்ளை, தனது 16வது வயது வரை கரந்தையிலேயே படித்தார். பின்னர் சென்னை நகரை அடைந்து வணிகத்தில் ஈடுபட்டு, செல்வந்தராக உயர்ந்துள்ளார்.

சூளையில் மகப்பேறு விடுதி, ஓட்டேரியில் டி.பி., மருத்துவமனை, ஏழைகளுக்காக இலவச திருமண மண்டபம் ஆகியவற்றை கட்டி அரசிடம் ஒப்படைத்துள்ளார். பத்தாண்டுகளுக்கு மேலாக 100 மாணவர் களுக்கு குருகுலமாகவே நடத்தி, வடமொழியும், தமிழ் மொழியும் கற்றுக் கொடுத்துள்ளார்.

ஆனால், அக்கல்வி, மக்களின் பிற்கால வாழ்க்கைக்கு பயன் படாமையை உணர்ந்து, அரசின் உதவியின்றி திருவொற்றீஸ்வரர் இலவச உயர் நிலைப் பள்ளியை தொடங்கினார்.

16 Jul 2008

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க தாவூத் பாட்சா உதவித் தொகை

ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவித் தொகை

தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை. தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன் பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.

உதவித் தொகை பெற விரும்புவோர்,
தலைவர் மற்றும் செயலர்,
ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி,
பாபநாசம்-614 205,
தஞ்சை மாவட்டம்
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
(தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267).

13 Jul 2008

பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் அதிகமா?

பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் அதிகமா?

புகார் செய்ய தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை, ஜூலை 12: ‘‘பொறியியல் கல்லூரிகளில் சேர அதிக கட்டணம் வசூலித்தால், அரசு அங்கீகரித்துள்ள அலுவலர்களிடம் புகார் செய்யலாம்’’ என்று அரசு அறிவித்துள்ளது.

இதற்கான தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.7,550 கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் ரூ.8,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் குழு தரச்சான்று பெறாத பாடப் பிரிவுகளுக்கு கல்விக் கட்டணம் ரூ.32 ஆயிரத்து 500, தரச்சான்று பெற்ற பாடப் பிரிவுகளுக்கு ரூ.40 ஆயிரம் கல்விக் கட்டணம் நிர்ணயித்துள்ளது. அரசு ஒதுக்கீடு அல்லாத இடங்களில் சேரும் மாணவர்களுக்கு ரூ.62 ஆயிரத்து 500 கட்டணம் நிர்ணயித்துள்ளது. நிர்ணயித்த கட்டணத்தைவிட சுயநிதி கல்லூரிகள் அதிக கட்டணம் வசூல் செய்தால், அரசு அங்கீகரித்துள்ள அலுவலர்களிடம் பெற்றோர், மாணவர்கள் உரிய ஆதாரத்துடன் புகார் செய்யலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட எல்லா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உள்ள பாலிடெக்னிக், தேர்வுகள் பிரிவுகளின் கூடுதல் இயக்குனர்களிடமும் புகார் செய்யலாம்.

044 2235 1018 என்ற தொலைபேசி எண், 044 2220 1514 என்ற பேக்ஸ் மூலமாகவும் புகார் செய்யலாம்.

10 Jul 2008

உங்களுக்கு என்ன நோய் ?

உங்களுக்கு என்ன நோய்?

கண்கள் உப்பியிருந்தால்...

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.


கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ் : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்

என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ் : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.

என்ன வியாதி : நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ் : குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.


சருமம்தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ் : அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது

என்ன வியாதி : உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ் : ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி : கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ் : அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி : சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ் : வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்

என்ன வியாதி : நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ் : பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்

என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்து விடும்.

டிப்ஸ் : தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள் சிவந்த உள்ளங்கை

என்ன வியாதி : கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ் : கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்

என்ன வியாதி : இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்! ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ் : இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி

என்ன வியாதி : ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ் : உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்

என்ன வியாதி : சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ் : உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.


வாய் ஈறுகளில் இரத்தம் வடிதல்.

என்ன வியாதி : பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ் : தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்

என்ன வியாதி : வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ் : ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது

என்ன வியாதி : உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ் : நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

பா. இந்திரா பிரியதர்ஷிணி
தகவல் : குமுதம் சிநேகிதி

7 Jul 2008

கைப்பேசி பயன்படுத்துபவர்கள் கண்டிப்பா பாருங்க


அன்று இரவு 10மணி இருக்கும் நான் சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா என்ற பகுதிக்கு சென்றுவிட்டு எனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். துரதிஸ்டவசமக எனது கைபேசியை பேருந்தில் தவற விட்டுவிட்டேன். அதை எனது வீட்டில் வந்தவுடன் தான் நான் தவறவிட்டது உனரநேரிட்டது.மிகவும் அதிர்ச்சிக்குள்ளானேன். என்ன செய்வது எனது நம்பருக்கு அழைத்து பார்த்தேன் எனது கைபேசி ஆஃப் செய்யபட்டு இருந்தது. மறுநாள்தான எனக்கு இந்த ஒற்றனின் குறுஞ்செய்தி வந்தது.
என்ன பார்க்குறீங்க,
நான் ஏற்கனவே எனது கைப்பேசியில் ஒற்றன் மென்பொருளை நிறுவிவைத்திருந்தது எனக்கு எனது கைபேசியை திரும்பபெற வழிவகுத்தது. அதுவும் இலவச மென்பொருள் ஒரு $400 வெள்ளி மதிப்புடைய கைப்பேசியை திரும்பபெற்று தந்தது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தமென்பொருளை நிறுவியவுடன் சிலவற்றை setting செய்ய வேண்டும். அதாவது safety number உங்களுடைய அண்னன், தம்பி, ஏன் நன்பர்களுடைய கைபேசி எண்னை அந்த செட்டிங்கில் செட் செய்துவிடவேன்டியதான. உங்கள் கைபேசியை யார் எடுத்தார்களோ, அவர்களுடைய சிம்கார்டை உங்களுடைய கைபேசியில் மாற்றும் போது உங்களுடைய safety number உங்கள் (அன்ணனுக்கோ, தம்பிக்கோ, நன்பருக்கோ) இந்த ஒற்றன் குறுஞ்செய்தி அனுப்பிவிடுவான.
திருடனுடைய கைபேசி நம்பர் உங்களுக்கு கிடைத்தவுடன் அப்புறம் என்ன நான் சொல்ல வேண்டாம் அதுக்கு அப்புறம் நீங்க பார்த்துக்குவீங்க!
என்னா ஒன்று அந்த மென்பொருளை உங்கள் போஃன் மெமரியில் ஏற்றுங்கள் மெமரி கார்டில் ஏற்றினால் திருடியவர் உங்கள் மெமரி கார்டை கழற்றிவிட்டு அவருடைய சிம்கார்டை போட்டால் அவர் மாட்ட மாட்டார். தப்பித்து விடுவார்.
எனது நன்பருக்கு இப்படிதான் குறுஞ்செய்தி அனுப்பினான் இந்த ஒற்றன். rsankar's mobile stolen. don't delete this message. நான் ஒரு private call பன்னி திருடனுக்கு எல்லாவிவரமும் சொன்னேன். அதே லிட்டில் இந்தியாவிலேயே சென்று பெற்றுகொண்டேன.
சிங்கப்பூரில் அனைத்து சிம்கார்டுகளும் பதிவுசெய்யபட்ட பிறகே பயன் படுத்தமுடியும். வாழ்க ஒற்றன் மென்பொருள். நன்றி ஞானசேகரன் அவர்களுக்கு.
இங்க சொடுக்கி தகவலிரக்கம் ஒற்றன்
நன்றி : கொள்ளிடம் சங்கர்

3 Jul 2008

தலைவலியை நிரந்தரமாக போக்க வேண்டுமா ?

தலைவலி வந்துவிட்டால் போதும், உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது.
அதுவும் "பெனடோல்' பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் "பெய்ன்கில்லர்' எல்லாம், உடலுக்கு கேடானது.
40 வயதைத் தாண்டினால், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதிலும், "மைக்ரேன்' என்று சொல்லப் படும், ஒற்றைத் தலைவலி வந்து விட்டால் போதும், உயிரே போகும் அளவுக்கு வலி இருக்கும்.
அமெரிக்காவில், தலைவலி ஆராய்ச்சிக்காகவே, "தேசிய தலைவலி ஆராய்ச்சி பவுண் டேஷன்' என்ற அமைப்பு உள்ளது. தலைவலியைப் போக்க, பல ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவுகளை வைத்து, பத்து எளிய வழிகளை இவ்வமைப்பு தொகுத்து வெளியிட்டுள்ளது.
அவை என்ன தெரியுமா?
* அமெரிக்காவில், "பீவர் பியூ' என்ற மூலிகை கிடைக்கிறது. ஒரு சில நாள் தொடர்ந்து அதை சாப்பிட்டு வந்தால், தலைவலி திரும்பியே பார்க்காது. நம்மிடம் சுக்கு முதல் ஏகப்பட்ட மூலிகைகள் உள்ளன. அன்றாடம், உணவில் இவற்றை நாம் சேர்த்துக் கொண்டாலே போதும். தலைவலி மட்டுமில்லை, எந்த கோளாறும் அண்டாது.
*"பெப்பர்மென்ட் ஆயில்' என்று சொல்லப்படும், வாசனைத் தைலத்தை தொடர்ந்து தடவி வந்தால், மூளையில் உள்ள நரம்புகளை முடுக்கி விடும். மூளையில் உள்ள குறிப்பிட்ட நரம்புதான் வலி சிக்கலைதத் தடுக்கும். அதை முடுக்கி விடுவது தான் இந்த வாசனைத் தைலத்தின் வேலை.
* சில விட்டமின்கள், உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல், மூளை நரம்புகளை முடுக்கி, முழு அளவில் இயங்கச் செய்கின்றன. அதனால், விட்டமின் சத்துகள் தரும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்ற உணவு வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலும், பி 12 போன்ற விட்டமின்கள் அதிக பலன் தரும்.
* விட்டமின்கள் போல, கனிம சத்துக்கள் மிக முக்கியம். அதுவும், தலைவலி போன்ற வலிகள் வராமல் தடுக்கின்றன.
* தலைவலிக்கு முக்கிய காரணம், சோர்வு தான். போதுமான தூக்கமின்மையால் சோர்வு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் ஒருவருக்கு நாள் தோறும் ஏழு மணி நேர தூக்கம் தேவை. அது கிடைத்து விட்டால், தலைவலி வரவே வராது.
* மீன் உணவு சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களை கேட்டுப் பாருங்கள், "தலைவலியா... அப்படீன்னா?' என்று கேட்பர். ஆம், மீன் உணவில் உள்ள, "ஒமேகா 3' எண்ணெய், உடலின் சுகாதாரத்துக்கு பல அரிய பலன்களைத் தருகிறது.
* செயற்கை இனிப்புகள் சேர்ந்த உணவுப் பண்டங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி செய்தாலே, தலைவலி வராது. செயற்கை இனிப்புகள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து விடுகிறது. அதனால், தலைவலி வருகிறது.
* அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தப் பாதிப்பும் இல்லாதது. லேசாக எறும்பு கடிப்பது போல தான் இருக்கும். தலைவலி இருக்கும் இடமே தெரியாது.
* தினமும் யோகா பயிற்சி செய்து வந்தால், "மைக்ரேன்' தலைவலி கூட விழுந்தடித்துக்கொண்டு ஓடி விடும்.
* கடும் வேலை இருந்தாலும், அதை செய்துவிட்டு, சில நிமிடங்கள் கால் ஆற திறந்த வெளியில் நடக்கவும். ஏ.சி.,யை விட்டு வெளியில் வந்து இயற்கை காற்றை சுவாசியுங்கள். தலைவலி வந்த வழியே சென்று விடும்.
இப்போது புரிகிறதா... இனி மாத்திரை போடாதீர்கள், இந்த வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றுங்கள், தலைவலி, அடுத்த சில மாதங்கள் நிரந்தரமாக போயே போய் விடும்.
தகவல் : Chandravathanaa